For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வழியெங்கும் பூத்து கிடக்கிறது நீ வருவாய் என்ற நம்பிக்கை... கருணாநிதியை நெகிழ வைத்த கனிமொழி!

கருணாநிதியின் வைரவிழாவை முன்னிட்டு அவருக்கு நெகிழ வைக்கும் கவிதை ஒன்றை எழுதியுள்ளார் கனிமொழி.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரை நெகிழ வைக்கும் அளவுக்கு கனிமொழி கவிதை ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

கருணாநிதியின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், அரசியலுக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவானதை தொடர்ந்து வைரவிழாவும் இன்று மாலை கொண்டாடப்படுகிறது. இதற்காக தேசிய கட்சித் தலைவர்களும் சென்னையில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.

Kanimozhi wishes Karunanidhi with poem

இந்நிலையில் தந்தையை போலவே கவிஞரான கனிமொழி தனது தந்தைக்கு பிறந்த நாள் பரிசாக தான் எழுதிய கவிதையை அளித்து நெகிழ வைத்துள்ளார். அதற்கு மௌனம் என்ற தலைப்பை இட்டுள்ளார்.

கருணாநிதிக்கு மூச்சு விடுவதற்கான சிகிச்சை அளித்ததால் அவரால் பேச இயலவில்லை.எனினும் பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு ஓரிரு வார்த்தைகள் மட்டும் பேசி வருகிறார். இதை குறிக்கும் விதமாக அத்தலைப்பை வைத்துள்ளார் கனிமொழி.

அந்தக் கவிதை,

பேசுவதை நிறுத்திக் கொண்டாய்
உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது
என்று நினைத்து விட்டாயா
பேசி பேசி அலுத்துவிட்டாயா
சொல்வதற்கு இருந்ததை எல்லாம்
சொல்லி விட்டேன் என்றா
உன் வார்த்தைகளின் எஜமானர்கள்
நாங்கள் என்று உனக்கு தெரியாதா

மௌனம் கனத்துக் கிடக்கிறது
எங்கள் பாதைகளை அடைத்துக் கிடக்கும்
அசைக்க முடியாத பாறையாய்,
வெடித்து கிடக்கும் வறண்ட வயலின்
வரப்பில், செய்வது அறியாது
நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல
நாங்கள் காத்துக் கிடக்கிறோம்
கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக.

கடல் பிளந்து மறுகரை சேரக்கிறேன் என்ற
கிழவனை, பறித்துச் சென்றது யார்?

உன் சக்கர நாற்காலி உருளும் சத்தம்...
வண்டியில் இருந்து இறங்கி நீ
வீசும் சினேகப் புன்னகை...
அதற்குப் பின்னால் எப்போதும்
ததும்பும் நகைச்சுவை...
மேடையில் இருந்து, "உடன்பிறப்பே" என்று
அழைக்கும் போது ஒரு கோடி
இதயங்கள் ஒரு வினாடி உறைந்து
துடிக்குமே அந்தக் கணம்...
இதற்கு மாற்றாய் எதைத் தருவாய்,
நாளை முதல் சூரியன் உதிக்காது
என்றால் இந்த பூமி எப்படி சுழலும்.

எங்கள் கேள்விகளாய், தேடும் பதிலாய்
சிந்தனையாய், சிந்தனையின் ஊற்றாய்,
மொழியாய், மொழியின் பொருளாய்,
செவிகளை நிறைத்த ஒலியாய்,
குரலாய் இருந்தது நீ.
எங்களோடு தானே எப்போதும்
இருப்பாய், இருந்தாய்
திடீரென்று எழுந்து போய் கதவடைத்துக்
கொண்டால் எப்படி?

உன் நாவை எங்களுக்கு
வாளாக வடித்துக் கொடுத்தாய்
அதை புதுப்பொலிவு மாறாமல்
பாதுகாத்து வைத்திருக்கிறோம்
இருண்மையும் எதிரிகளும் சூழ்ந்த
நேரத்தில் எங்கள் தோள்களின் மீது
ஏறி படை நடத்திட காத்திருக்கிறோம்...
நீயோ போதி மரத்து புத்தனைப் போல்
அமைதி காக்கிறாய்.

உன் ஆளுமையை துவேஷித்தவர்கள்
வசை பாடியவர்கள்
தமிழ் வாழ்வின் தாழ்வுகளுக்கெல்லாம்
நீயே காரணம் என்றவர்கள்
எல்லாரும் இன்று
காத்துக் கிடக்கிறார்கள் எங்களோடு.
புழுதிக் காற்று வீசும் திசையறியா காட்டில்
தெளிந்த தடம் காட்டும் உனது
சில வாக்கியங்களுக்காக.

நீ பேசுவதில்லை
ஆனால் நாங்கள்
உன்னைப் பற்றியே தான்
பேசிக் கொண்டிருக்கிறோம்
வா,
வழியெங்கும் பூத்து கிடக்கிறது
நீ வருவாய் என்ற நம்பிக்கை...
நீயின்றி இயங்காது எம் உலகு.

இந்தக் கவிதையை கருணாநிதியிடமே கொடுத்துள்ளார் கனிமொழி.

English summary
DMK MP Kanimozhi has presented a poem in which was written in the name of mounam to Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X