Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. மரண விசாரணை தொடங்குகிறது.. தமிழகத்தை புரட்டிப் போட்ட மரணம்- ஒரு பிளாஷ்பேக்

தமிழகத்தை கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டு சென்ற ஜெயலலிதா மரணம் இன்று விசாரணை நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் மரணமடைந்தது வரை முக்கிய நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.

ஜெயலலிதா மரண விவகாரத்தை விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு நியமித்தது. அந்த கமிஷன் இன்று விசாரணையை நடத்துகிறது.

இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நடந்த முக்கிய நிகழ்வுகள் இதோ...

செப்.22, 2014- ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது காய்ச்சல் இல்லை என்றும் அவர் வழக்கமான உணவையே உட்கொள்கிறார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

செப்.24- ஜெயலலிதாவை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக பரவிய தகவல்களை அதிமுக நிர்வாகிகள் மறுத்தனர். மருத்துவமனை நிர்வாகமும் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவரது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவித்திருந்தது.

செப். 30- ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து. மேலும் ஜெயலலிதா குறித்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவருக்கு சிகிச்சை அளிப்பது போன்ற புகைப்படத்தில் ஊடகங்களுக்கு வெளியிடுங்கள் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டார்.

அக்.1- ஜெயலலிதா உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் லண்டனில் இருந்து ரிச்சர்டு ஜான் பீல் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்து அறிக்கை விட்டிருந்தனர். மருத்துவமனையில் உள்ள ஜெயலலிதா வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்துள்ளதாகவும் நிர்வாகிகள் கூறினர்.

அக்.2- ஜெயலலிதா சிகிச்சை பெறும் புகைப்படத்தை வெளியிட அதிமுக மறுத்துவிட்டது. மேலும் தொடர்ந்து அவரது நிலை குறித்து அறிக்கை வெளியிடும்போது புகைப்படம் எதற்கு என்றும் கேள்வி எழுப்பியது.

அக்.4- ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாகவும் அவருக்கு நோய் தொற்று எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து உண்மை நிலையை வெளிப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.

அக்.6- எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த 3 நபர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு ஜெயலலிதாவின் உடல்நிலையை ஆய்வு செய்தது. அதேவேளையில் விளம்பரத்துக்காக டிராபிக் ராமசாமி மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறிய சென்னை உயர்நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.

அக்.7- காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார்.

அக்.8- மருத்துமனை மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மருத்துவக் குழுவினரால் ஜெயலலிதா தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர் பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தது. ஜெயலலிதாவை பார்க்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

அக்.9- ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ளதால் முதல்வர் பொறுப்பு அல்லது புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான திமுக கோரிக்கை விடுத்தது.

அக்.10- ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகள் பரவுவதைத் தடுக்க அதிமுக மை சிஎம் இஸ் ஃபைன் என்ற டுவிட்டர் கணக்கை உருவாக்கியது.

அக்.11- ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பியவர்கள் இருவரை கைது செய்த போலீஸார், 43 வழக்குகளை பதிவு செய்தது. ஜெயலலிதாவால் தனது ஆட்சி பணியை தொடங்க இயலாததால் அவரிடம் இருந்த துறைகளை நிதித்துறை அமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒதுக்கினார்.

அக்.12- பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.

அக்.13- ஜெயலலிதாவின் உடல்நிலையை மீண்டும் ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழுவும் லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

அக்.18- ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து 8 நாள்களாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

அக்.19- ஜெயலலிதாவிடம் இருந்த துறைகளை ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்தவுடன் முதல் முறையாக சென்னையில் அமைச்சரவையை கூட்டினார்.

அக்.21- 11 நாள்களுக்கு பிறகு மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், மற்றவர்களுடன் பேசுவதாகவும் குறிப்பிட்டிருந்தது.

அக்.27- 6 நாள்களுக்கு பிறகு ஜெயலலிதா விரும்பும் போது வீட்டுக்கு செல்லலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அக்.29- வலது கையில் டிரக்கியாஸ்டோமி சிகிச்சைக்கான டியூப்கள் இருந்ததால் தேர்தல் குறித்த ஆவணங்களில் ஜெயலலிதாவின் இடது கை ரேகை பெறப்பட்டது.

நவ.4- ஜெயலலிதா தீவிர சிகிச்சை அறையில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டதாக அதிமுக மூத்த நிர்வாகி தெரிவித்தார். ஜெயலலிதாவின் நுரையீரல் தொற்று கட்டுக்குள் இருப்பதாகவும், அவர் முழுவதும் குணமடைந்துவிட்டதாகவும் தன்னை சுற்றி நடப்பதை நன்கு அறிந்துள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

நவ.7- இன்னும் 15 நாள்களில் ஜெயலலிதா மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று அதிமுகவினர் தெரிவித்தனர்.

நவ.12- ஜெயலலிதாவுக்கு உள்ள தொற்றுகள் முற்றிலும் கட்டுக்குள் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

நவ.13- மருத்துவமனையிலிருந்தபடியே ஜெயலலிதா ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்களின் பிரார்த்தனைகளால் தான் மறுபிறவி எடுத்ததாகவும், நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

நவ.18- ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்றும் புதிய நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார் என்றும், அவருக்கு 15 நிமிடங்களுக்கு ஒரு முறை வென்டிலேட்டர் கருவி பொருத்தப்படுவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.

நவ.19- ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டதாக மூத்த அதிமுக நிர்வாகி தெரிவித்தார்.

நவ.25- ஜெயலலிதா இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். அவருக்கு எந்தவித சிக்கல்களும் இல்லை என மீண்டும் பிரதாப் ரெட்டி பேட்டி அளித்தார்.

டிச.4- ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

டிச.5- ஜெயலலிதாவின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக லண்டன் மருத்துவர் தெரிவித்தார். இதனிடையே ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதாக மாலை 5 மணியளவில் பரவிய செய்தியை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் மரணமடைந்துவிட்டதாக நள்ளிரவு 12.15 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

டிச.6- மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் சமாதிக்கு அருகில் ஜெயலலிதா உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 7 2017- ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஒரு கமிஷன் ஏற்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

செப்.25- ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமனம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.

அக்.25- நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் இன்று விசாரணையை தொடங்குகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+