ஆங்கிலப் பள்ளிகளை நடத்தும் ஸ்டாலின் மகள், மருமகள்.. ஜெ.
சென்னை: தமிழ் வழிக் கல்வி பற்றிப் பேசுகிறார் மு.க.ஸ்டாலின். ஆனால் அவரது மகளும், மருமகளும் ஆங்கில வழிக் கல்விச்சாலைகளைத்தான் நடத்தி வருகிறார்கள். அங்கு கூட தமிழ் வழிக் கல்விக்கு இடமில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
நேற்று சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவி்க்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசுகையில், இப்படிக் குற்றம் சாட்டினார் ஜெயலலிதா.
தனது பேச்சின்போது திமுக தலைவர் கருணாநிதி, அவரது குடும்பத்தினர் குறித்து அதிக அளவில் விமர்சனம் செய்திருந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் பேச்சிலிருந்து...

பெற்றோர்களின் ஆங்கில மொழி ஆர்வம்
தங்களுடைய குழந்தைகள் ஆங்கில மொழியை கற்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடையே இருப்பதால், கூடுதல் செலவையும் பொருட்படுத்தாமல் ஆங்கில வழி கல்வியினை போதிக்கும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே மேலோங்கி நிற்கிறது.

ஏழை எளிய பெற்றோர்களின் சுமையைக் குறைக்க
ஏழை, எளிய பெற்றோர்களின் நிதிச் சுமையினை குறைக்கும் வகையிலும்; ஆங்கில மொழியில் கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணமும், அதற்குரிய ஆற்றலும் உள்ள குழந்தைகளுக்கு அதற்கான வாய்ப்பை அரசு பள்ளிகளிலேயே ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கத்துடன், கடந்த ஆண்டு சில பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவு தொடங்கப்பட்டது.

ஆங்கிலப் பேச்சாற்றல் பயிற்சி
இந்த ஆண்டு 6,594 பள்ளிகளில் ஒன்றாம் மற்றும் 6 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர ஆங்கில பேச்சாற்றல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

முதலில் உங்களது பிள்ளைகளை படிக்க வைத்தீர்களா..?
இந்த அரசின் நடவடிக்கைமீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் இதை குறை கூறி வருகின்றனர். ஆனால், அவ்வாறு குறை கூறுவோர் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தார்களா?

ஸ்டாலின் தனது பிள்ளைகளை தமிழ் படிக்க வைத்தாரா...?
திமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தனது பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தாரா? இல்லையே!

அதுவும் இல்லை...
அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் வைத்திருக்கும் பள்ளிகளிலாவது தமிழ் மொழி வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பள்ளிகளின் பெயர்கள் கூட ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன.

இங்கு என்ன தமிழா போதிக்கப்படுகிறது...?
துர்காவதி கல்வி அறக்கட்டளை என்ற அமைப்பு, சென்னை-29, மேத்தா நகர், ராஜேஸ்வரி தெருவில் சன்ஷைன் அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி என்ற பள்ளியை இயக்கி வருகிறது. இந்தப் பள்ளியின் இயக்குநர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன். ஸ்டாலினின் மருமகள் திருமதி கிருத்திகா உதயநிதியும் இந்த அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கிறார். இங்கு என்ன தமிழ்வழிக் கல்வி போதிக்கப்படுகிறதா?

மருமகளின் 2 பள்ளிகள்
சென்னை, வேளச்சேரி, டாக்டர் சீதாபதி நகர், ராணி தெருவில், சன்ஷைன் மாண்டிசோரி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியும், மடிப்பாக்கத்தில் சன்சைன் சென்னை சீனியர் செகன்டரி பள்ளி இயங்கி வருகின்றன. இந்த இரண்டு பள்ளிகளுக்கும் இயக்குநராக இருப்பவர், மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை சபரீசன்.

தமிழ் கிடையாது.. ஆனால் இந்தி உண்டு
இங்கு ஆங்கில வழிக் கல்வி மாத்திரம் இல்லை. இந்தியும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. மழலையர் வகுப்பிற்கான ஆண்டுக் கட்டணம் 9,000 ரூபாய். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கட்டணம் 15,400 ரூபாய் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications