ஸ்மால் பஸ்களில் இரட்டை இலை பெரும் தவறு... கருணாநிதி
சென்னை: திமிழக அரசு சென்னையில் தொடங்கியுள்ள ஸ்மால் பஸ் எனப்படும் பேருந்துகளில் இரட்டை இலை சின்னம் பெரிதாக பொறிக்கப்பட்டிருப்பது பெரும் தவறு என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இந்த பதிலை அளித்துள்ளார். மேலும், புதிய பேருந்துகள் தொடக்க விழாவின்போது முதல்வர் ஜெயலலிதா சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கும் திமுக தலைவர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.
கருணாநிதியின் கேள்வி - பதில்கள் விவரம்...

பெரும் தவறு
கேள்வி: ஏற்கனவே இந்த அரசின் சார்பில் தொடங்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டதைப் போல நேற்றைய
தினம் முதல்வர் தொடங்கிய அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் எல்லாம் இரட்டை இலை சின்னம் பெரிதாகப் பொறிக்கப்பட்டிருக்கிறதே?
பதில்: அது பெரும் தவறு.
6,000 பேருந்துகளை வாங்கி முடித்து விட்டார்களா ?
கேள்வி: புதிய பேருந்துகளைத் தொடங்கி வைக்கும் விழாவில் உரையாற்றிய முதல்வர் வழக்கம் போல கடந்த கால திமுக ஆட்சியைக் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?
பதில்: 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 4-8-2011 அன்று படிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் 2011-2012ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவித்தார்கள். மீண்டும் 2012-2013ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 26-3-2013 அன்று தாக்கல் செய்த போது, 2012-2013ஆம் ஆண்டிலும் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று படித்தார்கள். தற்போது ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளா கிவிட்டன. அறிவித்த 6,000 பேருந்துகளையாவது வாங்கி முடித்து விட்டார்களா என்றால் கிடையாது. இதுவரை 3,051 பேருந்துகள்தான் வாங்கப்பட்டுள்ளன.

ஓய்வூதிய ஒப்படைப்பு பெருமையா...?
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்குவதைப் பெருமையாக முதல்வர் சொல்லிக் கொண்டிருக்கிறார். எந்த ஆட்சி பொறுப்பேற்றாலும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்குவது என்பது சாதாரண நடைமுறை. தி.மு.கழக ஆட்சி இருந்த போதுகூட நிலுவையில் இருந்த ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகையும், விடுப்பு ஒப்படைப்புத் தொகையும் முறையாக வழங்கப்பட்டது. அதாவது பணியிலிருந்து ஓய்வு பெற்ற இந்தத் துறையைச் சேர்ந்த 6,278 தொழிலாளர்களுக்கு 31-7-2009 வரை நிலுவையில் இருந்து வழங்கப்படவேண்டிய ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை ஏறத்தாழ 115 கோடி ரூபாய் கழக அரசினால் வழிவகை முன்பணமாக வழங்கப்பட்டது. புதிதாக பணிக்கு வந்த 53 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தையே தன்னிச்சையாக அ.தி.மு.க. அரசு மாற்றியதை, அந்தத் தொழிலாளர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

ஊதிய ஒப்பந்தத்தை மாற்றினார்கள்
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கழக ஆட்சியில் போடப்பட்டது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அதனை ஐந்தாண்டுகள் என்று மாற்றினார்கள். ஆனால் மீண்டும் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகு மூன்றாண்டுகள் 2 என்று திருத்தி அமைக்கப்பட்டது. அந்த உத்தரவாதத்தின்படி இதற்குள் போக்கு வரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னமும் அதனைச் செய்யாமல் தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன காரணம்...?
அதற்குக் காரணம், தேர்தலில் எந்தத் தொழிற்சங்கம் அதிகப்படியான வாக்குகளைப் பெறுகிறதோ அதை மட்டுமே ஊதிய உயர்வுப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கவேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பின்படி, நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. மட்டுமே 57 சதவிகித வாக்குகளைப் பெற்று, அங்கீகாரம் பெற்றச் சங்கமாக உள்ளது. எனவே பேச்சுவார்த்தை நடத்தினால், தி.மு.க. சங்கத்தை அழைக்க வேண்டும் என்பதற்காகவே ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை நடத்தாமல் அ.தி.மு.க. காலதாமதம் செய்கிறது.

புதிய பேருந்துகள் வாங்குவது சாதனையா...?
புதிய பேருந்துகள் வாங்குவதை ஒரு சாதனையாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். 2001-2002 முதல் 2005-2006 வரையிலான ஐந்தாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய பேருந்துகள் 5,608 மட்டுமே. 2006-2007 முதல் 2010-2011 வரை ஐந்தாண்டுகளில் தி.மு. கழக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட புதிய பேருந்துகள் 15,137. அ.தி.மு.க. ஆட்சியைவிட, தி.மு.கழக ஆட்சியில் மூன்று மடங்கு அதிகமான புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன.

அதிமுக ஆட்சியை விட 10 மடங்கு அதிக வழித்தடங்கள்
2001 முதல் 2005 வரையிலான ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வழித்தடங்கள் 156. ஆனால் 2006 முதல் 2011 வரையிலான ஐந்தாண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வழித் தடங்கள் 1,628. அ.தி.மு.க. ஆட்சியைவிட, தி.மு.கழக ஆட்சியில் பத்து மடங்கு அதிகமான புதிய வழித்தடங்கள்.

தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறார்
மேலும் முதல்வர் ஜெயலலிதா நேற்றைய உரையில் அவருடைய ஆட்சியில் 16,661 ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றும், பணியில் இருக்கும்போது இறந்துபோன பணியாளர்களின் 346 வாரிசுகள் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் தன்னைத்தானே பாராட்டிக் கொண்டுள்ளார். கழக ஆட்சியில் ஐந்தாண்டு களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக போக்குவரத்துத் துறையில் 43,592 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க. ஆட்சியைவிட தி.மு.கழக ஆட்சியில் இரண்டரை மடங்குக்கு அதிகமானோர் புதிதாகப் பணியிலே அமர்த்தப்பட்டார்கள்.

திமுக ஆட்சியில் 3 மடங்கு அதிகமானோருக்கு பணி
கருணை அடிப்படையில் 1,183 பேர் பணி நியமனம் கழக ஆட்சியில் பெற்றார்கள். அ.தி.மு.க. ஆட்சியைவிட, தி.மு. கழக ஆட்சியில் மூன்று மடங்குக்கும் அதிகமானோர் பணி நியமனம் பெற்றார்கள். போக்குவரத்துக் கழகங்களை நாட்டுடைமை ஆக்கியதே தி.மு. கழக ஆட்சிக் காலத்தில்தான் என்பது சரித்திரம் மறக்காத சோஷலிசச் சாதனையாகும்.

வழக்கம் போல படித்த அறிக்கை
தமிழ்நாட்டில் போக்குவரத்துக் கழகங்களில் இயக்கப்படும் பேருந்துகளின் பராமரிப்பிற்காக புதிதாக 68 பணிமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் நேற்று பேசியிருக்கிறார். 9-5-2012 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் வழக்கம் போல முதல்வர் ஜெயலலிதா படித்த 110வது விதியின் கீழான அறிக்கையில், திருவரங்கம், திண்டுக்கல், தேனி, காரைக்குடி, கரூர், ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய ஏழு இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படும் என்று மகிழ்ச்சியோடு அறிவிப்பதாகச் சொல்லிக் கொண்டார்.

இவ்வளவு அறிவிப்புக்குப் பிறகும்..
அதே அறிவிப்பில், கூடுதல் பேருந்துகள் இயக்கப்படு கின்ற அளவிற்குப் பணிமனைகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு, சென்னை, விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகங்களால் தமிழ்நாடு முழுவதும் 25 புதிய பணிமனைகள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் 110வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். இதன் பின்னர் 10-5-2013 அன்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் படித்த 110வது விதியின் கீழான அறிக்கையில், "கடந்த இரண்டாண்டுகளில் முன் எப்போதும் இல்லாத வகையில் 43 பணி மனைகள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது; மேலும் 25 பணிமனைகள் 22 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்படும்"" என்பதை மகிழ்ச்சியாகத் தெரிவித்துக் கொண்டார். ஆனால் இவ்வளவு அறிவிப்புக்குப் பிறகு இப்போது 68 பணிமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத்தான் பேசியிருக்கிறார்.

நிர்வாகத் திறமை என்று எதை நினைக்கிறார்...?
முதல்வர் மேலும் நேற்று பேசும்போது, அவர் மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போது, போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த இழப்பு 6,150 கோடியே 95 லட்சம் ரூபாய் என்றும், அரசு போக்குவரத்துக் கழகங்கள் முடங்கிப் போகும் நிலைமையில் இருந்தது என்றும், அதற்குக் காரணம் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நிர்வாகத் திறமை என்று அவர் எதை நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிய வில்லை.

துன்பத்துக்குள்ளாக்குவதுதான் நிர்வாகத் திறமையா...?
பேருந்துகளின் கட்டணத்தை அதிக அளவிற்கு உயர்த்தி, மக்களை எல்லாம் பெரும் துன்பத்துக்காளாக்கி, போக்குவரத்துக் கழகங் களின் வருவாயைப் பெருக்குவதுதான் நிர்வாகத் திறமையா? கழக ஆட்சியில் அந்தச் சுமையை யெல்லாம் அரசே தாங்கிக் கொண்டு பொதுமக்கள் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளவில்லையா?

மேலும் மேலும் கட்டண உயர்வு
பேருந்துக் கட்டணங்களைப் பொறுத்தவரையில், சாதாரண புறநகர் பேருந்துகளுக்கு கிலோ மீட்டர் ஒன்றுக்கு 28 பைசா வீதம் கழக ஆட்சியில் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை, 50 சதவிகித அளவிற்கு அதாவது மேலும் 14 பைசா என்ற அளவிற்குக் கூடுதலாக உயர்த்தி, கிலோ மீட்டர் ஒன்றுக்கு 42 பைசா என்று அ.தி.மு.க. ஆட்சியில் கட்டணம் நிர்ணயித்தார்கள். அதைப் போலவே மற்ற பேருந்துகளுக்கும் கட்டண உயர்வுகள் செய்யப்பட்டன.

மனப்பால் குடித்துக் கொண்டு
2006ஆம் ஆண்டு முதல் 2011 மே திங்கள் வரை நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பேருந்துக் கட்டணம் ஒரு பைசாகூட உயர்த்தப்பட வில்லை என்பதையும், ஜெயலலிதா ஏற்கனவே பதவியிலே இருந்த போது பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியதைப் போல், தற்போது
மீண்டும் அவர் பொறுப்புக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி ஏழை எளிய நடுத்தர மக்களை வாட்டி வதைத்தார் என்பதையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்று மனப்பால் குடித்துக் கொண்டு, "தி.மு. கழக ஆட்சியில் நிர்வாகத் திறமை இல்லை"" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

பார்த்துப் பார்த்துக் கட்டிய தலைமைச் செயலகம்
நிர்வாகத் திறமை என்று ஜெயலலிதா எதைக் கருதுகிறார்? தி.மு. கழக ஆட்சியில் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்து மூன்றாண்டு காலமாக அதைப் பூட்டி வைத்துவிட்டு, அங்கே மருத்துவமனை தொடங்கப்போவதாக அறிவித்திருப்பதும், இடிந்து விழக்கூடிய அளவிற்கு உள்ள பழைய தலைமைச் செயலகத்திலேயே இட நெருக்கடிக்கு இடையே அரசு அலுவலர்களையும், அதிகாரிகளையும் வேதனையோடு பணியாற்ற வைத்திருப்பதும், சேதுத் திட்டத்தை இயங்க விடாமல் முடக்கி வைத்திருப்பதும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்காமல் போட்டு வைத்திருப்பதும், மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம் போன்ற பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்கான திட்டங்களைத் தொடராமல் போட்டு வைத்திருப்பதும் தான் ஆட்சியின் நிர்வாகத் திறமைக்கான அடையாளமா? அந்த நிர்வாகத் திறமை தி.மு.கழகத்திற்கு இல்லைதான்.

இரட்டை இலைச் சின்னம்
அதுமாத்திரமல்ல; முதல்வர் தொடங்கி வைத்துள்ள அரசுப் பேருந்துகளில் எல்லாம் "இரட்டை இலை"ச் சின்னம் போடப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நினைவிடத்தை கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தது பற்றி அப்போது ""இந்து"" நாளிதழ், ""Two Leaves" adorns façade of renovated MGR Memorial - No prior announcement of inauguration by Chief Minister Jayalalithaa"" என்ற தலைப்பின் கீழ் வெளியிட்ட செய்தியில், "முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்த புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவிடத்தின் முகப்பில்அ.தி.மு.க. வின் மிகப் பெரிய இரட்டை இலைச் சின்னம் அலங்கரிக்கப்பட்டுள்ளது" என்று எழுதியிருந்தது.

தனிப்பட்ட முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா?
அதைப் போலவே "அம்மா குடி நீர் பாட்டில் திட்டம்" கொண்டு வந்தபோதும் அதில் இரட்டை இலைச் சின்னத்தைப் பொறித்திருப்பதாகச் செய்தி வந்தது. எனவே இந்தத் திட்டங்கள் எல்லாம் மக்கள் நிதியிலிருந்து அரசின் சார்பில் நிறைவேற்றப்படுகின்றனவா? அல்லது அ.தி.மு.க. எனும் அரசியல் கட்சியின் சார்பில் தனிப்பட்ட முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா? ஆட்சியிலிருந்து கட்சியை வேறுபடுத்தாமல் - ஆட்சி வேறு; கட்சி வேறு என்பதை மறந்து - ஆட்சியோடு கட்சியை இரண்டறக் கலப்பதுதான் மக்களாட்சியின் மாண்பா?

ஏற்காடு இடைத் தேர்தல்
கேள்வி: ஏற்காடு இடைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு நீங்கள் செல்கிறீர்களா?
பதில்: இன்னும் முடிவெடுக்கவில்லை.

சட்டசபைத் தீர்மானத்தை வரவேற்கிறேன்
கேள்வி: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று தமிழகச் சட்டப் பேரவையில் இன்று
தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அதை நான் வரவேற்கிறேன். இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடுத் தான் இன்றைக்கும் தமிழகச் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு இன்று நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் போல இந்தியா முழுவதும் நிறைவேற்றினால் அது இலங்கையிலே உள்ள இலங்கைத் தமிழர்களுக்குப் பெரிதும் ஆதரவாக அமையும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications