ஐவரணியில் மாற்றம்... ஓபிஎஸ், விஸ்வநாதன், பழனியப்பன் அவுட்... வேலுமணி, தங்கமணி இன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தல் களம் ஒருபக்கம் பரபரப்பை கிளப்பிக்கொண்டிருக்க, அதிமுகவில் ஐவரணி மீது ஜெயலலிதா எடுத்துவரும் நடவடிக்கைகள் அனலை கிளப்பி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஐவரணியில் இருந்த ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பனுக்கு தடை விதித்த ஜெயலலிதா புதிதாக நால்வர் அணியை உருவாக்கியுள்ளார்.

இந்த நால்வரணியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம், சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சருமான எடப்பாடிபழனிசாமி, நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், தொழில் மற்றும்போக்குவரத்துத் துறை அமைச்சருமான தங்கமணி, கோவை புறநகர்மாவட்டக்கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்கு அதிமுகவில் முக்கியத்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மீறி அணுவும் அசையாது. அவருக்கு தெரியாமல் பல சம்பவங்கள் நடந்தாலும், பின்பு அது அவர் கவனத்திற்கு சென்றால், அப்படியே ஆப்படித்து கட்டம் கட்டி கடாசி விடுவார். இது கடந்த 25 ஆண்டுகாலமாக ஜெயலலிதாவை கவனித்து வந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

அதிமுகவில் அதிகார மையம்

அதிமுகவில் அதிகார மையம்

அதிமுகவில் ஜெயலலிதா மூலவர் என்றால் சசிகலா உற்சவராக வலம் வந்தார். கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே சசிகலாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஜெ.,கெட் அவுட் சொன்னார். இதனையடுத்து கடந்த 4 வருடங்களுக்கு மேலாக, கட்சி நிர்வாகிகளையும், ஆட்சியில் உள்ள முக்கிய நிர்வாகத்தையும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிசாமி, ஆகியோர் கவனித்து வந்தனர்.

ஐவர் அணி

ஐவர் அணி

அதிமுகவில் ஓபிஎஸ் தலைமையில் ஏற்கனவே நால்வர் அணி தான் இருந்து வந்தது. கடந்த ஆண்டு அமைச்சர் பழனியப்பன் கூடுதலாக அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து நால்வர் அணி ஐவர் அணியாக மாறியது. இவர்கள் வைத்ததுதான் சட்டம் என்பது போல பேசப்பட்டது.

ஒழுங்கு நடவடிக்கை குழு

ஒழுங்கு நடவடிக்கை குழு

அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்தப்படியாக இந்த ஐவர் அணி பவர்புல்லாக திகழ்ந்து வந்தது. கட்சி செயல்பாடு, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள், விழாக்களை முன்னின்று நடத்துவது போன்ற பணியில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

கோடிகளில் புரண்ட பணம்

கோடிகளில் புரண்ட பணம்

இந்த ஐவர் அணியினர் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் சம்பாதித்ததாகவும், அதன் மூலம் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஓரங்கட்டப்பட்ட ஒபிஎஸ்

ஓரங்கட்டப்பட்ட ஒபிஎஸ்

இதையடுத்து 5 பேரையும் நேரடியாக அழைத்து முதல்வர் எச்சரிக்கை செய்து அனுப்பினார்; பல கட்டுப்பாடுகளையும் விதித்தார். இதனால், கடந்த 2 மாதமாக கட்சியிலும் ஆட்சியிலும் ஐவர் அணியினர் ஓரம்கட்டப்பட்டு வந்தனர். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது.

களமிறங்கிய ஜெ.,

களமிறங்கிய ஜெ.,

வேட்பாளர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதை அடுத்து வேட்பாளர் தேர்வில் முதல்வர் ஜெயலலிதாவே நேரடியாக களத்தில் இறங்கினார். நேர்காணல் நடத்தினார். இந்த ஐவரணியை அருகிலேயே விடவில்லை.

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு

அதிமுக அணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று அழைப்பு விடுத்தார். இதில் ஐவர் அணியில் இருந்த ஒபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகிய மூவரும் பங்கேற்க அனுமதிக்கவில்லை. அதனால் அவர்கள் போயஸ் கார்டனை எட்டிக்கூட பார்க்கவில்லையாம்.

புதிய நால்வர் அணி

புதிய நால்வர் அணி

ஐவரணியில் இருந்த அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி மு.பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் உடன் இருந்ததாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐவரணி, தற்போது நால்வரணியாக மாறியுள்ளது.

கல்தா கொடுத்த ஜெ.,

கல்தா கொடுத்த ஜெ.,

இந்த நிலையில், சட்ட மன்றத் தேர்தல் வரும் நிலையில், கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் குழுவில் இருந்த .பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியவருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளை அமைச்சர் வைத்திலிங்கம், எடப்பாடி கே.பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நால்வர் அணி தான் நடத்தும் என்பது உறுதியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

கட்டம் கட்டும் ஜெ.,

கட்டம் கட்டும் ஜெ.,

கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். 2011 அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்த உடன் செங்கோட்டையன் கட்டம் கட்டப்பட்டார். தற்போது ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் ஓரங்கட்டப் பட்டுள்ளனர்.

எல்லாமே ஜெ.

எல்லாமே ஜெ.

அதிமுகவில் எல்லாமே ஜெ. தான். தனது உடல்நிலையை காரணமாக வைத்து கட்சியை யாரும் கைப்பற்றிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ஜெயலலிதா. எனவேதான் தன்னையே மிஞ்ச நினைப்பவர்களை அவ்வப்போது தட்டி வருகிறார்.

தேர்தல் வருவதற்குள் அதிமுகவில் இன்னும் எத்தனை தலைகள் உருளப்போகிறதோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+