திருவாரூர் அருகே தேர் கவிழ்ந்து 2 பேர் பலி- உயிரிழந்தோர் குடும்பத்துக்கு கருணாநிதி இரங்கல்
சென்னை: திருவாரூர் மாவட்டம் திருக்கரவாசல் தேர் விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
திருக்காரவாசல் கிராமத்தில் கோவில் திருவிழாவினையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில், தேர் நிலையிலிருந்து கிளம்பிய சிறிது துரத்திலேயே தேரின் முன்பக்க வலது புற சக்கரம் திடீரென மண் தரையில் புதையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் சேறும் சகதியுமாக இருந்த மண் தரையில் 100 டன் எடையுள்ள தேரின் பாரம் அழுத்தியதால், சக்கரம் பூமிக்குள் இறங்கி, தேர் முன் பக்கமாக கவிழ்ந்துள்ளது.

அப்போது சக்கரத்துக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு வந்த கல்யாண சுந்தரம், முருகையன் ஆகியோர் தேருக்கு அடியில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இறந்து விட்டார்கள் என்ற செய்தியினை அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
உயிரிழந்த கல்யாணசுந்தரம், முருகையன் இருவருமே எனது திருவாரூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களின் மறைவால் பெரிதும் வருந்தும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்,












Click it and Unblock the Notifications