தோட்டத்தில் சந்திப்பு.. கோட்டையில் கதிகலங்கும் பெருந்தலைகள்
சென்னை: சென்னை தோட்டத்தில் திடீரென சர்வமும் சாதிக்கக் கூடிய மூத்த பத்திரிகையாளர் தலைமையை சந்தித்துவிட்டுப் போயிருப்பதால் கோட்டையில் ஆளும் நால்வர் அணி உட்பட பெருந்தலைகள் கதிகலங்கிப் போயிருக்கின்றன.
சென்னை கோட்டையைப் பொறுத்தவரையில் என்னதான் திடீர்னு அதிர்ஷ்டம் வலியக் கூப்பிட்டாலும் அது நிலைக்காது என்று தெரிந்தே சீட்டில் அமர்வதுதான் நடப்பு ஆட்சியின் வாடிக்கை. இப்படி 11 முறை உட்கார்ந்து எழுந்து போய்விட்டனர் ஆவலுடன் வந்த தலைகள்.
பெருந் தலைகள் உட்கார வைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவர்களை எழுப்பி கீழே தள்ளுவதற்கு ஒருசிலரது சந்திப்புகள்தான் காரணம் என்று சொல்லப்படுவதும் உண்டு. இதற்கு முன்பு மதுரைநதி செல்வம் வீழ்ந்த கதையே போதும் உதாரணத்துக்கு.
முதல்நாள் தோட்டத்துக்கு போனார் வீணையம்மா. 2-வது நாள் சீட்டு கிழிந்தது மதுரைநதி செல்வத்துக்கு.. மீண்டும் போய் நன்றியும் சொல்லிவிட்டு வந்தார் வீணையம்மா. இந்நிலையில்தான் கடந்த சில வாரங்களாகவே பெருந்தலைகளில் 2-ம் இடத்துக்கு நேரம் சரியில்லை என்றே சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் எதுவும் நடந்தபாடில்லை.
நேற்று காலையில் கூட வாரமிருமுறை ஊடகம் ஒன்று 2வது இடத்தின் சீட்டு கிழியுது என்று கொளுத்திப் போட்டிருந்தது. இந்நிலையில் திடீரென சர்வ வல்லமை படைத்த அந்த மூத்த பத்திரிகையாளர் தோட்டத்தில் சந்திப்பை நிகழ்த்தியிருக்கிறார்.
இதனாலேயே 2-ம் இடத்துக்கு ஏழரைசனி உட்கார்ந்துவிட்டது என்ற தகவல் ஊரெங்கும் பரவிக் கிடக்கிறது.. கோட்டை பெருந்தலைகளோ அவரா? இவரா? என செய்தி சேனல்களை விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications