For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மறக்கக் கூடாத சாரம் தோய்ந்த வார்த்தைகள்.. கருணாநிதியின் ஜெ. சொத்துக் குவிப்பு 'தொடர் கதை- 3'!

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் முன்பு தெரிவித்த, என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கக் கூடிய சட்ட நீதியின் சாரம் தோய்ந்த வார்த்தைகளையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுகவினருக்கு உடன்பிறப்பே என்று விளித்து முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக மினி தொடர்கதை போல கடிதம் எழுதி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி.

இதில் 2 அத்தியாயங்களை அவர் எழுதி விட்டார். தற்போது 3வது அத்தியாயக் கடிதத்தை வெளியிட்டுள்ளார். கருணாநிதி எழுதியுள்ள 3வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதாவது...

உடன்பிறப்பே

உடன்பிறப்பே

பெங்களூருக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டபோதே, இந்த வழக்கு முடியும் கட்டத்தில்தான் இருந்தது. ஒரு சில மாதங்களில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்ட ப்பட்ட வர்களின் அடுக்கடுக்காக வாய்தா வாங்கும் அபாரத் திறமை காரணமாக பத்தாண்டு காலமாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா ஆஜராகவில்லை

ஜெயலலிதா ஆஜராகவில்லை

28-3-2005 அன்று சாட்சிகளின் வாக்குமூலங்களும், வழக்கு ஆவணங்களும் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளுக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் வழங்கப்பட்டது. ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூரில் இரண் டாண்டுகளுக்குப் பிறகு தொடங்கியபோதும் ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

ஒரு மாதம் டைம் கேட்டார்கள்

ஒரு மாதம் டைம் கேட்டார்கள்

ஜெயலலிதா தரப்பில் ஒரு மாதம் அவகாசம் கேட்டார்கள். அப்போதைய சிறப்பு நீதிபதி பச்சாபுரே அவகாசம் தர மறுத்து, 18-4-2005க்கு வழக்கை ஒத்தி வைத்தார். 18ஆம் தேதியன்றும் ஜெயலலி, சசிகலா ஆஜராகவில்லை. ஜெயலலிதாவின் வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான மூத்த வழக்கறிஞரின் உதவியாளர், மூத்த வழக்கறிஞர் உடல் நலம் சரி இல்லாமல் மருத்துவமனையிலே இருப்பதாகக் கூறினார். அவர் வராமல் போகட்டும், குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேரும் எங்கே? குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாமல் இருப்பதை வைத்தே தீர்ப்பு வழங்கி விடுவேன் என்று கண்டிப்புடன் எச்சரிக்கை செய்தார் நீதிபதி.

இப்படியே 9 ஆண்டுகள் ஓடி விட்டன

இப்படியே 9 ஆண்டுகள் ஓடி விட்டன

(இவ்வாறு நீதிபதி 18-4-2005 அன்று தெரிவித்த பிறகும், ஒன்பதாண்டுகள் கடந்து முடிந்திருக்கின்றன. இன்னும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை என்பதுதான் நீதி பரிபாலன முறையின் வேடிக்கையான நிகழ்வு) இறுதியாக விசாரணையை 2005, மே 9ந்தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அன்று ஜெயலலிதா, சசிகலா உட்பட அனைவரும் கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

கடும் கோபமடைந்த நீதிபதி

கடும் கோபமடைந்த நீதிபதி

9-5-2005 அன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.டி. துளசி நீண்ட நாள் அவகாசம் கேட்டார். அப்போது ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிபதி பச்சாபுரே கடும் கோபமடைந்தார். "வருகிற 16ந்தேதி இறுதி அவகாசம் தருகிறேன், அதற்கு மேல் அவகாசம் தரமாட்டேன்" என்றும், "அன்று ஜெயலலிதா, சசிகலா உட்பட ஐந்து பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்" எனவும் உத்தரவிட்டார். அவரது வழக்கறிஞர்கள் அன்றையதினம் ஆஜராகி வழக்கைத் தள்ளி வைக்க வேண்டுமென்று கூறியபோது, நீதிபதி பச்சாப்புரே என்ன சொன்னார் தெரியுமா?

இப்படி வாய்தா கேட்டால் எப்படி

இப்படி வாய்தா கேட்டால் எப்படி

"நீண்ட அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. வழக்கை தினந்தோறும் நடத்தவுள்ளேன். இப்படி அடிக்கடி வாய்தா கேட்டால் எப்படி வழக்கை விரைவாக நடத்துவது? (ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தனக்கு வேறு நீதிமன்றங்களில் பணியிருப்பதாகக் கூறினார்) உங்களுக்கு பல கோர்ட்டுகளில் வேலை இருக்கும். உங்கள் ஒருவருக்காக இந்த வழக்கை தள்ளி வைக்க முடியுமா? இது நியாயமற்றது. பல ஆண்டுகளாக இந்த வழக்கு முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இப்படி அடிக்கடி அவகாசம் கேட்பதை ஏற்க முடியாது. இரண்டரை ஆண்டுகளாக வழக்கை வாய்தா கேட்டு இழுத்தடித்து விட்டு தற்போது மீண்டும் வாய்தா கேட்பது சரிதானா? சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கை விரைவாக நடத்த வேண்டுமென்று எனக்கு உத்தர விட்டு உள்ளது. கடந்த ஆறு மாதமாக இந்த வழக்கில் எந்த விசாரணையும் நடக்கவில்லை. நான் தனியாக கடந்த ஆறு மாதமாக நீதிமன்றத்தில் உட்கார்ந்து வருகிறேன். தனிச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது போல உணருகிறேன்" என்று நீதிபதி பச்சாப்புரே மனம் நொந்து அப்போதே சொன்னார்.

நகல் கேட்டு மனு

நகல் கேட்டு மனு

ஆனால் 16ம் தேதியன்றும் யாரும் ஆஜராகவில்லை. மாறாக அ.தி.மு.க. வழக்கறிஞர், லண்டன் சொத்துக் குவிப்பு வழக்கில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை நகல்களை தங்களுக்குத் தர வேண்டுமென்றும், அதன் பிறகுதான் வழக்கு விசாரணை நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். அப்போது, நீதிபதி, "வழக்கை இழுத்தடிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக இப்படி லண்டன் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப் பத்திரிகை நகலைத் தரவேண்டும் என்று கேட்கிறீர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இவ்வளவு நாட்களும் இத்தனை வாய்தா கேட்கும்போது ஏன் இதைக் கேட்கவில்லை. தற்போது கேட்பது நியாயமற்றது. இருந்தாலும் நான் நகல்களை உடனே தருகிறேன், நாளைக்கு வாதாட நீங்கள் தயாரா?" என்றார்.

3 வார வாய்தா

3 வார வாய்தா

(நீதிபதியின் ஆணையின் பேரில் உடனடியாக குற்றப்பத்திரிகை நகல் தரப்பட்டவுடன், அது 1800 பக்கங்கள் கொண்டதாக உள்ளது என்றும், வழக்கை 3 வார காலத்திற்குத் தள்ளி வைக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா வின் வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டார்கள்) 3 வார வாய்தாவிற்கு நேரம் கொடுக்க மறுத்து நீதிபதி விசாரணையை 25-5-2005ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும்

ஒன்றாக சேர்த்து விசாரிக்க வேண்டும்

இதற்கிடையே 27-6-2005 அன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 11-2-2002இல் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்து நிலுவையில் இருந்த ஒரு மனுவினை அதாவது - இந்தச் சொத்துக் குவிப்பு வழக்குடன் லண்டனில் ஓட்டல் வாங்கிய வழக்கையும் இணைத்து ஒன்றாக விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை, பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, அவ்வாறு விசாரிக்க உத்தரவிட்டது.

சேர்த்ததை எதிர்த்து திமுக வழக்கு

சேர்த்ததை எதிர்த்து திமுக வழக்கு

இவ்வாறு இரண்டு வழக்குகளையும் சேர்த்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜூலை 2005இல் ஒரு மனு கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. முதலில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், பிறகு சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணையைத் தொடரலாம் என்று உத்தரவிட்டது. ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை காலவரம்பின்றி நீடித்துக் கொண்டே போவதில் சட்ட விதிமுறைகளை மதிக்காமல் எப்படியெல்லாம் செயல்பட்டார்கள் என்பதை நினைவிலே கொள்வது அவசியம்.

42 அரசு சாட்சிகளுக்கு சம்மன்

42 அரசு சாட்சிகளுக்கு சம்மன்

நான்காண்டுகளுக்கும் மேலாகத் தாமதப்படுத்தப்பட்டு வந்த இந்த வழக்கு விசாரணையில், 3-3-2010 அன்று 42 அரசு சாட்சிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டதை மாற்றம் செய்யக் கோரி குற்றவாளிகள் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தனர். 5-3-2010 அன்று இந்த மனுவினை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதே மார்ச் திங்களில்; சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் 5-6-1997இல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மனு ஒன்றினை குற்றவாளிகள் தாக்கல் செய்தனர். 10-3-2010 அன்று இந்த மனுவும் கர்நாடக உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

நாள் குறித்த நீதிமன்றம்

நாள் குறித்த நீதிமன்றம்

கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதி மன்றத்தில் 19-3-2010 அன்று மனு தாக்கல் செய்தனர். அப்போது இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் தெரிவித்த வழிகாட்டுதல்படி, தேதிகள் மற்றும் விசாரணையை மறு பட்டியலிட்டு 3-5-2010 அன்று வழக்கை மீண்டும் துவக்க 22-3-2010 அன்று நாள் குறித்தது விசாரணை நீதிமன்றம்.

புதிதாக ஒரு முட்டுக்கட்டை

புதிதாக ஒரு முட்டுக்கட்டை

இந்த வழக்கின் விசாரணை அதிகாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை, எனவே விசாரணை முழுவதும் சட்ட விரோதமானது, வழக்கு விசாரணை முழுவதையும் அத்துடன் நிறுத்த வேண்டுமென்று குற்றவாளிகள் 18-4-2010 அன்று ஒரு மனுவினைத் தாக்கல் செய்தனர். ஆனால் இந்த மனுவை 27-4-2010 அன்று விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனை எதிர்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை உயர்நீதிமன்றத்தில் குற்ற நடைமுறைச் சட்டம் 482இன் படி தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்ததை அடுத்து, இந்த மனு திரும்பப் பெறப்பட்டது.

படிகள் கேட்ட ஜெயலலிதா

படிகள் கேட்ட ஜெயலலிதா

மீண்டும் 7-5-2010 அன்று, முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 11-5-2010இல் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு பற்றிய விசாரணை வருகிறது என்றும், அதனால் வழக்கை விசாரணை நீதிமன்றத்தில் ஒத்தி வைக்க வேண்டும் என்றும் ஒரு கோரிக்கையினை வைத்து, அதன் காரணமாக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதே ஆண்டில், மே திங்களில் 70 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில் கண்ட ஆவணங்களின் மூன்று படிகள் தேவை என்று முதல் குற்றவாளியான ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். 26-6-2010 அன்று அவர் கேட்டவாறே ஆவணங்கள் வழங்கப்பட்டன.

தேவையில்லை என்று மனு செய்த ஜெயலலிதா

தேவையில்லை என்று மனு செய்த ஜெயலலிதா

15-7-2010 அன்று முதல் குற்றவாளியான ஜெயலலிதா ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட நகல்கள் தேவையில்லை என்று மனு தாக்கல் செய்தார். 21-7-2010 அன்று மூன்றாவது குற்றவாளியான சுதாகரன் சார்பிலும், அதே மனு தாக்கல் செய்யப்பட்டது. 22-7-2010 அன்று இந்தக் கோரிக்கை சில வழிகாட்டுதல்களுடன் நிராகரிக்கப்பட்டது. எனவே 29-7-2010 அன்று முதல் குற்றவாளியான ஜெயலலிதா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

ஆணை பிறப்பித்தும் நடக்கவில்லை

ஆணை பிறப்பித்தும் நடக்கவில்லை

நீதிமன்றத்தில் சாட்சிகள் ஆஜராகியிருந்த போதிலும், குற்றவாளிகள் வழக்கை ஒத்தி வைக்கக் கேட்டுக் கொண்டதால், வழக்கு விசாரணை 6-8-2010, 9-8-2010, 11-8-2010, மற்றும் 13-8-2010 ஆகிய தேதிகளில் சாட்சிகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், அது நடக்கவில்லை. மொழி பெயர்க்கப்பட்ட நகல்கள் சம்பந்தமாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா செய்து கொண்ட மேல் முறையீட்டு மனு நிலுவையில் இருந்ததால், தனி நீதிமன்றம் விசாரணையைத் தொடர்ந்து ஒத்தி வைக்க நேரிட்டது.

மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு

மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு

19-10-2010 அன்று விசாரணையின் போது, குற்றவாளிகள் வழக்கை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டுமென்று கோரினர். அவர்களது கோரிக்கையினை விசாரணை நீதிமன்றம் நிராகரித்து, சாட்சிகளை மறு விசார ணைக்கு 16-11-2010 அன்று ஆஜராகும்படி உத்தரவிட்டது. 16-11-2010 அன்றும் குற்றவாளிகள் விசார ணையை ஒத்தி வைக்க வேண்டுமென்று மீண்டும் கோரினர். அந்தக் கோரிக்கையையும் விசாரணை நீதிமன்றம் நிராகரித்து, 18-11-2010க்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

எத்தனை கோரிக்கை.. எத்தனை ஒத்திவைப்பு

எத்தனை கோரிக்கை.. எத்தனை ஒத்திவைப்பு

18-11-2010 அன்று குற்றவாளிகள், தாங்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருப்பதாகவும், உயர்நீதி மன்றம், விசாரணை நீதிமன்ற விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து, விசாரணை நீதிமன்றம் 25-11-2010க்கு ஒத்தி வைத்தது. 23-11-2010 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம், குற்றவாளிகளின் கோரிக்கையை நிராகரித்தது. 25-11-2010 அன்று உயர்நீதி மன்றத்தின் உத்தரவு விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு, விசாரணை நீதிமன்றம் தனது விசாரணையை 30-11-2010க்கு ஒத்தி வைத்தது. 30-11-2010 அன்று குற்றவாளிகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்ததின் அடிப்படையில், 15-12-2010க்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

விசாரணை- குறுக்கு விசாரணை

விசாரணை- குறுக்கு விசாரணை

15-12-2010 அன்று இரண்டு சாட்சிகளின் மறு விசாரணையும், மறு குறுக்கு விசாரணையும்; 16-12-2010 அன்று மூன்று சாட்சிகளின் மறு விசாரணையும், குறுக்கு விசாரணையும்; 3-1-2011 அன்று நான்கு சாட்சிகளின் மறு விசாரணையும், குறுக்கு விசாரணையும்; 4-1-2011 அன்று இரண்டு சாட்சிகளின் மறு விசாரணையும், குறுக்கு விசாரணையும் நடைபெற்றன. சாட்சியத்தை மொழி பெயர்த்ததில் பிழைகள் இருப்பதாகவும், குற்றவாளிகள் தரப்பில் சரியான மொழி பெயர்ப்பைச் செய்து, தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டதால், விசாரணை நீதிமன்றம் 18-1-2011க்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

கோரிக்கைகள் நிராகரிப்பு

கோரிக்கைகள் நிராகரிப்பு

18-1-2011 அன்று குற்றவாளிகள் தரப்பில் வழக்கறிஞர் ஒருவரின் தந்தையார் இறந்து விட்டதால், வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென்று கோரப்பட்டு, அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அன்றையதினம் 5 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். குற்றவாளிகள் தரப்பில் குறுக்கு விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டு, அதுவும் நிராகரிக்கப்பட்டது.

அரசு வக்கீலின் வாதம் நிறைவு

அரசு வக்கீலின் வாதம் நிறைவு

19-1-2011 அன்று மூன்று சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். குற்றவாளிகள் தரப்பில் குறுக்கு விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டுமென்று மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டு, அந்தக் கோரிக்கை நிராகரிக் கப்பட்டது. அதே நாளில் அரசு சிறப்பு வழக்கறிஞர் தன்னுடைய தரப்பு வாதத்தை நிறைவு செய்ததாகப் பதிவு செய்தார். குற்றவாளிகள் தரப்பில் சாட்சியங்களைப் படித்துப் பார்ப்பதற்கு கால அவகாசம் கேட்கப்பட்டு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தாமதப்படுத்தி.. வாய்தா மேல் வாய்தா

தொடர்ந்து தாமதப்படுத்தி.. வாய்தா மேல் வாய்தா

இதுவரை நான் விவரித்தவாறே, தொடர்ந்து வழக்கு விசாரணையை கால வரையறையின்றி தாமதப்படுத்து வதற்காக, குற்றவாளிகள் வாய்தாவுக்கு மேல் வரிசையாக வாய்தா வாங்கி காலம் கடத்தி வந்தனர். இறுதியில் விசாரணை சிறப்பு நீதிபதியின் கண்டிப்பான நடவடிக்கைகளின் காரணமாக வேறு வழியில்லாமல் அரசு வழக்கறிஞர் சாட்சியங்களைத் தொகுத்துப் படிக்கத் தொடங்கினார்.

அரசு வழக்கறிஞர் என்பவர் யார்...

அரசு வழக்கறிஞர் என்பவர் யார்...

அரசு வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதாட வேண்டியவர். கடந்த காலத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுசரணையாக அரசு வழக்கறிஞர் நடந்து கொண்டதையெல்லாம் உச்ச நீதிமன்றமே 2003ஆம் ஆண்டில் தனது தீர்ப்பில் எடுத்துக்காட்டி, வழக்கை கர்நாடகாவிற்கு மாற்றிய பிறகும், 2-2-2013 அன்று கர்நாடக அரசினால் நியமனம் செய்யப்பட்ட அரசு வழக்கறிஞர் பவானி சிங், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் பின்பற்றப்பட்ட அதே பாணியில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடுகிறார் என்று தி.மு.க. சார்பில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை நீக்க வேண்டுமென்று தி.மு.க. கோரியது.

பவானி சிங் நீக்கம்

பவானி சிங் நீக்கம்

கர்நாடக மாநில அரசும், அந்தக் குற்றச்சாட்டினை ஏற்றுக் கொண்டு அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து பவானி சிங்கை நீக்கி உத்தரவிட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றம் வரை சென்று, தங்களுக்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞராக பவானி சிங்தான் நீடிக்க வேண்டுமென்றும், நீதிபதியாக ஓய்வு பெற்று செல்கிற நீதிபதி பாலகிருஷ்ணா அவர்கள்தான் இந்த வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்றும் வாதாடினார்கள்.

விசித்திரம்- ஆச்சரியம் - அதிர்சசி

விசித்திரம்- ஆச்சரியம் - அதிர்சசி

இந்த விசித்திரத்தைக் கண்டு சட்ட நெறி முறைகளில் நம்பிக்கை கொண்டோர் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணா தொடர்ந்து இந்த வழக்கினை விசாரிக்க முன்வராத நிலையில், தற்போது இந்த வழக்கினை நீதிபதி மைக்கேல் டி. குன்கா விசாரித்து வருகிறார்.
நீதிபதி பாலகிருஷ்ணா அவர்களே சொத்துக் குவிப்பு வழக்கினைத் தொடர்ந்து நடத்த வேண்டுமென்று ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றம் வரை சென்றது தொடர்பாக எனக்கு வேறொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஏற்கனவே கூட அதைத் தெரிவித்திருக்கிறேன்.

கோடநாடு எஸ்டேட்

கோடநாடு எஸ்டேட்

"கோடநாடு எஸ்டேட்" பற்றி உச்சநீதிமன்றத்தில் 4-4-2008 அன்று சொல்லப்பட்ட ஒருதீர்ப்பு அப்போதே "இந்து" நாளிதழில் வெளி வந்தது. நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வந்த சாலையில் தடுப்பு (கேட்) ஒன்றை அமைத்து, அந்த வழியாக யாரும் செல்ல முடியாத அளவிற்கு கோடநாடு எஸ்டேட் மானேஜர் தடுப்பதாகவும், அந்தத் தடுப்பினை நீக்கிட வேண்டுமென்றும் கூறி, பொதுமக்கள், கோட்ட வருவாய் அலுவலரிடம் (சப்-டிவிஷனல் மேஜிஸ்திரேட்) முறையிட்டு; அவர் அப்போது பிறப்பித்த ஆணையில், சாலையில் உள்ள அந்தத் தடுப்பினை அகற்றவும், அதையும் 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றிட வேண்டுமென்றும், தவறினால் இந்திய தண்டனைச் சட்டப்படி நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

வழக்கு மாற்றத்தை எதிர்த்த ஜெ., சசி

வழக்கு மாற்றத்தை எதிர்த்த ஜெ., சசி

அந்த உத்தரவை எதிர்த்து கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில், அதன் மேலாளர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுத்தார். அந்த வழக்கு விசாரணைக்காக முதலில் ஒரு நீதிபதியிடம் போடப்பட்டு, அவர் அந்தக் குறிப்பிட்ட வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு, பின்னர் அந்த வழக்கு வேறொரு நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு வழக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா தரப்பினர் அப்போதே உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் முறையிட்ட போது, "நீதிபதியை நிர்ணயம் செய்வது என்பது தலைமை நீதிபதியின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்" என்று உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆணையிட்டார். அத்துடன் விட்டார்களா என்ன?

வேட்டையாடுகிறீர்களா..

வேட்டையாடுகிறீர்களா..

அந்த ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திற்கு கோடநாடு எஸ்டேட் மேலாளர் மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு தான் 4-4-2008 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் முன்பு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கோடநாடு எஸ்டேட் மேலாளருடைய கோரிக்கை நியாயம் அற்றது என்றும், இதுபோன்ற வழக்குகளை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் கூறினார்.
உச்சநீதிமன்ற நீதிபதி, கோடநாடு எஸ்டேட் வழக்கறிஞரைப் பார்த்து, "உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களுக்கு இந்த நீதிபதிதான் வேண்டுமென்று வேட்டை ஆடுகிறீர்களா? உங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குத் தெரியும். ஒரு குறிப்பிட்ட நீதிபதிதான் உங்களுடைய வழக்கை விசாரிக்க வேண்டுமென்று கோருவதற்கு உங்களுக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது" என்றும் சொல்லியிருக்கிறார்.

சாரம் தோய்ந்த வார்த்தைகள்

சாரம் தோய்ந்த வார்த்தைகள்

என்றென்றும் நினைவில் நிலைத்திருக்கக் கூடிய சட்ட நீதியின் சாரம் தோய்ந்த இந்த வார்த்தைகளை யெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்கக் கூடுமென்றுதான் சிலர் எண்ணுகிறார்கள். பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் குறிப்பிட்ட நீதிபதிதான் அந்த வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு, புதிய நீதிபதி ஒருவர் அங்கே விசாரணையை மேற்கொண்டு வருகிறார். நீதிபதி பாலகிருஷ்ணாதான் சொத்துக் குவிப்பு வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் கோரிக்கை வைத்து, அது நிறைவேறாமல் போனபோதே சட்டம் தன் கடமையைச் சிறப்பாகச் செய்கிறது என்றுதான் எல்லோராலும் கருதப்பட்டது.

பவானி சிங்... ஆழமாக பொதிந்துள்ள உண்மைகள்.. கருணாநிதியின் 'தொடர் கதை பாகம் 4'

English summary
DMK president Karunanidhi has writter his 3rd letter to DMK men on Jayalalitha DA case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X