மழையால் பாதிக்கப்பட்ட போலீஸ் நிலையங்கள், குடியிருப்புகளை சீரமைக்க ஜெ. உத்தரவு!
சென்னை: கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போலீஸ் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளை தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலமாக சீரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த 23-ந் தேதியன்று தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்கள், காவல்துறை அலுவலகக் கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள், தமிழ்நாடு போலீஸ்அகாடமி ஆகியவற்றை மறு சீரமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காவல்துறை கட்டடங்கள் மற்றும் உடைமைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விவரங்கள் ஜெயலலிதாவிடம் தெரிவிக்கப்பட்டது.
மழையினால் பாதிக்கப்பட்ட காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், காவல் துறை கட்டடங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பழுதுகளை தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலமாக உடனடியாக சீரமைத்திட நடவடிக்கைகளை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், நிதித்துறை முதன்மை செயலாளர் கே. சண்முகம், உள்துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் அசோக்குமார், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications