ரூ.717 கோடியில் திருப்பூர், ஈரோடு, கோவை கூட்டுக் குடிநீர் திட்டம்: ஜெ. உத்தரவு

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
திருப்பூர் மாவட்டம்
"திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில், மூலனூர், தாராபுரம், குண்டடம் மற்றும் காங்கேயம் மற்றும் ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,262 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்காக கொடுமுடிக்கு அருகிலுள்ள காவிரி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு 91 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கும், இத்திட்டத்திற்காக வருடாந்திர பராமரிப்பு செலவாக 3 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இப்பகுதிகளில் வாழும் 2 லட்சத்து 80 ஆயிரம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து கிடைத்திட வழிவகை ஏற்படும்.
தஞ்சையில் குடிநீர்
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி, பெருமகளூர் மற்றும் அதிராமபட்டினம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 1,153 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு 495 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கும், இத்திட்டத்திற்காக வருடாந்திர பராமரிப்பு செலவாக 9 கோடியே 19 லட்சம் ரூபாய் வழங்குவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இப்பகுதிகளில் வாழும் 5 லட்சத்து 76 ஆயிரம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து கிடைத்திட வழிவகை ஏற்படும்.
கோவை, ஈரோடு
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர், பூலுவபட்டி, தென்கரை, வேடப்பட்டி, தாளியூர், ஆலந்துறை, பேரூர் ஆகிய 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தைச் சார்ந்த 134 ஊரக குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வசதி செய்துக் கொடுப்பதற்காக பவானி ஆற்றின் நீரை ஆதாரமாகக் கொண்டு 130 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கும், இத்திட்டத்திற்காக வருடாந்திர பராமரிப்பு செலவாக 3 கோடியே 91 லட்சம் ரூபாய் வழங்குவதற்கும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இப்பகுதிகளில் வாழும் 1 லட்சத்து 55 ஆயிரம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொடர்ந்து வழங்குவதற்கு வழிவகை ஏற்படும்.
மொத்தத்தில் திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 717 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைவார்கள்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications