அடங்காத கள்ளக்குறிச்சி! பயங்கர போதையில் மயங்கிய தந்தை.. அப்பாவை கட்டியணைத்தபடி தூங்கிய சிறுமி! பகீர்
கள்ளக்குறிச்சி: கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த கொடூரம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அங்கே மீண்டும் இளைஞர் ஒருவர் கள்ளச்சாராயம் குடித்து போதையில் தள்ளாடிய வீடியோ பகீர் கிளப்பியுள்ளது.
நமது மாநிலத்தில் டாஸ்மாக் கடைகள் மூலமாகவே மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சில இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவு என்பதால் மக்கள் அதை வாங்கி குடிக்கிறார்கள்.

அதில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நச்சு இருப்பதை அறிந்தும் கூட மக்கள் அதைக் குடிக்கிறார்கள். அதுபோன்ற ஒரு பகீர் சம்பவம் தான் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் நடைபெற்றது.
கள்ளச்சாராயம்: அதாவது கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது. இந்த கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் முதலில் உயிரிழந்தனர். இருப்பினும், கள்ளச்சாராயத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது என்பது அப்போது தெரியவில்லை. இதனால் அவர்களின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்களும் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாகும்.
இந்த விவகாரத்தில் சுமார் 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.. மெத்தனால் கலந்த சாராயத்தைக் குடித்ததால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து உயிரிழந்து வருகிறார்கள்.
உயிரிழப்பு: நேற்றிரவு வரை இந்த விவகாரத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.. இதற்கிடையே இன்று அதிகாலையில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. இப்போதும் சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் நடந்த இந்த கொடூரம் மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அதே கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தின் ஆபத்தைத் துளியும் உணராமல் இளைஞர் ஒருவர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்துள்ளார். இந்த இளைஞரின் மாமியார் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சிறுமி: இதற்கிடையே இப்போது மருமகனும் முழு போதையில் சாலையோரத்தில் கிடந்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் அவரது குழந்தையும் கூடவே இருந்துள்ளது. குடிபோதையில் தந்தை இருக்க அந்த பெண் குழந்தை அவருக்கு அருகிலேயே காத்திருந்தது. ஒரு கட்டத்தில் அந்த போதை இளைஞரைக் கட்டியணைத்தபடி அந்த சிறுமி தூங்கியது. இது தொடர்பாகத் தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அந்த போதை இளைஞரை எழுப்பி விசாரித்துள்ளனர். இருப்பினும், போதை உச்சத்தில் இருந்ததால் அந்த இளைஞர் சரியாக எதுவும் சொல்லவில்லை. உணவு வாங்கி குழந்தைக்குத் தரலாமா எனக் கேட்ட போதும், அதை வாங்க அந்த இளைஞர் மறுத்துவிட்டார். ஒரு கட்டத்தில் தானும் கள்ளச்சாராயம் குடித்ததாக அந்த இளைஞர் கூறியிருக்கிறார். இதையடுத்து அவரையும் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
பகீர்: கள்ளச்சாராயம் குடித்து குடும்பத்திலேயே ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, இப்படிப் பொறுப்பே இல்லாமல் மீண்டும் அந்த இளைஞர் கள்ளச்சாராயத்தைக் குடித்தது சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் அந்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications