ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெ.
சென்னை: தமிழக ஆளுநர் ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா இன்று நேரில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். அப்போது அதிமுக புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபைக் கட்சித் தலைவராக தாம் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை ஆளுநர் ரோசய்யாவிடம் அவர் அளித்தார். மேலும் தமது அமைச்சரவை பட்டியலையும் ஆளுநர் ரோசய்யாவிடம் கொடுத்தார்.
தமிழகத்தில் கடந்த 16ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகள் தவிர, மற்ற 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. எல்லா தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டனர்.
வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் மே 19ம் தேதி வெளியானது. அதிமுக கூட்டணி 134 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.
காமராஜர், எம்.ஜி.ஆருக்குப் பிறகு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி ஜெயலலிதா புதிய சாதனை படைத்தார். இந்த வெற்றியைத் தொடர்ந்து 6வது முறையாக அவர் தமிழக முதல்வராகிறார்.

எம்.எல்.ஏக்கள் கூட்டம்
அதிமுகவின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார்.

132 எம்.எல்.ஏக்கள்
ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, பழனியப்பன், ஓ.எஸ்.மணியன், கே.ஏ. செங்கோட்டையன், பி.தனபால், பொள்ளாச்சி ஜெயராமன், வெற்றிவேல் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள், தோழமை கட்சிகளைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, கு.தனியரசு, நடிகர் கருணாஸ் ஆகிய 132 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

ஜெயலலிதா தேர்வு
திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சீனிச்சாமி உடல் நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. அவரது மகன் விஜயகுமார், சீனிச்சாமி அளித்த கடிதத்தை சமர்ப்பித்தார். இக்கூட்டத்தில், ஜெயலலிதாவை சட்டசபை அதிமுக கட்சித் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநரை சந்தித்தார் ஜெ.,
இந்த கூட்டம் முடிந்ததும், தீர்மானம் மற்றும் எம்எல்ஏக்கள் கையெழுத்து அடங்கிய கடிதம் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே ஆளுநர் ரோசய்யாவை ஜெயலலிதா இன்று சந்தித்தார். அப்போது ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் ஜெயலலிதா கடிதம் அளித்தார். இதை ஏற்று ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார்.

23ல் பதவியேற்பு
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் திங்கள்கிழமையன்று பகல் 12 மணிக்கு மேல் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது.

அமைச்சரவை
ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 30 அமைச்சர்கள் வரை இடம்பெறலாம் என்றும் புது முகங்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

சபாநாயகர் யார்?
புதிய அமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது போல் பலமான சபாநாயகர் யார் என்ற எதிர்பார்ப்பும் அதிமுகவினரிடம் காணப்படுகிறது. கடந்த, 2011ல் அதிமுக ஆட்சி பொறுப் பேற்ற போது ஜெயக்குமார் சபாநாயகராக பொறுப்பேற்றார். அதன் பின் அவர் நீக்கப்பட்டு தனபால் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

பலமான எதிர்கட்சி
கடந்த 5 ஆண்டு காலத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அவரால் சமாளிக்க முடிந்தது.
இம்முறை தமிழக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு,திமுக கூட்டணி 98 இடங்களை பிடித்துள்ளது. அவர்களை சமாளிக்கும் வகையில் திறமையான நபர் சபாநாயகராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர் செல்வம்
முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர் பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் செம்மலை ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications