ஸ்டாலின், அழகிரி, தமிழரசு, ராசா அடுத்தடுத்து காவேரி மருத்துவமனை வருகை
Recommended Video

சென்னை: கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையில் அவரின் குடும்பத்தார் வரிசையாக குவிந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடைசியாக ஜூலை 31ம் தேதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் இன்று காலை சற்று பின்னடைவு ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சை கருணாநிதிக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று மதியம் தெரிவித்தார்.
இந்த தகவல் வெளியானதும், மருத்துவமனையில் வழக்கத்தைவிட திமுக தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. கருணாநிதியை வாழ்த்தி அவர்கள் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.
இதனிடையே, மாலை 4.30 மணியளவில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காவேரி மருத்துவமனைக்கு வந்தார். காலை முதல் மதியம் வரை மருத்துவமனையில் இருந்த அவர் வெளியே சென்ற நிலையில், திடீரென மாலை மீண்டும் வந்துள்ளார். இவரை தொடர்ந்து மு.க.அழகிரியும் காவேரி மருத்துவமனை வந்தார். மு.க.தமிழரசு, ஆ.ராசா ஆகியோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
திமுக மூத்த நிர்வாகிகள் ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, பெரியசாமி, கருணாநிதியின் தனிப்பட்ட மருத்துவர் கோபாலும் மருத்துவமனை வந்துள்ளனர்.
இதனால், காவேரி மருத்துவமனையில் அறிக்கைக்காக திமுக தொண்டர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications