வங்கின்னா என்ன.. எப்படி செயல்படுகிறது?.. ஆர்வத்துடன் கேட்டறிந்த காரைக்குடி மாணவர்கள்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் காரைக்குடி ஆக்சிஸ் வங்கிக்கு களப் பயணமாக அழைத்து செல்லப்பட்டார்கள்.

கிளை மேலாளர் விஜய் ஆனந்த் அவர்கள் மாணவர்களை வரவேற்றார். மாணவர்களுக்கு வங்கி நடைமுறைகள் மற்றும் வங்கியில் அளிக்கப்படும் சேவைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.

சேமிப்புக் கணக்கு ,நடப்பு கணக்கு,தொடர் வைப்பு கணக்கு போன்ற வங்கியில் உள்ள கணக்குகள் குறித்தும், அதற்கான வட்டிவீதம் குறித்தும், அக்கணக்குகளை துவங்கி எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் உதவி மேலாளர் தனசேகரன் விளக்கமளித்தார்.
பணம் செலுத்தும் படிவம் மற்றும் பணம் எடுக்கும் படிவம் பூர்த்தி செய்தல், ஏ.டி.எம் கார்டு பயன்படுத்துதல், காசோலை பயன்படுத்துதல், வங்கி வரைவோலை எடுத்தல் போன்றவை குறித்து உதவி மேலாளர் பார்த்திபன் அவர்கள் பயிற்சிசியளித்தார்.

மேலும் சேமிப்புக் கணக்கு துவங்குவதற்கு தேவையான ஆவணங்கள் பற்றியும் எடுத்து கூறினார்கள். வங்கியில் வழங்கப்படும் சேவைகளான படிப்பு கடன் , வீட்டு கடன், வாகன கடன் மற்றும் விவசாய கடன் போன்றவை குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
வங்கியில் உள்ள பாதுகாப்பு பெட்டகம், ஏடிஎம் இயந்திரம் குறித்த தகவல்களும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கிளை மேலாளர் அறை, பணம் செலுத்தும் இடம், பணம் பெறும் இடம் போன்ற வங்கியின் பகுதிகளை மாணவர்கள் பார்வையிட்டனர்.

இப்பயணம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் கோமதி செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications