திமிங்கலங்களைத் தப்ப விட்டு மீன் குஞ்சுகளைப் பிடிப்பதா! - கி.வீரமணி
சென்னை: பணத்தை அளித்து வாக்குகளை விலைக்கு வாங்கலாம் என்னும் ஜனநாயகத்தைப் பணநாயகமாக ஆக்கும் முயற்சிக்கு வாக்காளப் பெருமக்கள் பலியாகி விடக் கூடாது என்றும், தேர்தல் ஆணையம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டதாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டின் சட்டப் பேரவைக்கு வரும் மே 16ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கும் தேர்தல் ஜனநாயகத் தேர்தலா அல்லது பணநாயகத் தேர்தலா என்று நாடெங்கும் கேள்விகள் கிளம்பும் வண்ணம் ஆங்காங்கு கோடிக்கணக்கில் தேர்தல் ஆணையத்தாலும் வருமான வரித்துறையினாலும் கைப்பற்றிய பணம் மற்ற மாநிலத்தவரையும் உலகத்தாரையும் வியக்கச் செய்யும் வெட்கத்தால் நாம் தலை குனிய வேண்டிய செய்திகளாகும்!

பணத்தைப் பதுக்கும் அ.இ.அ.தி.மு.க.
ஓட்டுக்காக நோட்டுகளை வாக்காளர்களுக்கு ‘இலஞ்சமாக' கொடுப்பதற்காக, என்னென்ன நூதனமான வழிமுறைகளை நமது தமிழ்நாட்டுத் தேர்தலில் பிடிபட்ட ஆளும் கட்சியான அ.தி.மு.க. பிரமுகர்கள் கையாண்டுள்ளார்கள் என்ற செய்தி அதிர்ச்சியைத் தரும் செய்தியாகும்!
சென்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது இதற்கு ‘நல்ல ஒத்திகையை' வெற்றிகரமாகவே நடத்தி வெற்றியும் பெற்றது ஆளும் கட்சி என்பதை, கட்சி ஏடுகள் - அல்ல ‘தினமலர்' போன்ற நாளேடுகளே எழுதுகின்றன!
24.4.2016 அன்று வெளிவந்துள்ள செய்தி கவனிக்கத்தக்கது (தனியே பெட்டி செய்தி காண்க)
கரூரிலும், சென்னையிலும் பல கோடி ரூபாய்கள் பதுக்கப்பட்டு, பட்டுவாடாவுக்குச் சென்றுள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் முதல் அத்துணைக் கட்சித் தலைவர்களும் (ஆளும் கட்சி தலைவர்களைத் தவிர) வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளனர்; தேர்தல் கமிஷன் இதனைத் தடுக்க, உரிய நடவடிக்கைகள் எடுப்பதில் மெத்தனம் காட்டுகின்றது என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்!
இது தேர்தல் கமிஷனுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லையே! நடுநிலை - ஒரு பக்கமும் சாயாத நிலைப்பாடு - தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள் மூலம் ‘பளிச்'சிட வேண்டாமா?
சீசரின் மனைவி சந்தேக்ததிற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டாமா?
‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்' என்ற பழமொழிக்கேற்ப தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் விரைந்த நடவடிக்கைகளாக இருக்க வேண்டும்; குதிரை போன பிறகு லாயத்தை இழுத்துப் பூட்டுவதால் என்ன பயன்?
மருத்துவத்திற்காக மனிதாபிமான அடிப்படையில் நோயாளிகளின் அவசர சிகிச்சைக்குப் பயன்பட வேண்டிய ஆம்புலன்ஸ் வேன்கள், தமிழ்நாட்டில் தேர்தல் பட்டுவாடாவுக்காகவே போலி எண், போக்குக் காட்ட ஏதோ கிராமப்புற மக்களுக்கு சர்வீஸ் என்று பதிவு - என்னே கூத்துகள்! தில்லுமுல்லுகள்! இவை மட்டுமா?
நோட்டுக்களை எண்ணி கட்டுப் போடும் இயந்திரங்கள் 25 ஒரே இடத்தில்; அ.தி.மு.க. பிரமுகரின் குடோனில், ‘ரப்பர் பேண்ட்' கத்தை கத்தையாக பண்டில் போட - என்னே ‘நேர்த்தி!' எவ்வளவு தமிழ்நாட்டுக்குக் ‘கீர்த்தி!' ஜனநாயகம் ‘ஆம்புலன்ஸ் வேனில்' பயணித்து ‘தீவிர சிகிச்சைப் பிரிவு' தமிழ்நாட்டில் அனுப்பப்படுகிறதா? புரியவில்லை.
தமிழ்நாட்டுக் காவல்துறை என்ன செய்கிறது?
முழுக்க ‘விஞ்ஞான பூர்வமாக' சென்ற நாடாளுமன்றத் தேர்தலின் போதே இது நடந்துள்ளது என்று கூறுகின்ற ஏடுகளில் வெளி வந்துள்ள செய்திகள் தமிழ்நாட்டுக் காவல்துறை ஏன் இதுபற்றி ‘கண்டு கொள்ளாமல்' இருக்க வேண்டும்? என்பதே பொதுவானவர்கள் எழுப்பும் கேள்வியாகும்!
கறுப்புப் பணத்தை வெளிநாட்டிலிருந்து மீட்பது அப்புறம் இருக்கட்டும்; இப்படி தேர்தலில் ‘பண நாதனின் திருவிளையாடல்கள்' உள்நாட்டில் நடைபெறுவதைத் தடுக்க, வருமான வரித்துறை முன் வர வேண்டாமா?
திமிங்கலங்களைத் தப்ப விட்டு மீன் குஞ்சுகளைப் பிடிப்பதா!
திமிங்கலங்களையும், முதலைகளையும் விட்டுவிட்டு, ஏதோ ‘சிறு சிறு மீன்களை' மட்டும் கண்டுபிடித்து விட்டோம் என்று கூறுவதா?
பிடிபட்டவர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதா? என்ன மேல் நடவடிக்கை என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டியது தேர்தல் கமிஷனின் தலையாய கடமை அல்லவா?
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் என்னென்னவெல்லாம் நடைபெறுமோ?
வாக்காளர்களே! இந்த சிறு தொகைகாக 5 ஆண்டு காலம் ஆட்சியை - ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்குப் பதிலாக உங்களை விற்றுக் கொள்ளாதீர்கள்!
ஜனநாயகமா - பண நாயகமா?
சில அதிகாரிகளை மாற்றினால் மட்டும் போதாது; அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து, தமிழ்நாட்டின் பெருமையைக் காப்பாற்ற, ஜனநாயகத் தேர்தலை பண நாயகத் தேர்தலாக மாற்றிட ஒரு போதும் அனுமதிக்காதீர்! அனுமதிக்காதீர்!!
இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications