கலங்கடித்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்.. 68 குடும்பத்தினரிடமும் இன்று முதல் ஒரு நபர் ஆணையம் விசாரணை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில், உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று முதல் ஒருநபர் ஆணையம் தன்னுடைய விசாரணையை துவக்குகிறது.
கடந்த ஜுன் 19ம் தேதி, கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் அதிர வைத்துவிட்டது.. கருணாபுரம், சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர்...

சிகிச்சை: இதில், கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிகிச்சை பெற்று குணமடைந்து 161 பேர் நலமுடன் வீடு திரும்பினார்கள்.. இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. இந்த கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான, பிரபல சாராய வியாபாரிகள் உள்பட 24 பேர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 161 நபர்கள் மற்றும் உயிரிழந்த 68 நபர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 229 குடும்பத்தினர்களிடம் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.. அதன்படியே, ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை, ஒருநபர் ஆணையமாக தமிழக அரசு நியமித்தது..
ஆணையம் முடிவு: இதையடுத்து, கடந்த மாதம் 3ம் தேதி முதல் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திலேயே இந்த விசாரணை நடந்தது. கடந்த 9ம் தேதி வரை மொத்தம் 150 பேர்களிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை முடித்திருந்தது.. எனினும், இந்த விசாரணைக்கு ஆஜராகாத 11 பேர்களுக்கு மறுபடியும் சம்மன் அனுப்ப கள்ளக்குறிச்சி போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள்.
கள்ளச்சாராயத்தினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 68 குடும்பத்தினர்களிடமும் விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக உயிரிழந்த 40 பேர்களின் குடும்பத்தினர்களுக்கு கள்ளக்குறிச்சி காவல்துறை மூலமாக விசாரணைக்கு ஆஜராக வேண்டி சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது..
இன்று துவக்கம்: இந்த விசாரணையைத்தான் இன்று முதல் துவக்குகிறது.. தினமும் 10 பேர்கள் வீதம் 40 பேர்களிடம் இந்த விசாரணை 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது.. இன்று முதல் 17ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்களுக்கு விசாரணை நடைபெற உள்ளதாக ஒருநபர் ஆணையம் அலுவலகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இந்த விவகாரம் குறித்து விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பிரபல சாராய வியாபாரிகள் உட்பட 24 பேரை கைது செய்துள்ள நிலையில், 11 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications