ஏழு பேர் உயிர்ப் பிரச்சினையிலும் அதிமுக ஆட்சியில் வேஷம்தானா? கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக ஆட்சியில் நளினிக்கு பரோல் வழங்குவதற்கே தயங்குபவர்கள், ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். இவர்கள் உயிர்ப் பிரச்சினையிலும் வேஷம் தானா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி :- நளினிக்கு வழங்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது தி.மு. கழக ஆட்சியில். ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் அவருக்கு "பரோல்" கூட வழங்க முன் வருவதில்லையே?

karunanidhi has issues statement about tamilnadu government

கருணாநிதி:- நளினியின் தந்தை உடல் நிலை மோசமானதை அடுத்து, ஒரு மாத காலமாக "பரோல்" கேட்டுப் போராடியதாகவும், ஆனால் கிடைக்கவில்லை என்றும், அவர் இறந்த பிறகுதான் பரோல் கிடைத்தது என்றும் நளினியே ஒரு இதழ் பேட்டியிலே குறிப்பிட்டிருக்கிறார். தற்போதுகூட நளினி தந்தையின் 16வது நாள் சடங்குக்காக 3 நாள் பரோல் கேட்டதாகவும், ஆனால் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒரு நாள் மட்டுமே பரோலில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததாம்.

"பரோல்" வழங்குவதற்கே தயங்குபவர்கள் தான், அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் போட்டிருக்கிறார்களாம். வேடிக்கையாக இல்லையா? உயிர்ப் பிரச்சினையிலும், வேஷம்தானா?

கேள்வி :- தமிழ்நாட்டில் இந்த ஆட்சிக்கு எதிராக எது நடைபெற்றாலும், அதனை ஊடகங்களில் மறைக்கின்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகிறதே?

கருணாநிதி:- உண்மைதான். எப்படியாவது இந்த ஆட்சியை அரணாக இருந்து காப்பாற்ற வேண்டுமென்று ஒருசில பத்திரிகையாளர்கள் அலையாய் அலைகிறார்கள்; தவியாய்த் தவிக்கிறார்கள். எதிர்க் கட்சிகள் மீது ஏதாவது சிறு குற்றச்சாட்டுகளோ, அய்யப்பாடுகளோ எழுந்தால், அதனை ஊதிப் பெரிதுபடுத்தி பூதாகாரமாகச் செய்தி வெளியிடு கிறார்கள். அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் மீது மிகப் பெரிய குறைபாடுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் வந்தாலும், அதிலிருந்து ஆளுங்கட்சியை எப்படியாவது தப்ப வைக்கும் முயற்சியிலே தவறாமல் ஈடுபடுகிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று கூறுகிறேன், பாருங்கள்!

பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சில் அண்மையில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தமிழகம்தான் மிகவும் ஊழல்கள் நிறைந்த (Most Corrupt) மாநிலம் என்றும், உத்தரகாண்ட் மாநிலம் குறைந்தபட்ச ஊழல்கள் உள்ள (Least Corrupt) மாநிலம் என்றும்; ஆய்வில் கலந்து கொண்ட அனைவருமே எவ்வித கருத்து வேறுபாடுமின்றி தமிழகம்தான் மிகவும் ஊழல்கள் நிறைந்த மாநிலம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளார்கள்.

இந்தச் செய்தி 9-3-2016 அன்று "LIVE MINT" என்ற இணைய தள இதழிலும், "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளிதழிலும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மருந்துப் பொருள் விநியோகத்தில் தமிழ்நாடு 8வது இடத்திலும், ஆட்டோமொபைல்ஸ் தொழிலில் 6வது இடத்திலும் இருக்கும் தமிழ்நாடு, சிறுவணிகத்தில் மோசமாக 9வது இடத்திலும் உள்ளது. இந்த ஆய்வில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், இந்த அமைப்பின் ஆய்வில் பங்கேற்ற 100 சதவிகிதம் பேரும் தெரிவித்த ஒட்டுமொத்த கருத்து என்னவென்றால், தமிழ்நாடுதான் மிகவும் மோசமான லஞ்ச லாவண்யம் மிக்க மாநிலம் என்பதுதான். உண்மைகளை ஒளிவுமறைவின்றி நடுநிலையோடு வெளியிட்டு நாட்டு மக்களுக்கு ஒளியேற்ற வேண்டிய ஏடுகளில் ஒருசில, ஏன் இப்படிப்பட்ட பாரபட்சத்துடன் நடந்து கொள்கின்றன என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

கேள்வி :- சூரிய சக்தி மின்சார கொள்முதலிலும் தவறு நடந்ததாகக் கூறி நீதிமன்றம் வரை பிரச்சினை சென்றிருக்கிறதே?

கருணாநிதி:- சென்னை உயர் நீதிமன்றத்தில் "ராசி கிரீன்" நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் தனித்தனியாக வழக்குகள் தொடுத்திருக்கின்றன. அந்த வழக்குக்கான மனுவில், "எங்கள் நிறுவனங்கள் சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விதித்துள்ள நிபந்தனைகளை எங்கள் நிறுவனங்கள் பூர்த்தி செய்துள்ளன. மின்சாரக் கொள்முதல் தொடர்பாக நாங்கள் கொடுத்த விண்ணப்பங்களைப் பரிசீலிக் காமல், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத நிறுவனங் களிடமிருந்து சூரிய சக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

எனவே இந்த ஒப்பந்தத்துக்கு தடை விதிக்க வேண்டும். எங்கள் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்கள். இந்த மனுவினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தனியார் நிறுவனங்களிடமிருந்து சூரிய சக்தி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்தத் தடை உத்தரவை நீக்கக் கோரி தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.

அதில் 1,500 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை மட்டும் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட் டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ். சிவஞானம், பொதுமக்கள் நலன் கருதி 1,500 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரத்தை மட்டும் கொள்முதல் செய்யலாம் என்ற நிபந்தனையுடன் கடந்த மாதம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தார்.

ஆனால் சூரிய சக்தி மின்சாரக் கொள்முதலில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறி, மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தனியார் நிறுவனங்கள் ஐகோர்ட்டில் வழக்குகளைத் தற்போது தாக்கல் செய்துள்ளன. இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. மனுதாரர்கள் சார்பில் கழக வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டிருக்கிறார்.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், சூரிய சக்தி மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் எந்த அடிப்படையில் 31 தனியார் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டன என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட அறிக்கையை, உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் இரண்டு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டு மென்று நீதிபதி கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இந்த மின்சாரக் கொள்முதல் பிரச்சினைக்காக மட்டும் தனியே ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் போல் செய்திகள் வருகின்றன. அப்போது தான் இந்தத் தவறுக்கெல்லாம் யார் காரணம்? அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? என்பதெல்லாம் வெளியே வரும். அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரம் என்றாலே, "அதிர்ச்சி"தான்; மின்சாரக் கொள்முதல் என்றாலே, திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்மக்கதைதான்! இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+