தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து ரயில்களை மறித்த மீனவர்கள், பெண்கள்! காரைக்காலில் நாளை முழு அடைப்பு
காரைக்கால்: இலங்கை அரசின் தொடர் துப்பாக்கிச்சூடு மற்றும் தமிழ்நாட்டு மீனவர்களை காக்க தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து காரைக்கால் மீனவர்கள், பெண்கள் தண்டவாளத்தில் படுத்து இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 3 மீனவர்கள் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மீனவர் செந்தமிழ் காலில் பயங்கர அடிபட்டு காலை அகற்றும் நிலைக்கும், மணிகண்டன் கண் பறிபோகும் நிலைக்கும், மற்றொருவர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மீனவர்களை வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இலங்கை கடற்படையின் அராஜகத்தை கண்டித்து கடந்த 11 ஆம் முதல் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் காரைக்கால் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று காரைக்காலில் மீனவர்கள், பெண்கள் தண்டவாளத்தில் படுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று 7வது நாள் போராட்டமாக, காரைக்கால் ரயில் நிலையத்தில், வேளாங்கண்ணி ரயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை அரசு நடவடிக்கை எடுக்காததால் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள், தங்களது குடும்பத்தினருடன் காரைக்கால் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து நாளை (பிப்ரவரி18) காரைக்கால் மாவட்டம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications