அப்பல்லோவில் ஜெயலலிதா இட்லி, பொங்கல் சாப்பிட்டாரா? - வெளிவரும் வாக்குமூலங்கள்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்த்தவர்கள் யார் யார்? என்ன சாப்பிட்டார் என்பது இப்போது விசாரணை ஆணையத்தில் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.
Recommended Video

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை நேரில் பார்த்தவர்கள், பேசியவர்கள் இப்போது வரிசையாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.
ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் 55 பக்கங்கள் அடங்கிய வாக்குமூலத்தை பிரமாணப்பத்திரமாக சசிகலா தாக்கல் செய்துள்ளார்.
அந்த வாக்குமூலத்தில் சசிகலா ஜெயலலிதாவை பார்த்தவர்கள் யார், யார் என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து சசிகலா வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளவர்களை அழைத்து விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்து சம்மன் அனுப்பி வருகிறது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம்
ஏடிஎஸ்பி வீரபெருமாளுக்கு கடந்த வாரம் ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்பேரில், ஏடிஎஸ்பி வீரபெருமாள் நேற்று காலை 10.20 மணியளவில் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அப்போது நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பிய பல கேள்விகளுக்கு வீர பெருமாள் விளக்கம் அளித்தார். அதனை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.

ஜெயலலிதா நலமாக இருந்தார்
அப்போது, கடந்த 27.9.2016ல் ஜெயலலிதாவை லிப்டில் கொண்டு செல்லும் போது பார்த்ததாகவும், அவர் நலமோடு இருப்பதாக ஜெயலலிதாவே கூறியதாக ஆணையத்தில் அவர் தெரிவித்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அமைச்சர்கள் இருந்தனர். அவர்கள், ஜெயலலிதாவை பார்த்திருக்கலாம். ஆனால், யார், யார் என்பது எனக்கு தெரியாது என்று ஏடிஎஸ்பி தெரிவித்தார்.

ஜெயலலிதா சாப்பிட்டார்
தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக ஷீலா பாலாகிருஷ்ணன் 2016 செப்டம்பர் 24ஆம் தேதியன்று ஜெயலலிதாவை பார்த்ததாக கூறியுள்ளார். அரசை கவனித்துக்கொள்ளுங்கள் ஒரு வாரத்தில் நான் வந்து விடுவேன் என்று கூறியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அன்றைய தினம் ஓட்ஸ் உப்புமா, கஸ்டர்ட் உணவுகளை சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார். இட்லி, பொங்கல் சாப்பிட்டதாக இவர் கூறவில்லை.

ஜெயலலிதாவை பார்த்தவர்கள்
ஜெயலலிதாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டு முறை பார்த்தாக அப்போதய தலைமை செயலாளராக இருந்த ராம மோகன ராவ் கூறியுள்ளார். வெங்கையா நாயுடுவும், ராகுல் காந்தியும் பார்த்ததாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளார்.

டிசம்பர் 3ல் ஜெயலலிதா
டிசம்பர் 3, 2016ல் தனியறையில் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறியுள்ளார் ராம மோகனராவ். டிசம்பர் 4ஆம் தேதியன்று ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. ஷீலா பாலகிருஷ்ணன் அப்போது இருந்துள்ளார். அதே அறையில் ராம மோகனராவும் இருந்ததாக கூறியுள்ளார். எக்மோ கருவி பொருத்துவதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் அதிக ரத்தம் வெளியேறியதாக பதிவு செய்துள்ளார்.

சசிகலா இல்லை
அந்த நேரத்தில் சசிகலா அங்கு இல்லை என்று ராமமோகன ராவ் கூறியுள்ளார். டிசம்பர் 5ஆம் தேதியன்று ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவி அகற்றப்பட்ட போது வெங்கையா நாயுடு அந்த அறையில் இருந்தார் என்ற தகவலையும் பதிவு செய்துள்ளார். அதே நேரத்தில் சசிகலா தனது வாக்குமூலத்திலோ, ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு எற்பட்ட போது தான் உடன் இருந்ததாக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications