For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்: கருணாநிதிக்கு பதிலடி கொடுத்த ஓ.பி.எஸ்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்றத்திற்கே வராதவர் சட்டசபை கூட்டப்படுவது பற்றி பேச அருகதை இல்லை. சட்டசபையை எப்போது கூட்ட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவர் கருணாநிதியை சமீபத்தில் செய்தியாளர் ஒருவர் "சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார், தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டாமல் இருந்து வருகிறது" என தெரிவித்ததாகவும், அதற்கு கருணாநிதி "சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

Karunanidhi doesn't attend House proceedings: Tamil Nadu CM

சட்டப்பேரவை பற்றியோ, சட்டப்பேரவைக் கூட்டங்கள் பற்றியோ அல்லது சட்டப்பேரவை கூட்டப்பட வேண்டும் என்பது பற்றியோ பேசுவதற்கு ஒரு சிறிதளவேனும் அருகதை உள்ளவரே அதைப்பற்றி பேசலாம். சட்டப் பேரவைக்கே வராதவர் சட்டப்பேரவை கூட்டப்படுவது பற்றி பேசுவது, "அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்" என்னும் சொலவடையைத்தான் நினைவுபடுத்துகிறது.

சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி என்கிற தகுதியைக் கூட 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் திமுகவுக்கு வழங்கத் தயாராக இல்லை. தமிழக மக்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் கருணாநிதியும், திமுகவினரும் இழைத்த துரோகங்களைக் கண்டு நெஞ்சு பொறுக்காத தமிழ் மக்கள் தான் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் மக்களவைக்கு ஒரு உறுப்பினரைக் கூட தேர்வு செய்யாமல் பூஜ்யத்தை வழங்கினார்கள்.

இந்த பூஜ்யம் திமுக தலைவர் கருணாநிதியையும், அவரது தனயன் மு.க.ஸ்டாலினையும் படாதபாடு படுத்திக்கொண்டிருப்பதால் தான் அவர்களுக்கு எண்ணும் தெரியவில்லை; எழுத்தும் தெரியவில்லை. கண்ணிருந்தும் குருடராய் இருப்பதால் தான் ‘ஓ' என்னும் எழுத்தும் பூஜ்யமாய் தெரிகிறது.

கருணாநிதி சட்டமன்றத்திற்கு வர வேண்டுமென்றால், தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று கருதுபவர். எனவே தான் திமுக எதிர்க்கட்சியாய் இருக்கும் போதெல்லாம், அவர் தன்னை எதிர்க்கட்சித் தலைவராக, ஏன் ஒரு உறுப்பினராகக் கூட கருதிக் கொண்டதில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்று கூட அழைத்துக் கொள்ள இயலாத இந்த சட்டமன்றத்தில் கருணாநிதி அடியெடுத்து வைக்க எண்ணியதே இல்லை. கருணாநிதியைப் பொறுத்தவரை சட்டமன்றம் என்பதே தனது துதிபாடிகளால் நிறைந்த கூட்டமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர். மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுகின்ற அவையாகவோ, அறிவார்ந்த விவாதங்களை மேற்கொள்கின்ற இடமாகவோ, சட்டமன்றத்தை கருணாநிதி எப்பொழுதும் கருதியதில்லை. எனவே தான், திருவாரூர் தொகுதி மக்களின் பிரதிநிதி என்ற முறையில் இந்த சட்டமன்றத்திற்கு வந்து விவாதங்களில் பங்கெடுப்பது தனது கடமை என்று அவர் எண்ணியதே இல்லை.

கருணாநிதியைப் பொறுத்தவரையில் சட்டமன்ற தாழ்வாரத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவது தான் சட்டமன்ற உறுப்பினரின் ஒரே பணி; ஒரே கடமை. அந்தக் கையெழுத்தையும் ஏன் போடுகிறார் என்றால், சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோய்விடக்கூடாதே என்ற ஆதங்கத்தால் தான். சட்டமன்ற உறுப்பினரின் கடமையே பதிவேட்டில் கையொப்பம் இடுவதோடு முடிந்து விடுகிறது என்ற திடமான கொள்கை கொண்டுள்ள கருணாநிதி சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று எதற்காகக் குரல் கொடுக்கிறார் என்பதை அவர் தான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். சட்டமன்றப் பதிவேட்டில், சட்டப்படியான காலக்கெடுவுக்குள் கையெழுத்திட்டு, தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளை மட்டுமே கொண்டுள்ள கருணாநிதி, திடீரென்று கடமை உணர்வு பொங்கி எழுந்து விட்டதாகக் காண்பித்து, அதன் மூலம் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று எண்ணினால் அது நிறைவேறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருணாநிதி தனது 16.11.2014 அறிக்கையில் மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முயற்சிப்பது பற்றி தெரிவித்து அந்தப் பிரச்னை குறித்து சட்டப் பேரவையைக் கூட்டுவதற்கு இந்த அரசு தயாராக இல்லை எனத் தெரிவித்திருந்தார். அவரது வினாக்களுக்கு எல்லாம் பதில் அளித்து, எந்தப் பிரச்னைகளுக்கு எப்படி விடை காண வேண்டும் என்பது தமிழக அரசுக்கு நன்றாகத் தெரியும் என்று குறிப்பிட்டிருந்தேன். அது போல மேகதாது பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு 18.11.2014 அன்று மனு ஒன்றை தாக்கல் செய்ததையும் கருணாநிதிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

சட்டப் பேரவைக்கு ஒரு நாள் கூட வராத கருணாநிதி, அவரது தனயன் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னமும் சட்டப்பேரவையைக் கூட்டாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்திருப்பது ஏன் ஏன்று ஆழ்ந்து யோசித்தால் ஒரு உண்மை புலப்படும். தந்தைக்கும் தனயனுக்கும் உள்ள பனிப்போருக்கு சட்டமன்ற விவாதங்களும் ஒரு வடிகாலாக அமையும் என்றே கருணாநிதி எண்ணுகிறார் போலும்.

உதாரணத்திற்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்றால், தமிழக முன்னாள் முதலமைச்சர் மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை, நவீனமயமாக்கப்பட்ட சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் 2வது முனையத்திற்குச் சூட்டுமாறு இந்தியப் பேரரசை வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மாவால் 15.4.2013 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு அரசினர் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், மறைந்த மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆருடைய பெயரை நவீனமயமாக்கப்பட்டுள்ள சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்திற்குச் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இன்றைக்கு வலியுறுத்தி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தத் தீர்மானத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நானும் வரவேற்று அமைகிறேன்" என்று வரவேற்று பேசியுள்ளார்.

இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத கருணாநிதி, மறைந்த தலைவர்களுக்கு மாசு கற்பித்தல் கூடாது" என்னும் தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இரண்டாவது முனையத்தை வெறும் விரிவாக்கம் என்று புதிய விளக்கம் அளித்துள்ளார். அந்த அறிக்கையில், "தற்போது விரிவாக்கம் மட்டுமே செய்யப்பட்டிருப்பது உள்நாட்டு முனையம் தான். அதற்கு மற்றொரு பெயர் என்பது சற்றுக் குழப்பமாக உள்ளது. இந்த கருத்தை நான் மாத்திரமல்ல; பெருந்தலைவர் காமராஜரிடம் அன்பு கொண்டவர்களும் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்"" என்று தெரிவித்து, ஒரு ஆங்கில பத்திரிகையில், "இந்த விரிவாக்கத்திற்குப் பெயர் சூட்ட வேண்டுமென்ற கேள்வி எங்கே எழுகிறது? இது குழப்பத்தையே அதிகரிக்கும்" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் மூலம், சட்டப்பேரவையில் ஸ்டாலின் தீர்மானத்தை வரவேற்றது தவறு என்னும் பொருள்பட கருத்து தெரிவித்து, தனது தனயன் ஸ்டாலினுக்கு குட்டு வைத்தவர் கருணாநிதி. அது போன்றே, தற்போதும் சட்டப்பேரவையில் ஸ்டாலின் ஏதேனும் பேசினால், அவரை இடித்துரைக்கலாம் என்கிற நப்பாசையில் சட்டப்பேரவையை கூட்டாதது வருத்தமளிக்கிறது என கருணாநிதி தெரிவித்துள்ளார் போலும்.

சட்டப் பேரவை கூட்டப்படுவது குறித்து நான் ஏற்கெனவே தெளிவாகத் தெரிவித்துள்ளேன். அது பற்றி புரிந்தும் புரியாதது போல் நடிக்கும் கருணாநிதிக்கு அதே விளக்கத்தை மீண்டும் அளிக்க வேண்டியது எனது கடமை என கருதுகிறேன்.

"தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கடந்த கூட்டத் தொடர் 12.8.2014 அன்று தான் முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையும் இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தேர்தலுக்குப் பின்னரே எடுத்துக் கொள்ளப்பட்டது. எனவே, சட்டமன்றக் கூட்டத் தொடர் 12.8.2014 வரை நடைபெற்றது. 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது, மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசால் கூட்டப்பட்ட சட்டமன்றக் கூட்டத் தொடர் 21.7.2009 அன்று முடிவுற்றது. அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடர் 6.1.2010 அன்று தான் கூட்டப்பட்டது.

இந்திய அரசமைப்பின் படி ஒரு கூட்டத் தொடரின் கடைசி அமர்வுக்கும், அடுத்தக் கூட்டத் தொடரின் முதல் அமர்வுக்கும் என குறிப்பிடப்படும் தேதிக்கு இடையே உள்ள கால அளவு ஆறு மாதங்களுக்கு குறைவாக இருத்தல் வேண்டும். எனவே, சட்டமன்றக் கூட்டத் தொடர் எப்போது கூட்டப்பட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். சட்டமன்றக் கூட்டத் தொடர்களில் நடைபெறும் விவாதங்களில் எவ்வாறு பங்கெடுப்பது என்பதற்கு, திமுக, தனி இலக்கணமே வகுத்துள்ளது.

பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்வது, அதற்கு அமைச்சர்கள் பதிலளிக்கும் போது குழப்பம் விளைவிப்பது, வெளிநடப்பு செய்வது அல்லது சட்டமன்றத்தின் கண்ணியத்திற்கும் மாண்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டு வெளியேற்றச் செய்வது என்பது தான் கடந்த மூன்று ஆண்டுகளாக சட்டமன்றத்தில் திமுகவினர் பங்கேற்ற வரலாறு. இது போன்ற நாடகங்களை மீண்டும் அரங்கேற்றுவதற்குத் தான் ஸ்டாலின் துடிக்கிறாரா என்பதை அவர் தான் விளக்க வேண்டும்"" என்று ஸ்டாலினுக்கு நான் அளித்த விளக்கம் கருணாநிதிக்கு புரியவில்லை என்றால் அதை மீண்டும் ஒரு முறை படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Hitting back at Karunanidhi for pressing to convene the Assembly session, Tamil Nadu Chief Minister O Panneerselvam on Saturday said the Dravida Munnetra Kazhagam chief did not have the standing to make such a demand, as he hardly attended proceedings of the House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X