For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுய பரிசீலனை செய்வோம்: பிறந்தநாள் செய்தியில் திமுகவினருக்கு கருணாநிதி அறிவுரை

By Mathi
Google Oneindia Tamil News

திமுகவினருக்கு கருணாநிதி விடுத்த பிறந்தநாள் செய்தி வருமாறு:

''காலமும், அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை' என்பது முதுமொழி. தற்போது தான் கட்சியினர் எனது 90வது வயதைக் கொண்டாடி ஏழையெளியோருக்கு பல்வேறு வகை உதவிகள் வழங்கி நிறைவு செய்தது போல் இருக்கிறது. அதற்குள் எனக்கு 91வது பிறந்த நாளாம்!

இந்த ஆண்டு என்பிறந்த நாள் விழா எதுவும் வேண்டாமென்று நான் எவ்வளவோ சொல்லியும், கழகப் பொதுச் செயலாளர் அன்பழகனும், பொருளாளர் ஸ்டாலினும், மற்றும் என்னுடன் எப்போதும் உடன் இருக்கும் கழக முன்னணியினர் சிலரும் கேட்கவில்லை.

பொதுச் செயலாளர், பேராசிரியர் என் மீது வைத்துள்ள வற்றாத பாசத்தினால், இந்த 92 வயதிலும், இரண்டு முறை எனது வீட்டிற்கே வந்துவிட்டார்; நான் ஒப்புதல் அளித்த பிறகுதான் விட்டார். மேலும் என்னுடைய பிறந்த நாளை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டுமென்று நீண்ட விளக்க அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

1924ல் பிறந்து.. 38ல் போர்க்களம்

1924ல் பிறந்து.. 38ல் போர்க்களம்

தமிழகத்திற்கும், மைசூருக்கும் இடையே காவிரி நதி நீர் ஒப்பந்தம் ஏற்பட்ட அதே 1924ஆம் ஆண்டில் பிறந்து, 1938இல் கரங்களில் புலி, வில், கயல் பொறித்த தமிழ்க்கொடி ஏந்தி, 'வாருங்கள் எல்லோரும் மொழிப் போருக்குச் சென்றிடுவோம்!' என்று பரணி பாடிக் கொண்டே பொது வாழ்க்கையைத் தொடங்கியவன் நான்.

முதுகொடியப் பயணம்

முதுகொடியப் பயணம்

நீண்ட, நெடிய என்னுடைய பொது வாழ்க்கையில் தமிழகத்தில் நான் செல்லாத ஊரில்லை; பார்க்காத தமிழ் மக்கள் இல்லை; பேசாத மேடையில்லை என்று சொல்லும் அளவுக்கு, கழகத்தை நாட்டின் அனைத்து மூலைமுடுக்குகளுக்கும் கொண்டு செல்ல முதுகொடியப் பயணம் செய்திருக்கிறேன். தந்தை பெரியாரால் செதுக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவால் செம்மைப் படுத்தப்பட்ட நான், அரசியல் வாழ்க்கையின் அத்தனை பரிமாணங்களையும் பார்த்து விட்டேன்.

தென்றலும் தீயும்

தென்றலும் தீயும்

கழகம் எனக்கு தாய் - தந்தைக்கு இணையானது. 'முரசொலி' எனது மூத்த பிள்ளை. 'நான் தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்' என்பது திரைப் படத்திற்காக என்னால் எழுதப்பட்ட வெறும் வசனம் அல்ல: அது தான் என் வாழ்க்கைச் சுருக்கம்!

அரசியல் தலைவர்கள்

அரசியல் தலைவர்கள்

தமிழக அளவில் மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், பசும்பொன் தேவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், பெரியவர் பக்தவத்சலம், பொதுவுடைமை வீரர் ஜீவா, பி. ராமமூர்த்தி, அருமை நண்பர் எம்.ஜி.ஆர்., மணலி கந்தசாமி என இன்னும் பலரோடு அரசியல் செய்திருக்கிறேன்.

தேசிய தலைவர்கள்

தேசிய தலைவர்கள்

அகில இந்திய அளவில், அண்ணல் ஜெயப்பிரகாஷ் நாராயண், இந்திரா காந்தி, பாபு ஜெகஜீவன் ராம், காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா, மொரார்ஜி தேசாய், இளந்தலைவர் ராஜீவ் காந்தி, வி.பி. சிங், ஐ.கே. குஜ்ரால், வாஜ்பாய், சோனியா காந்தி, மன்மோகன் சிங், என்.டி. ராமராவ், நம்பூதிரிபாத், ஹர்கிஷன் சிங் சுர்ஜித், சுர்ஜித் பர்னாலா, ராம் விலாஸ் பஸ்வான் என இன்னும் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரோடு இணைந்தும், எதிர்த்தும் அரசியல் பணியாற்றியிருக்கிறேன்.

பட்டுக்கோட்டையார் வரிகள்

பட்டுக்கோட்டையார் வரிகள்

இன்னும் சொல்லப் போனால், 'கல்லால் இதயம் வைத்து, கடும் விஷத்தால் கண் அமைத்து, கணக்கில்லாப் பொய்களுக்குக் காரணமாய் நாக்கு அமைத்து, கள்ள உரு அமைத்து, கன்னக்கோல் கை அமைத்து, நல்லவர் என்றே சிலரை - உலகம் நடமாட விட்டதடா!' என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு உருவகமான சிலரை எதிர்த்தும், அரசியல் செய்திட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போதும், தமிழ் மக்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, அதை நான் தட்டிக் கழித்ததில்லை.

12 முறை எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி

12 முறை எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி

1957ஆம் ஆண்டு என்னுடைய 33வது வயதில், அறிஞர் அண்ணாவின் ஆணைப்படி, முதல் முறையாக குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 2011 ஆம் ஆண்டு 87வது வயதில், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இதுவரையில் சட்டப் பேரவைத் தேர்தலில் ஒரு முறை கூடத் தோற்காமல், பன்னிரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன். இடையில் 1984 முதல் 1986 வரையில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறேன். பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற போது 1969 வரை இரண்டாண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், பின்னர் ஐந்து முறை மொத்தம் 19 ஆண்டுகள் முதலமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறேன்.

5 முறை தமிழக முதல்வர்

5 முறை தமிழக முதல்வர்

இவ்வாறு ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும், பன்னிரண்டு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும் பணியாற்றிய போதிலும், என்னுடைய எளிய வாழ்க்கை முறைகளை நான் எப்போதும் மாற்றிக் கொண்டதில்லை என்பதை தமிழகம் நன்கறியும். திரையுலகில் ஈடுபட்ட போது, குறைந்த விலைக்கு வாங்கி நான் தற்போது வசிக்கும் தெரு வீட்டைக் கூட, என் வாழ்நாளுக்குப் பிறகு ஏழையெளியோர் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மருத்துவ மனையாக இயங்கஎழுதிக் கொடுத்து விட்டேன்.

நெஞ்சுக்கு நீதி

நெஞ்சுக்கு நீதி

இதுவரை என் வாழ்க்கை நிகழ்வுகளை 'நெஞ்சுக்கு நீதி' என்ற தொகுப்பாக ஆறு பாகங்கள் - சுமார் 4,600 பக்கங்கள் - எழுதி நூலாக வெளியிட்டிருக்கிறேன். இதுதவிர சட்டமன்றத்தில் நான் ஆற்றிய உரைகள் 6000 பக்கங்கள் கொண்ட நூல்களாக வெளி வந்துள்ளன.

இலக்கிய நூல்கள்

இலக்கிய நூல்கள்

மேலும் 'ரோமாபுரிப் பாண்டியன்' , 'கவிதை மழை', 'தென்பாண்டிச் சிங்கம்', 'முத்துக்குளியல்' இரண்டு பாகங்கள், 'புதையல்', 'சங்கத் தமிழ்', 'பொன்னர்-சங்கர்', 'பாயும் புலி பண்டாரக வன்னியன்', 'குறளோவியம்', 'குறள் உரை', 'தொல்காப்பியப் பூங்கா' என நூல்ற்றுக்கும் மேலான என்னுடைய நூல்கள்கள் வெளி வந்துள்ளன.

திரைப்பட வசனங்கள்

திரைப்பட வசனங்கள்

சுமார் 75 திரைப் படங்களுக்கு கதை வசனம் தீட்டியிருக்கிறேன். மொத்தத்தில் இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் நான் எழுதியவை நூல்களாக வெளி வந்துள்ளன.

தமிழுக்காக. தமிழ் மக்களுக்காக...

தமிழுக்காக. தமிழ் மக்களுக்காக...

இவற்றையெல்லாம் நான் என்னுடைய பெருமையைப் பறை சாற்றிக் கொள்வதற்காகக் கூறவில்லை. என்னுடைய வாழ்நாளை வீணாகக் கழிக்காமல், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் பயன்படத் தக்க வகையில் என்னால் இயன்ற வரை உழைத்திருக்கிறேன் என்பதை விளக்குவதற்காகவே குறிப்பிட்டுள்ளேன்.

45 ஆண்டுகால திமுக

45 ஆண்டுகால திமுக

1969ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா கழகத்தை நம்முடைய கரங்களிலே ஒப்படைத்து விட்டு மறைந்தார். கடந்த 45 ஆண்டுகளாக கழகத்தின் தலைமைப் பொறுப்பு என்னுடைய தோள்களிலே ஏற்றப்பட்டுள்ளது. இந்த 45 ஆண்டுகளில் நம்முடைய கழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள், துரோகங்கள், தூற்றல்கள், எள்ளல் ஏகடியங்கள், சச்சரவுகள் - ஆர்ப்பரித்து வந்த அத்தனையையும் சாதுர்யமாக அடக்கிச் சமாளித்துத் தான் கழகம் அமைதியாக நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

சதிகள், தந்திரோபாயங்கள்..

சதிகள், தந்திரோபாயங்கள்..

'கழகத்தை உடைத்து விட்டேன்' என்று கர்ச்சனை செய்தவர்கள், அண்ணா அறிவாலயத்தையும், அண்ணா தந்த இரு வண்ணக் கொடியையும் கைப்பற்றிச் சொந்தம் கொண்டாடத் துடித்தவர்கள், தீக்குண்டத்தில் கிடத்தப்பட்ட போது, அதன் மீது பெட்ரோலை ஊற்றத் துணிந்தவர்கள் என உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போன்ற எத்தனையோ அதிசய மனிதர்களின் சதிகளையும், தந்திரோபாயங்களையும் தவிடு பொடியாக்கி, இரட்டிப்பு எழுச்சியோடு ஏற்றம் பெற்று கழகம் வளர்ந்திருக்கிறது.

சமத்துவம் - சமூக நீதி

சமத்துவம் - சமூக நீதி

என்னைப் பொறுத்தவரையில், தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சியைக் கருத்தில் தேக்கி, அறிஞர் அண்ணா கற்றுத் தந்த வழிமுறைகளிலிருந்து கிஞ்சிற்றும் பிறழாமல்; சுயமரியாதையும், பகுத்தறிவும் பெற்ற சாதிமதப் பேதமற்றதும், சோஷலிச அடிப்படையில் ஆனதுமான சமுதாயம் - சமத்துவம் - சமூக நீதி - தமிழ் மொழியின் முதன்மை - தமிழர் மேம்பாடு என; இவற்றுக்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பவன்; தோல்வியாயினும், வெற்றியாயினும் துவளாமல் இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவன் நான்.

தோல்வி கண்டாலும்..

தோல்வி கண்டாலும்..

'அடித்தாலும், அணைத்தாலும் நான் உந்தன் பிள்ளை' என்பதற்கொப்ப, எந்த நிலையிலும் நான் நாட்டிற்காகவும், மொழிக்காகவும் ஆற்ற வேண்டிய பணியை தள்ளி வைத்ததும் இல்லை; தமிழ் மக்களிடமிருந்து என்றைக்கும் விலகி நின்றதும் இல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் பெரும் தோல்வி கண்டுள்ளது. இது போன்ற தோல்விகளை கடந்த காலத்தில் கழகம் பெற்று, மீண்டெழுந்து வெற்றி முகட்டை எட்டிப் பிடித்திருக்கிறது. எனினும் இப்போதைய தோல்விக்குப் பலராலும் பல்வேறு காரணங்கள் விமர்சனமாக வைக்கப்படுகின்றன.

தோல்விக்கு காரணமான திமுகவினர்..

தோல்விக்கு காரணமான திமுகவினர்..

கழகச் செயல்வீரர்கள் சிலர் அவர்கள் வழக்கமாக ஆற்றிட வேண்டிய தேர்தல் பணிகளைப் புறக்கணித்து முடங்கி விட்டனர்; அல்லது அவர்களது நடவடிக்கைகள் வாக்காளர்களின் வெறுப்பையும், வருத்தத்தையும் வரவழைத்துள்ளன; என்பதும் ஒரு காரணமாக முன் வைக்கப்படுகின்றது. அண்ணா ஒரு முறை, 'தம்பீ! உன்னை யாராலும் அழித்திட முடியாது; உன்னை நீயே அழித்துக் கொண்டால் தவிர!' என்று சொன்னார்.

சுய பரிசீலனை அவசியம்

சுய பரிசீலனை அவசியம்

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது புறநானூற்றுப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் வாக்கு! அதாவது நன்மைகள் வந்தாலும், தீமைகள் வந்தாலும், அவற்றுக்கெல்லாம் காரணம் நாம் தானே தவிர, பிறர் அல்ல. எனவே அந்த அரிய கருத்துகளையெல்லாம் எண்ணிப் பார்த்து இந்தத் தேர்தல் முடிவினை கட்சியினர் தம்மை கூர் தீட்டிக் கொள்ளவும், செம்மைப்படுத்திக் கொள்ளவும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்; ஒவ்வொருவரும் சுய பரிசீலனை (Self-Introspection) செய்து நாம் எங்கிருக்கிறோம் - என்ன செய்கிறோம் - அதன் விளைவுகள் என்ன - நமது பயணமும், பாதையும், கட்சியின் லட்சியங்களுக்கும், கொள்கைகளுக்கும் முழுவதுமாய் இயைந்த வகையில் இருந்திட எப்படிப்பட்ட சிந்தையும் செயலும் வேண்டுமென்று உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவே நாம் அடுத்து பெறப் போகும் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். இதுவே நான் வழங்கும் பிறந்த நாள் செய்தி.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Seeking to enthuse party cadres after the rout in the Lok Sabha polls, DMK chief M Karunanidhi urged them to "self-introspect" and ensure their words and deeds are in consonance with DMK's ideals.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X