ஒரு வீட கூட விடாமல் ஆதரவு திரட்டுங்கள்.. ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவினர் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி 40 தொகுதிகளிலும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதா லோக்சபா தேர்தலை முன்னிட்டு தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடல்:

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான,என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே!

Jaya urges ADMK cadres for door to door canvass in LS election

இந்த ஏப்ரல் திங்கள் 24-ஆம் தேதியன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு உங்கள் அன்புச் சகோதரியாகிய நான், கடந்த மார்ச் மாதம் முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கூறி வருகின்ற கருத்துகள் சிலவற்றை இந்த மடல் வழியாக மீண்டும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கழக நிறுவனத் தலைவர், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழர்களையும், தமிழ் மண்ணையும் தன் உயிரும், உடலுமாக மதித்தார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் அரசியல் வாழ்வை முன்னோடியாகக் கொண்டு வாழும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நானும், உங்களையே எனது சொந்தங்களாக நினைக்கிறேன். நீங்கள் காட்டும் அன்பைவிட உயர்வானது எனக்கு எதுவுமில்லை. உங்கள் உயர்வுக்காகவும், தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் உழைப்பது தான் என் வாழ்வின் லட்சியங்களாகக் கொண்டு வாழ்ந்து வருகிறேன். 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்னும் இந்த மாபெரும் பேரியக்கத்தை கட்டிக் காக்க, என்னையே நான் அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறேன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய காலத்திலும், அவருடைய காலத்திற்குப் பிறகும், இந்த இயக்கம் எண்ணற்ற சவால்களை சந்தித்திருக்கிறது. புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பிறகு அவருடைய புகழுக்கு பங்கம் ஏற்படாமல் இந்த இயக்கத்தை நான் கட்டிக் காத்து வளர்த்து வருவதோடு, இதனை வெற்றிச் சிகரங்களுக்கு அழைத்துச் செல்கிறேன் என்பதை பொறுக்காமல், எனக்கு எதிராகவும், கழகத்தை வீழ்த்தவும் நடைபெற்ற முயற்சிகளை எல்லாம் உங்களின் துணையோடு வெற்றிகரமாக முறியடித்து வந்துள்ளேன். என்னுடைய அரசியல் பயணத்தில் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு உறுதுணையாக பணியாற்றுகிறீர்கள் என்பதை நான் மகிழ்ச்சியோடு பார்க்கிறேன்.

நம்முடைய இயக்கத்தைக் காப்பதற்காகவும், இயக்கம் வெற்றி பெறுவதற்காகவும் எப்பொழுதும் உழைத்து வரும் நாம், தேர்தல் காலங்களில் கூடுதலான தியாகங்களையும், முயற்சிகளையும் மேற்கொள்வது அவசியமாகிறது. கழக உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து, வெற்றி என்ற ஒரே லட்சியத்தை அனைவரும் பகிர்ந்து, கழகத்தின் வெற்றி நம்முடைய வெற்றி என்ற உணர்வில் பணியாற்றுவது மிக மிக இன்றியமையாதது என்பதை உங்கள் ஒவ்வொருவருக்கும் மீண்டும் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் நான் குறிப்பிடுவதைப் போல, இப்பொழுது நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் நம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்ற மிக முக்கியமான தேர்தல். காரணம், கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைமையிலும், அதில் 9 ஆண்டுகள் திமுக-வின் ஆதரவுடனும் நடைபெற்று வந்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் பல சீரழிவுகளை நம் நாட்டில் ஏற்படுத்திவிட்டன.

எடுத்துக்காட்டாக, திமுக அமைச்சர் முன்னின்று நடத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் நாட்டிற்கு இழப்பு; நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் காரணமாக 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி பொய் இழப்பு; அரசுக்கு ஹெலிகாப்டர்கள் மற்றும் ராணுவத்திற்கு தளவாடங்கள் வாங்கியதில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று மக்கள் பணம் எத்தனை, எத்தனை வழிகளில் எல்லாம் சில தனி நபர்களின் சொத்துக்களாக மாறின என்பதை அடுக்கிக் கொண்டே போகலாம். இவை அனைத்திற்கும் காரணம் காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசின் மக்கள் விரோதச் செயல்கள் தான்.

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் இருந்து, தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக சுயலாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டது வரை, எந்தெந்த வகைகளில் முடியுமோ அந்தந்த வகைகளில் எல்லாம் திமுக-வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்தியத் திருநாட்டின் பொதுச் சொத்தை மத்திய ஆட்சியில் அமர்ந்துகொண்டு சூறையாடினார்கள் என்பதை பல முறை உங்களுக்கு நான் தகுந்த புள்ளி விவரங்களோடும், உரிய ஆதாரங்களோடும் எடுத்துக் கூறி இருக்கிறேன். 10 ஆண்டுகால சீரழிவை இப்பொழுது சரிசெய்யாவிட்டால் இந்திய நாடு இன்னும் பல தலைமுறைகளுக்கு மீண்டு எழ முடியாத நிலைக்கு தள்ளப்படும். எனவே தான், இந்தத் தேர்தலை இந்திய நாட்டின் வரலாற்றில் திருப்பு முனை ஏற்படுத்தப் போகின்ற தேர்தல் என நான் கூறி வருகிறேன்.

தீய சக்தி கருணாநிதி, மத்தியில் காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்துக் கொண்டும், தமிழ் நாட்டில் காங்கிரசின் உதவியோடும் மைனாரிட்டி ஆட்சி நடத்திய ஐந்தாண்டு காலமும் அவரது குடும்பத்தினரும், ஏனைய திமுக-வினரும் தமிழர்களுக்கு செய்த கொடுமைகளும், துரோகங்களும் ஏராளம்! ஏராளம்!

'யாருடைய சொத்துக்கும் உத்தரவாதமில்லை' என்ற காட்டாட்சியை திமுக நடத்தியது. நில அபகரிப்பு; இயற்கை வளங்களை சூறையாடுதல்; ஊழல் மலிந்த ஆட்சிமுறை; அதிகார துஷ்பிரயோகம்; நிர்வாகச் சீர்கேடு; பொதுத் துறை நிறுவனங்கள் எல்லாம் கடனில் தள்ளிய பரிதாபம் என்று தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் சீர்குலைத்த ஆட்சியாக கருணாநிதியின் திமுக ஆட்சி இருந்தது.

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் அளித்த வரலாறு காணாத தேர்தல் வெற்றியின் மூலம், உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தமிழ் நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றேன். நிர்வாகத்தில் நான் மேற்கொண்ட பெரு முயற்சிகளால் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்தது. தமிழகத்தில் அராஜகம் அழிந்து, சட்டத்தின் ஆட்சி அச்சமின்றி நடைபெறும் உயர்ந்த நிலையை மக்கள் அனைவரும் பாராட்டி வரவேற்கின்றனர். தமிழக அரசின் நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் மக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். அதை நான் செல்லும் இடமெல்லாம் பார்க்கிறேன். அதைப் போலவே, மத்தியிலும் காங்கிரஸ் மற்றும் திமுக-வால் இந்த நாட்டிற்கு ஏற்படுத்தப்பட்ட சீர்கேடுகளை களைந்திட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய ஆட்சிப் பொறுப்பில் அமர்வது அவசியமாகிறது.

தமிழகத்தின் நலன்களை காப்பாற்ற வேண்டும் என்றால், அதற்கு தமிழர்களின் நலன்களுக்காக அச்சமின்றி குரல் எழுப்பி போராடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய ஆட்சிப் பொறுப்பில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசால் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் இருந்து தமிழர்களை மீட்டெடுத்து, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியின் மறு எழுச்சிக்கு வழி காண வேண்டும் என்றால், இந்தத் தேர்தலில் நாம் 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும். அதன் மூலம் மத்திய ஆட்சியில் முக்கிய பங்கினை வகிக்க வேண்டும்.

இந்த உண்மைகளை, என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் தமிழக வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு வீடாகச் சென்று எடுத்துச் சொல்லி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தந்த வெற்றிச் சின்னமாம் 'இரட்டை இலை' சின்னத்திற்கு வாக்கு கேட்க வேண்டும்.

'ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்காகத் தானே தவிர, சில தனி மனிதர்களின் உயர்வுக்காக இல்லை' என்பதை இந்த நாட்டுக்கு எடுத்துக்காட்டிய நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கனவை நனவாக்க, வருகின்ற 24.4.2014 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் நாம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும் என்பது கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் ஒவ்வொருவரின் லட்சியமாக இருக்கட்டும். அதை நோக்கியே உங்களுடைய அனைத்து முயற்சிகளும் அமைந்திடட்டும் என்று மீண்டும் ஒரு முறை உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+