நீதிபதி கர்ணன் Vs சென்னை உயர் நீதிமன்றம்!
-ஆர்.மணி
சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் விவகாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
முதலில் இது என்ன விவகாரம் என்பது பற்றி ஒரு ஃபிளாஷ்பாக் ... சில மாதங்களுக்கு முன்னால் நீதிபதி சி.எஸ். கர்ணன், தமிழக நீதித் துறையில் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர் காணல்களுக்கு தடை விதித்தார்.
இந்த தேர்வுக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கும் உயர்நீதி மன்ற நீதிபதிகளின் தகுதி, கேள்விக்குறியது என்றும், இவர்களை தேர்வுக் குழு உறுப்பினர்களாக நியமித்த சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுலின் நடவடிக்கை தவறென்றும் நீதிபதி கர்ணன் கூறினார். மேலும் தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்கும் பணித் தேர்வுக்கும் தடை விதித்தார்.
ஆனால் இந்த தீர்ப்புக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் இரண்டு நீதிபதிகளைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் தடை விதித்து, நீதிபதிகள் நியமனத்தை தொடர உத்தரவிட்டது.

இதற்குப் பிறகு நீதிபதி கர்ணன் செய்த காரியம்தான் அசாத்தியமானது, சுதந்திர இந்தியாவின் நீதிமன்ற வரலாற்றில் இல்லாதது. தனது தீர்ப்புக்கு தடை விதித்த டிவிஷன் பெஞ்ச் தீர்ப்பு செல்லாதென்றும், தனது தீர்ப்புத்தான் செல்லுமென்றும், நீதிபதிகளின் நியமனங்களுக்கான தான் விதித்த தடை செல்லுமென்றும் அறிவித்தார். இதை விட முக்கியமானது அவரது அடுத்த நடவடிக்கை ... தனது தீர்ப்புக்கு எதிராக விவகாரத்தை டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றிய தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கை தானே முன் வந்து பதிவு செய்தார் நீதிபதி கர்ணன்.
இது போதாதென்று விவகாரத்தை தேசீய தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திடமும் எடுத்துச் சென்றார். காரணம் தான் ஒரு தலித் என்பதால் நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தன்னை அவமரியாதை செய்வதாகவும், ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
அசாதாரணமான இந்தச் சூழலைச் சமாளிக்க சென்னை உயர்நீதி மன்றமே இந்த விவகாரத்தை உச்ச நீதி மன்றத்துக்குக் கொண்டு சென்றது. சென்னை உயர்நீதி மன்றத்தின் பதிவாளர் ஒரு மனுதாரராக உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் நீதிபதி கர்ணனின் உத்திரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை இந்தாண்டு மே 11 ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் நீதிபதி கர்ணனின் அனைத்து உத்தரவுகளுக்கும் தடை பிறப்பித்தது. மேலும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நியமனங்களில் நீதிபதி கர்ணன் தலையிடக் கூடாதென்றும் உத்திரவிட்டது.

ஆனாலும் நீதிபதி கர்ணனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏதுமில்லை. இந்தாண்டு ஆகஸ்ட் 19 மற்றும் 21 ம் தேதிகளில் குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக ஆளுநர் மற்றும் முதலமைச்சர், தேசிய எஸ்.எடி. கமிஷன், உத்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோருக்கு எழுதிய கடிதத்தில் தான் ஒரு தலித் என்பதாலேயே தன்னை நீதிபத் சஞ்சய் கிஷண் கவுல் இழிவாக நடத்தி கொடுமைப் படுத்துவதாகக் கூறியிருக்கிறார்.
இதுதான் நீதிபதி கர்ணன் விவகாரத்தின் சுருக்கமான ஃபிளாஷ்பேக்.
இதில் லேடஸ்ட் டெவலப்மெண்ட் என்னவென்றால்... தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கறிஞர் ஒருவரே நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்துக்கு போயிருப்பதுதான். ஈ.ஜி. ராஜேந்திரன் எனும் அந்த வழக்கறிஞர் உச்ச நீதி மன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்திருக்கும் ஓர் மனுவில், ‘நீதிபதி கர்ணனுக்கு எந்த வழக்குகளையும் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் ஒதுக்கக் கூடாது. இதற்கான உத்தரவை உச்ச நீதிமன்றம் நீதிபதி சஞ்சய் கிஷண் கவுலுக்குப் பிறப்பிக்க வேண்டும். நிலைமை கையை மீறி போவதற்குள் இந்த உத்திரவை உச்ச நீதி மன்றம் பிறப்பிக்க வேண்டும். மேலும் என்னைப் பற்றி உச்ச நீதி மன்ற நடுத்தர வருவாய் சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி கர்ணன் எழுதிய கடிதத்திலும் தவறான, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார்.
ஆகவே 1971 ம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் படி நீதிபதி கர்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதி கர்ணனை சென்னை உயர்நீதி மன்றத்திலிருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.
‘நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் சென்னை உயர்நீதி மன்றம் போட்டிருக்கும் மூல வழக்கில் நானும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டிருக்கிறேன். அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் இருந்து கொண்டுதான் உள்ளது. ஆகவே நிலுவையில் உள்ள ஒரு வழக்கின் வாதியைப் பற்றி யார் குற்றம் சுமத்தினாலும் அது நீதிமன்ற அவமதிப்பு என்ற வகையில் வருமென்பதால்தான் நான் உச்ச நீதி மன்றத்தில் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அக்டோபர் 8 ம் தேதி தாக்கல் செய்தேன். என் மீது நீதிபதி கர்ணன் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை' என்று இந்தக் கட்டுரையாளரிடம் தொலைபேசியில் பேசும் போது கூறினார் ராஜேந்திரன்.
இந்தியாவின் எந்த உயர்நீதி மன்றமும் சந்திக்காத அவலமான பிரச்சனைகளை சென்னை உயர்நீதி மன்றம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தங்களுக்கும், நீதி மன்றத்துக்கும் போதிய பாதுகாப்பை தமிழக காவல்துறை வழங்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பை கேட்டிருக்கிறார். ஏற்கனேவே மத்திய ரிசர்வ் போலீசார் (சிஆர்பிஎஃப்) அதிகாரிகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆய்வுகளை நடத்திச் சென்று விட்டனர். மத்திய படை பாதுகாப்பு விவகாரம் பற்றிய வழக்கு நாளை அக்டோபர் 30 ம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. அனேகமாக நாளை, அக்டோபர் 30 முதல் சென்னை உயர்நீதி மன்றத்தின் பாதுகாப்பு சிஆர்பிஎஃப் வசம் போய் விடும்.
ஒரு பக்கம் வெளியிலிருந்து வரும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விஷயங்கள் பற்றி கவலைக் கொண்டிருக்கும் சென்னை உயர்நீதி மன்றம், மறுபுறம் தனக்கு உள்ளிருந்து வந்து கொண்டிருக்கும் ஆபத்துக்களையும் கவலையுடன் பார்க்கிறது. ‘சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரு உயர்நீதி மன்றம் தனது ஒரு நீதிபதியின் நடவடிக்கைகளில் இருந்து தன்னை காப்பாற்றுமாறு உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது இதுதான் முதன் முறை' என்று கூறுகிறார் மூத்த வழக்கறிஞர் ஒருவர்.
வழக்குகள் மலைபோல் தேங்கிக் கிடக்கும் இந்தச் சூழலில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தின் உள்ளும் புறமும் இத்தனைக் கூத்துக்களும் நடக்கின்றன. மற்றோர் கொடுமை, சென்னை உயர்நீதி மன்றத்தில் அனுமதிக்கப் பட்ட நீதிபதிகள் பதவிகளில் மூன்றில் ஒரு பங்கு நிரப்ப படாமல் இருப்பது.
சென்னை உயர்நீதி மன்றத்தின் மொத்த அனுமதிக்கப் பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 60. ஆனால் தற்போது இருப்பதோ 38 பேர்தான். இந்த பின்புலத்தில் பார்த்தால் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தச் சம்பவங்கள் எல்லாமே சாமானியனின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதித் துறையின் மாண்பை எந்தளவுக்கு, சிதைத்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications