வாக்காளர்களுக்கு லஞ்சம் தருவதை தடுக்கும் சட்டத் திருத்தம்... கருணாநிதி எழுப்பும் சந்தேகங்கள்!
சென்னை: வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்டவற்றை லஞ்சமாக தருவோருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம் நல்லதுதான், வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால் அதில் சந்தேகங்கள் எழுகின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
உள்ளாட்சித் தேர்தல் முதல், மக்களவை தேர்தல் வரை வாக்காளர்களுக்குப் பணம்மற்றும் பரிசுப் பொருள்களைக் கொடுக்கும் போக்கினை ஆளுங்கட்சிக்காரர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமான தேர்தலில், இப்படிப்பட்ட முறைகேடுகளைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் பல முயற்சிகள் எடுத்தாலும், அது உரிய பலனைத் தரவில்லை.

தற்போதுள்ள சட்டப்படி, வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பொருள் லஞ்சமாகக் கொடுப்பது குறித்துப் புகார் செய்யப்படுவதன் அடிப்படையில் வழக்குபதிவு செய்யலாம். இதில் குற்றம் நிரூபிக்கப் பட்டால், குற்றவாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் ஓரிடத்தில் ஏராளமான பணம் பதுக்கி வைக்கப் பட்டிருப்பதாக உறுதியான தகவல் வந்தாலும், வாரண்ட் இல்லாமல் அந்த இடத்தைச் சோதனை போட முடியாத நிலை தான் தற்போது நிலவுகிறது.
இவற்றைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்ப வர்களை வாரண்ட் இல்லாமல் கைது செய்யும் அதிகாரத்தைப் போலீசாருக்குக் கொடுக்கும் வகையிலும், சிறைத் தண்டனையை இரண்டாண்டுகளாக உயர்த்தும் வகையிலும் சட்டம் கொண்டு வர வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்ததோடு, அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டுக் கடிதமும் அனுப்பியிருந்தது.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய பதில் கடிதத்தில்தான், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சட்டத் திருத்த வரைவு தயார் செய்யும்படி சட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது தயாரானால், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இரண்டாவது வாரத்தில் அது தாக்கல் செய்யப்படலாம் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால், வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பவர்களை புகார் இல்லாமல், தேர்தல் அதிகாரி நேரில் பிடித்து வழக்கு பதிவு செய்ய முடியும். போலீசார் வாரண்ட் இல்லாமலே குற்றவாளியைக் கைது செய்து நீதி மன்றத்தின் அனுமதி இல்லாமல் விசாரணையைத் தொடங்க முடியும்.
பொதுவாக இந்தச் சட்டத் திருத்தத்தை நான் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். எனினும் இதில் காவல் துறைக்கு மிகையான அதிகாரத்தை வழங்குவதைப் போல உள்ள சொற்றொடர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றன. ஏனென்றால் தற்போது காவல் துறையினர் மனசாட்சிப்படி நடந்து கொள்வதாகக் கூறிக் கொண்டாலும், ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவே இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை.
எனவே ஆளுங்கட்சியினரே வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கின்ற நிலைமையில் அதன் மீது நேர்மையான நடவடிக்கை எடுக்கக் காவல் துறை முன் வருமா என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்படுவது இயற்கையே! அப்படி ஒருசிலர் நடவடிக்கை எடுக்க முன் வந்தாலும், ஆளுங்கட்சியும், மேலதிகாரிகளும் குறுக்கிடாமல் அனுமதிப்பார்களா? என்பன போன்ற கேள்விகள் விவாதத்திற்கு உரியவை.
மத்திய அரசு இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு முன், இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நல்ல விடை காணும் வகையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடம் கலந்து பேசி ஆலோசனைகளைப் பெற்று நிறைவேற்ற வேண்டுமென நான் வலியுறுத்துகிறேன்.
மேலும் இந்தச் சட்டத் திருத்தம் வருகின்ற நேரத்தில் இந்தியாவில் பல்லாண்டுகளாகப் பலராலும் சொல்லப்பட்டு வருகின்ற விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பற்றியும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். ஏற்கனவே நான் இதுபற்றி கூறும்போது, உலகத்தில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்க நாடுகள் நீங்கலாக, ஏனைய நாடுகள் பலவும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையைத் தான் கடைப்பிடிக்கின்றன.
அந்த முறைப்படி தேர்தல் நடைபெறும்; கட்சிகள் போட்டியிடும். தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்கு வீதத்துக்கு ஏற்ப, நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சிகளுக்குப் பிரதிநிதித்துவம் கிடைக்கும். தொகுதிகளுக்கான உறுப்பினர்களை, கட்சி தேர்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பும். இப்படிப்பட்ட விகிதாச்சார முறை தான் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று பேரறிஞர் அண்ணா அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னார்கள்.
இதுவரை ஏற்றுக் கொள்ளப்படாத இந்தக் கருத்து இப்போது பல தேசியக் கட்சிகளாலும் வலியுறுத்தப்படுகிறது என்று நான் தெரிவித்ததையும் ஆழ்ந்து பரிசீலனை செய்திட வேண்டுமென விரும்புகிறேன்.
குறிப்பாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், நேர்மையான அதிகாரியாக இருந்து மிகச் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றியவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவருமான ஜே.எம். லிங்டோ அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் தற்போது பிரச்சாரச் செலவுக்கான உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. எனினும், அந்த அளவைத் தாண்டி வேட்பாளர்கள் செலவு செய்வதால், தேர்தல் செலவுக்கான உச்ச வரம்பு என்பதே கேலிக் கூத்தாகி விட்டது. எனவே தற்போதுள்ள தேர்தல் நடைமுறையை மாற்ற வேண்டும். இதில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
அந்த முறை கொண்டு வரப்பட்டால் தேர்தலில் யாரும் பெரும் தொகையைச் செலவு செய்ய மாட்டார்கள். விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் அரசியல் கட்சிகள் தான் போட்டியிடும்; வேட்பாளர்கள் யாரும் போட்டியிட மாட்டார்கள். இதனால் தேர்தலில் பண பலத்தின் தாக்கம் குறையும். எனவே, அந்த முறையை அறிமுகம் செய்வது குறித்து நாம் முயற்சித்துப் பார்க்கலாம் என்று லிங்டோ அவர்கள் தன்னுடைய நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் தெரிவித்திருக்கும் கருத்துகள் மத்திய அரசு சீரிய கவனத்தில் கொள்ள வேண்டியவை.
எனவே வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மத்திய அரசு இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும்போது, என்னுடைய இந்தக் கருத்துகளையும் மனதிலே கொண்டு, விரிவான விவாதத்துக்கு வழி வகுத்து, நேர்மையான, முறையான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications