ஐ.நா.வில் ராஜபக்சே உரையாற்றும் "செப்.25-ல்" கறுப்பு தினம் கடைபிடிக்க வேண்டும்: கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே உரையாற்றும் செப்டம்பர் 25-ந் தேதியன்று கறுப்பு தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

டெசோ தீர்மானம்
26-8-2014 அன்று என்னுடைய தலைமையில் நடைபெற்ற "டெசோ" கூட்டத்தில், நான்காவதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்; "இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரை, இலங்கைக்குள் அனுமதிக்க முடியாதென்று அறிவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை 25-9-2014 அன்று தொடங்கும் ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஐ.நா வின் மனித உரிமை ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினரையே அனுமதிக்க மறுத்த ராஜபக்சேவையோ, அந்த நாட்டின் வேறு எந்தப் பிரதிநிதியையோ ஐ. நா. வின் பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று "டெசோ" அமைப்பின் இந்த அவசரக் கூட்டம் ஐ.நா. வை கேட்டுக் கொள்கிறது" என்பதாகும்.

டெசோ ஆர்ப்பாட்டம்
முக்கியமான இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி செப்டம்பர் 3ஆம் நாள் சென்னையில் டெசோ அமைப்பின் சார்பிலேயே பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட "பெருந்திரள் ஆர்ப்பாட்டம்" ஒன்றும் நடத்தப்பட்டது.

மத்திய அரசும் வலியுறுத்தவில்லை
தீர்மானத்தில் நாம் வலியுறுத்தியிருந்தபடி ராஜபக்சேவை ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று நம்முடைய மத்திய அரசும் இதுவரை வலியுறுத்தவில்லை. ஐ.நா. பொதுமன்றமும் ராஜபக்சேவுக்கு அனுப்பிய அழைப்பினைத் திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை.

கறுப்பு தினம்
இந்த நிலையில், தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்டதுடன், வரலாறு காணாத அளவுக்கு மனித உரிமை மீறல்களையும் அரங்கேற்றிய அதிபர் ராஜபக்சே நமது "டெசோ" கூட்டத் தீர்மானத்தில் நிறைவேற்றிய கருத்துகளின் அடிப்படையில், வரும் செப்டம்பர் 25ஆம் தேதியன்று ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்வதைக் கண்டித்து உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், ஈழத் தமிழர் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் 25-9-2014 அன்று தத்தம் இல்லங்களில் கறுப்புக் கொடி ஏற்றி வைப்பதோடு - கறுப்புச் சட்டை அணிதல், கறுப்புச் சின்னம் அணிதல் ஆகியவற்றின் மூலம் ராஜபக்சேவுக்கு தமிழகத்தின் கடும் கண்டனத்தை எதிரொலித்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications