எதிர்கட்சிகளை மதித்து நடக்க ஜெயலலிதா மோடியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்: விஜயகாந்த்
சென்னை: எதிர்கட்சிகளை எப்படி நடத்த வேண்டும்; மதிக்க வேண்டும்; அரவணைத்து செல்ல வேண்டும்; ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது போன்ற நல்ல பல விஷயங்களில், பிரதமரை, முதல்வர் ஜெயலலிதா பின்பற்றினால், தமிழக அரசியல் நாகரிகமாக இருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவை உலக அரங்கில் முதன்மை நாடாக அழைத்து செல்லும் குறிக்கோளுடன், சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை நாட்டின் வரலாற்றில் மைல் கல்லாகும்.

எதிர்கட்சிகளும், நாட்டின் வெற்றிப் பாதையில் இணைவதில் தான் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது. எந்த வெற்றிக்கும், பிரதமருக்கும் அரசுக்கும் மட்டும் பாராட்டு கிடைத்தால் போதாது. எதிர்கட்சிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று பிரதமர் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பலம் பெற்று இருந்தாலும், எதிர்கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன் என்று அவர் சொன்ன வார்த்தை மகத்தானது. ஆனால் தமிழகத்தில் அனைத்து கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தவுடன் கறிவேப்பிலை போல கூட்டணி கட்சிகளை முதல்வர் ஜெயலலிதா துாக்கி எறிந்துவிட்டார்
எதிர்கட்சிகள் மக்கள் மன்றத்தில் பேசினால் வழக்கு; சட்டசபையில் பேசினால் வெளியேற்றம்; இடைநீக்கம் என ஜனநாயகத்தின் குரல்வளையை முதல்வர் நெறித்துக் கொண்டிருக்கிறார். இதை என்னவென்று சொல்வது.
எதிர்கட்சிகளை பேசுவதற்கு கூட அனுமதிக்காமல் மக்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.,க்களை பார்த்து தகுதியில்லை; அருகதை இல்லை என்று சட்டசபையின் மாண்பையே கேள்வி கூத்தாக்குகிறார். கூட்டணியில் இருந்த கட்சிகளை கூட ஒருங்கிணைத்து செயல்பட முடியாத இவர் எங்கே? தன்னை எதிர்த்து நாடு முழுவதும் போட்டியிட்ட கட்சிகளை அரவணைத்து செல்லும் பிரதமரின் மாண்பு எங்கே?
எதிர்கட்சிகளை எப்படி நடத்த வேண்டும்; மதிக்க வேண்டும்; அரவணைத்து செல்ல வேண்டும்; ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது போன்ற நல்ல பல விஷயங்களில், பிரதமரை, முதல்வர் ஜெயலலிதா பின்பற்றினால், தமிழக அரசியல் நாகரிகமாக இருக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications