Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவின் மின் திட்டங்களைத்தான் தனது திட்டமாக கூறுகிறார் ஜெயலலிதா -கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா மின் திட்டங்கள் குறித்து தமிழக சட்டசபையில் குறிப்பிட்டுள்ள 7 திட்டங்கள் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைக் கொண்டுதான் தமிழகத்தை மிகை மின் மாநிலமாக மாற்றப் போவதாக முதல்வர் அறிவித்துள்ளார் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இதுதொடர்பாக பேசிய முதல்வரின் அறிக்கைக்கு விளக்கம் அளித்துள்ளார் கருணாநிதி.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை

ஜெயலலிதாவின் நீண்ட விளக்கம்

ஜெயலலிதாவின் நீண்ட விளக்கம்

25-10-2013 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பொதுவுடைமைக் கட்சிகள் எழுப்பிய; தொழில்களுக்கும், விவசாயிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கக் கோரும் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு; முதலமைச்சர் ஜெயலலிதா நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

அந்தந்தத் துறையின் அமைச்சர்கள்தானே சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதிலளிக்க வேண்டும்; மின் துறை அமைச்சர் இல்லையா? என்று யாரும் கேட்கக் கூடாது. ஏனென்றால் அந்தத் துறையின் அமைச்சருக்கு வேறு "முக்கியமான" பணிகள் இருப்பதால், அமைச்சரவைக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு என்ற முறையில் முதலமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

நமக்கு அது பிரச்சினை இல்லை

நமக்கு அது பிரச்சினை இல்லை

முதலமைச்சர் மின் தட்டுப்பாடு குறித்து நீண்ட விளக்கம் அளித்தது பற்றி நமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் விளக்கம் அளிக்க முன்வந்தவர் தேவையில்லாமல், "முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை, நிர்வாகத் திறமையின்மை காரணமாக ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் மூழ்கியது" என்று நம்மைக் குற்றம் சாட்டிய காரணத்தால்தான் இதற்கு விளக்கமளிக்க வேண்டியவனாக நான் இருக்கிறேன்.

மின்மிகை மாநிலமாக மாறும் என்கிறார்

மின்மிகை மாநிலமாக மாறும் என்கிறார்

குறிப்பாக முதலமைச்சரின் நீண்ட உரையில், "இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறும்" என்று தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதா மூன்றாவது முறையாகப் பதவிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களில், 4-8-2011 அன்று பேரவையில் வைத்த நிதிநிலை அறிக்கை யில், ""மின்சக்தியின் உற்பத்திக்கேற்ப மின்வெட்டு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு, 2012 ஆகஸ்டு மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் முற்றிலுமாக நீக்கப்படும்" என்று சொன்னார்கள்.

அடுத்தடுத்து சொல்லப்பட்ட உறுதிகள்

அடுத்தடுத்து சொல்லப்பட்ட உறுதிகள்

28-3-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப் பேரவையில், "படிப்படியாக மின் வெட்டு நேரம் குறைக்கப்படும் என்று அறிவித்தது, ஜூன் மாதத்திலிருந்து படிப்படியாகக் குறைக்கப்படு மென்றுதான் அறிவித்திருக்கிறோம். இப்போது மார்ச் மாதத்தில்தான் இருக்கிறோம். இன்னும் 3 மாத காலம் பொறுத்திருங்கள் என்று கூறினார். அந்தத் துறையின் அமைச்சர் "இந்தியா டுடே" இதழுக்கு பிப்ரவரி 2012இல் அளித்த பேட்டியில் "2012 மார்ச் முதல் மே மாதம் வரையில் மட்டும்தான் தமிழகம் மின் பற்றாக்குறையை அனுபவிக்கும். இந்த மூன்று மாதங்களை மட்டும் பொறுத்துக் கொண்டால் தமிழகத்தில் மின் பற்றாக்குறையே இருக்காது" என்று சொன்னார்.

திமுக மீது புகார் சொன்னார்கள்

திமுக மீது புகார் சொன்னார்கள்

28-11-2012 தேதிய ஜூ.வி. இதழுக்கு இதே அமைச்சர் அளித்த பேட்டியில் "2013 ஜூனில் மின் வெட்டு சரியாகி விடும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். முதலமைச்சர் தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக ஆகிவிடும் என்று சொல்லியிருக்கிறார். "ஆண்டுக்காண்டு உயர்ந்து கொண்டே வரும் மின் தேவைக்கேற்ப புதிய மின் திட்டங்களை உரிய காலத்தில் தி.மு.க. அரசு தீட்டவில்லை" என்று ஒரு குற்றச்சாட்டினை முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

7 திட்டங்களும் திமுக ஆட்சியில் வந்தவை

7 திட்டங்களும் திமுக ஆட்சியில் வந்தவை

2011இல் தி.மு.கழகம் ஆட்சியை விட்டு இறங்கிய போது, தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த மின் உற்பத்தித் திட்டங்கள்: 1. வட சென்னை
(நிலை 2); 2. மேட்டூர்; 3. தூத்துக்குடி; 4. வல்லூர்; 5. பவானி கட்டளை; உடன்குடி; முதலமைச்சர் ஜெயலலிதா 2-11-2012 அன்று சட்டமன்றத்தில் விரைவில் மின் உற்பத்தி துவக்கப் படவுள்ள திட்டங்கள் என்று சிலவற்றைக் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்டதில், மேட்டூர் (600 மெகாவாட்) 25-6-2008 அன்றும்; வல்லூர் 1ஆம் அலகு (500 மெகாவாட்) 13-8-2007 அன்றும்; வல்லூர் 2ஆம் அலகு (500 மெகாவாட்) 13-8-2007 அன்றும்; வல்லூர் 3ஆம் அலகு (500 மெகாவாட்) 13-8-2007 அன்றும்; வடசென்னை (1ஆம் அலகு) (600 மெகாவாட்) 18-2-2008 அன்றும், வடசென்னை (2ஆம் அலகு) (600 மெகாவாட்) 18-2-2008 அன்றும்; தூத்துக்குடி (இரண்டு அலகுகள் - 1000 மெகாவாட்) 28-1-2009 அன்றும், ஆக இந்த ஏழு திட்டங்களுமே தி.மு. கழக ஆட்சியிலே தொடங்கப்பட்டவைதான்.

உரிய காலத்தில் தீட்டவில்லை என்கிறார்...

உரிய காலத்தில் தீட்டவில்லை என்கிறார்...

ஜெயலலிதா நேற்று படித்த அறிக்கையில், தி.மு.க ஆட்சியில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களை உரிய காலத்தில் தீட்டவில்லை என்று கூறிவிட்டு, அவரே "600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டப் பணிகளைப் பொறுத்தவரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலமான ஐந்து ஆண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது" என்று கூறியிருக்கிறார். இதிலிருந்தே மேட்டூர் திட்டம் கழக ஆட்சியில் 55 விழுக்காடு முடிக்கப்பட்டதை அவரே ஒப்புக் கொள்வதுதானே? ஆனால் தி.மு.க. ஐந்தாண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட் டிருந்தது என்று ஒரு குற்றச்சாட்டைக் கூறுகிறார்.

இதுவாவது சரியா...

இதுவாவது சரியா...

இதுவாவது சரியா? மேட்டூர் திட்டம் பணி தொடங்கப்பட்டதே 25-6-2008 அன்றுதான்! அதற்குப் பிறகு தி.மு.கழக ஆட்சி ஐந்தாண்டுகள் இல்லை, மூன்றாண்டுகள்தான்; இந்த விவரத்தைக் கூட மறைத்து விட்டு ஐந்தாண்டு காலத்தில் 55 சதவிகிதப் பணிகளே முடிக்கப்பட்டிருந்தன என்று ஒரு முதலமைச்சர் தமிழகச் சட்டப் பேரவையில் உண்மைக்கு மாறான தகவலைக் கூறியிருப்பது நியாயம்தானா? 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பேரவையில் வைத்த மானியக் கோரிக்கையில், இந்த மேட்டூர் திட்டம் 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்கள். அவர்களே தெரிவித்தவாறு 2012இல் இத்திட்டம் செயல் பாட்டிற்கு வராமல் மேலும் ஓராண்டு கால தாமதம் ஆனதற்கு எந்த ஆட்சி காரணம்?

அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்

அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்

அதைப்போலவேதான் வடசென்னை அனல் மின் நிலையத் திட்டங்கள் பற்றியும் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். அந்தத் திட்டம் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டதை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்தத் திட்டங்களையெல்லாம் அவருடைய ஆட்சியில் முடுக்கி விடப்பட்டதன் காரணமாகத்தான் மின்சாரம் இப்போது கிடைக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். வடசென்னை 2012ஆம் ஆண்டு ஜனவரியிலேயே மின் உற்பத்தி தொடங்குமென்று 2011ஆம் ஆண்டு பேரவையில் தெரிவித்து விட்டு, தற்போது தான் அங்கே மின் உற்பத்தி தொடங்குகிறது என்றால் இந்தத் தாமதத்திற்கு யார் காரணம்? எந்த ஆட்சி காரணம்? இந்தத் திட்டங்களின் மின் உற்பத்திக்கு ஜெயலலிதாதான் காரணம் என்றால், இந்தத் திட்டங்களுக்காக அவருடைய ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதைக் கூறுவாரா?

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டததால்தானே...

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டததால்தானே...

கழக ஆட்சியில் இந்தத் திட்டங்களைத் தொடங்காமல் இருந்திருந்தால், இப்போது இந்த மின்சாரமாவது கிடைத்திருக்குமா? கழக ஆட்சியில் தொடங்கப்பட்டதால்தானே இவரால் அந்தத் திட்டத்தை முடிக்க முடிந்திருக்கிறது. திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து நடத்தாமல் இருந்திருந்தால் மின்சாரம் கிடைத் திருக்குமா என்று ஜெயலலிதா கேட்கலாம். அப்படி இவர்கள் அந்தத் திட்டங்களைத் தொடராமல் இருந்திருந்தால், தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகள் அது பற்றி கேள்வி கேட்காமல் இருந்திருக்குமா? எனவே தற்போது தமிழகத்திற்கு கூடுதலாகக் கிடைக்கும் மின்சாரம் கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களினால்தான் என்பதை ஜெயலலிதா மறைக்க முயற்சித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே அதனை அறிவார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் அல்ல

ஜெயலலிதா ஆட்சியில் அல்ல

"எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட வடசென்னை வல்லூரில் அமைந்துள்ள 3 ஒ 500 மெகாவாட் திறன் கொண்ட திட்டப் பணிகள் முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆமை வேகத்தில் சென்று கொண்டிருந்தன. இந்தப் பணிகளை நாங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, துரிதப்படுத்தியதன் காரணமாக தற்போது இரண்டு அலகுகள் வணிக ரீதியாக மின் உற்பத்தியை முறையே 29-11-2012 அன்றும், 25-8-2013 அன்றும் துவங்கியுள்ளன" என்று ஜெயலலிதா நேற்று பேரவையில் சொல்லி யிருக்கிறார். வல்லூர் மின் திட்டப் பணிகள் துவக்கப்பட்ட நாள் ஜெயலலிதா ஆட்சியிலே அல்ல. 13-8-2007 அன்று கழக ஆட்சியிலேதான் மத்திய மின் துறை அமைச்சராக இருந்த ஷிண்டே அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்

இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்

அந்தத் திட்டம் தொடங்கிய போதே தோராயமாக மின் உற்பத்தி துவக்கம் முதல் அலகில் டிசம்பர் 2012 என்றும், இரண்டாவது அலகில் மார்ச் 2013 என்றும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தி.மு. கழக ஆட்சியில் இத்திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்றதாக ஜெயலலிதா கூறுகிறார். மற்ற திட்டங்கள் எல்லாம் கழக ஆட்சியில் இத்தனை சதவிகிதம் நடந்ததாகக் கூறிய ஜெயலலிதா, இதற்கு மட்டும் ஏன் எத்தனை சதவிகிதப் பணிகள் நடைபெற்றன என்று கூறவில்லை? மேலும் அந்தத் திட்டத்தின் மூலமாக மின் உற்பத்தி 29-11-2012 அன்றே தொடங்கிவிட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இதிலிருந்து கழக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிதான் இதற்குக் காரணம் என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

உண்மைக்கு மாறான அப்பட்டமான பொய்தானே...

உண்மைக்கு மாறான அப்பட்டமான பொய்தானே...

"மேற்கண்ட புதிய அனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உற்பத்தியைத் தொடங்கி யுள்ளதால் தற்போது கூடுதலாக 1700 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைத்து வருகிறது" என்று ஜெயலலிதா நேற்று பேசும்போது தெரிவித்திருக் கிறார். இந்த 1700 மெகாவாட் மின்சாரம் முழுவதும் தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களின் மூலமாகக் கிடைத்திருப்பதுதான். இதனை யாராவது மறுக்க முடியுமா? எனவே கழக ஆட்சியில் மின் திட்டங்களைத் தொடங்க வில்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா பேரவையில் பேசியிருப்பது உண்மைக்கு மாறான அப்பட்டமான பொய்தானே?

வேகமாக நடைபெறுவதாக சொல்கிறார்

வேகமாக நடைபெறுவதாக சொல்கிறார்

"தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் அமைத்து வரும் 2500 மெகாவாட் அனல் மின் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன" என்று ஜெயலலிதா நேற்று கூறியிருக்கிறார். தூத்துக்குடியில் நடைபெறும் இந்தத் திட்டத்தின் பணிகள் துவக்கப்பட்ட நாள் 28-1-2009. அதுவும் தி.மு. கழக ஆட்சியிலேதான். அ.தி.மு.க. ஆட்சியிலே மின்சாரத்தைப் பெற எதுவுமே செய்யவில்லையா என்று யாராவது கேட்பீர்களேயானால், நான் உண்மையை மறைக்க விரும்பவில்லை. செய்திருக்கிறார்கள். என்னவென்றால், பிற மாநிலங்களிலே இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாங்குவதற்கு ஏற்பாடு (?) செய்து, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட கால அடிப்படையில் கூடுதல் மின்சாரத்தை இவ்வாறு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

உண்டா என்றால்...

உண்டா என்றால்...

பிற மாநிலங்களிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்தை எடுத்து வர, தக்க மின் வழித் தடங்கள் உண்டா என்றால், தற்போதுதான் அதற்கான மின் வழித் தடங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அது 2014ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். மின்சாரத்தை வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதற்கு வழிவகை இல்லை என்று 2012-2013ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையிலே இவர்களே தெரிவித்து விட்டு, இவர்களே இந்த அளவிற்கு வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு எப்படி முன் வந்தார்கள்? எப்படியோ, அது தற்போதைய பற்றாக்குறையை நீக்க உதவாது.

எதுவுமே புதிதில்லையே...

எதுவுமே புதிதில்லையே...

ஜெயலலிதா நேற்று பேசும்போது, 2001-2006இல் அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருந்ததாகச் சொல்லி யிருக்கிறார். அதற்குக் காரணம் 2001ஆம் ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற தி.மு. கழக ஆட்சியில் மின் உற்பத்திக்காக போடப்பட்ட திட்டங்கள்தானே? தற்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டிற்குக் காரணம், ஏற்கனவே இருந்த கழக ஆட்சியில் மின் உற்பத்திக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகின்ற ஜெயலலிதா, மின் மிகை மாநிலமாக தமிழகம் இருந்தது என்பதற்கு மட்டும், அதற்கு முந்தைய கழக ஆட்சி அல்லவா காரணம்? மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு நிர்வாகத் திறமை அப்போது இல்லை என்கிறார். தற்போது நிர்வாகத் திறமை அ.தி.மு.க. ஆட்சியினரிடம் இல்லாத காரணத்தால் கடந்த மூன்றாண்டுகளாக மின் தட்டுப்பாடு நிறைந்த மாநிலமாக, புதிதாக எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

நிர்வாகத் திறமை யாருக்கு இல்லை...

நிர்வாகத் திறமை யாருக்கு இல்லை...

2008ஆம் ஆண்டிலேயே நீண்ட கால அடிப்படையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தி.மு. கழக அரசு தவறிவிட்டது என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நிர்வாகத் திறமையற்ற ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்றார், அப்போது மின் தட்டுப்பாடு ஏற்படும் என்று 2008ஆம் ஆண்டிலேயே தெரிந்திருந்தால் அப்போதே நீண்ட கால அடிப்படையில் மின்சாரத்தைக் கொள்முதல் செய்திருப்போம்.

அதே அதிகாரிகள்தானே இப்போதும் இருக்கிறார்கள்

அதே அதிகாரிகள்தானே இப்போதும் இருக்கிறார்கள்

எதற்கெடுத்தாலும் ஜெயலலிதா சொல்கின்ற ஒரு வார்த்தை, நிர்வாகத் திறமை இல்லை என்பதாகும். கடந்தகால தி.மு.க. ஆட்சியில் நிதித் துறைச் செயலாளராக இருந்து ஒவ்வொரு கூட்டத்திலும் ஆலோசனை கூறியவர்தான் தற்போது மின்வாரியத் தலைவராக இருக்கிறார். அப்போது நிதித் துறைச் செயலாளராக இருந்தவர்தான் தற்போதும் நிதித் துறைச் செயலாளராக இருக்கிறார். அப்படிப்பட்ட மூத்த அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றுத் தான் அப்போதும் ஆட்சி நடைபெற்றது, இப்போதும் ஆட்சி நடைபெறுகிறது. கழக ஆட்சியில் இந்த அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெற்றுத்தான் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதே தவிர, எடுத்தேன், கவிழ்த்தேன் என்று ஜெயலலிதா பாணியில் இப்போது போல கழக ஆட்சியில் நடைபெற்றதில்லை என்பதை அதிகாரிகளே நன்கறிவார்கள்.

நான் கேட்கிறேன்

நான் கேட்கிறேன்

தி.மு. கழக ஆட்சியில் மின் உற்பத்திக்கான திட்டங்கள் தொடங்கப்பட்டது பற்றி ஜெயலலிதா ஒப்புக் கொண்டிருப்பதை ஆதாரமாகக் காட்டி விளக்கியிருக்கிறேன். தற்போது நான் கேட்கிறேன். அ.தி.மு.க. ஆட்சி 2011இல் தொடங்கி இரண்டரை ஆண்டுகளாகிறதே, இதுவரை எத்தனை மின் உற்பத்தித் திட்டங்களுக்குப் பணி தொடங்கப்பட்டுள்ளது? 2011-2012ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பில், வடசென்னை நிலை 3, வட சென்னை நிலை 4, உடன்குடி, எண்ணூர் இணைப்பு, குந்தா நீரேற்று புனல் மின் நிலையத் திட்டங்கள் 28,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2012ஆம் ஆண்டு பணி தொடங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தீர்களே? இதில் ஏதாவது ஒரு திட்டத்திற்குப் பணி தொடங்கப்பட்டுள்ளதா?

அதே கொள்கை விளக்கக் குறிப்பில், பக்கம் 12இல், உடன்குடி விரிவாக்கம், உப்பூர் அனல் மின்நிலையம், எண்ணூர் அனல் மின் நிலையம் - மாற்று, தூத்துக்குடி அனல் மின் நிலையம் - நிலை 4 ஆகிய 8000 மெகாவாட் உற்பத்திக்கான திட்டங்களை 22,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்போவதாக அறிவித்திருந் தார்களே, இதில் ஏதாவது ஒரு திட்டமாவது இந்த இரண்டரை ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்திருக்கிறதா? சொல்லத் தயாரா?

இதுதான் இந்த அரசின் செயல்பாடா...

இதுதான் இந்த அரசின் செயல்பாடா...

முதலமைச்சர் இந்தத் திட்டங்களைப் பற்றி நேற்றையதினம் கூறும்போது, ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வில் உள்ளன, விரைவில் இத்திட்டம் அமைப் பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் துவங்கும் என்றுதான் சொல்லியிருக்கிறாரே தவிர, எந்தத் திட்டமும் தொடங்கப்பட்டதாகக் கூறவே இல்லை. என்ன காரணம்? திட்டங்கள் அறிவிக்கப் பட்டது 2011ஆம் ஆண்டு. 2013ஆம் ஆண்டு முடிவில் ஒப்பந்தப் புள்ளிகள் ஆய்வில் உள்ளன என்றால், இதுதான் இந்த அரசின் செயல்பாடா?

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 15-6-2013 முதல் தினசரி 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்று ஜெயலலிதா நேற்று பேசியிருக்கிறார். டெல்டா மாவட்ட விவசாயிகளும், பொதுவுடைமைக் கட்சியினரும் இதனை ஒப்புக் கொண்டால் நமக்கு மகிழ்ச்சிதான்.

முழுப் பூசணிக்காயை

முழுப் பூசணிக்காயை

ஜெயலலிதா அடுத்து தன் உரையில், தி.மு.க. ஆட்சியில் மக்களை ஏமாற்றிக் கொண்டே இருந்ததாகவும், மின்வெட்டு என்று அறிவிக் காமலேயே மின் வெட்டு இருந்தது என்றும், ஆனால் தற்போது மின் வெட்டே இல்லாமல் மின்சாரத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் அனுபவப் பூர்வமாக மின் தட்டுப்பாட்டை அறிவார்கள். ஒரு சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு எந்த அளவிற்கு மின் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டது, கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் சிறு தொழில் நிறுவனங்கள் எந்த அளவிற்குப் பாதிக்கப் பட்டன என்பதையெல்லாம் அப்படியே முழுப் பூசனிக்காயை இலைச் சோற்றிலே மறைப்பதைப் போல மறைப்பதற்கு ஜெயலலிதா எண்ணுகிறார்.

"2001 முதல் 2006 வரையிலான எனது ஆட்சிக் காலத்தில் கூடுதல் மின் நிறுவுத்திறன் ஏற்படுத்தப்பட்டது" என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். 2001-2006ஆம் ஆண்டுகளில் மின் உற்பத்திக்காகச் செலவிடப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 700 கோடிதான். ஆனால் 2006-2011ஆம் ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக தி.மு. கழக ஆட்சியில் செலவழிக்கப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவு தெரியுமா? 11,700 கோடி ரூபாய்.

யாரை ஏமாற்ற...

யாரை ஏமாற்ற...

"சென்ற சட்டமன்றத் தொடரில் நீலகிரி மாவட்டத்தில் 7000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 மெகாவாட் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும் என நான் அறிவித்திருந்தேன். இதற்கான ஆய்வுப் பணிகள் 22-8-2013 அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன" என்று ஜெயலலிதா நேற்றுப் பேசியிருக்கிறார். எப்போது தெரியுமா? 25-4-2013 அன்று 110வது விதியின் கீழ் ஜெயலலிதா படித்த அறிக்கையிலே இதை தெரிவித்தார். ஆறு மாதங்கள் முடிந்த பிறகு, ஆய்வுப் பணி தொடங்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் அவையில் தெரிவித்திருக்கிறார். 7000 கோடி ரூபாய் மதிப்பீடு என்று சொன்னீர்களே, இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? யாரை ஏமாற்ற இந்தத் திட்ட அறிவிப்புகள்?

5000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3572 கோடி ரூபாய் ஜப்பானிய நிதி உதவியுடன் ஒரு திட்டத்தை அறிவித்ததாக முதலமைச்சர் நேற்றுப் பேசியிருக்கிறார். இந்தத் திட்டத்தையும் ஜெயலலிதா எப்போது அறிவித்தார் என்று நான் கூறுகிறேன். 25-4-2013 அன்று ஜெயலலிதா படித்த 110வது விதியின் கீழான அறிக்கையிலேதான் இதைக் குறிப்பிட்டிருந்தார். அறிவித்து ஆறு மாதங்களுக்குப் பிறகு நேற்றையதினம் இதற்காக ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக பேரவையில் அறிவித்திருக்கிறார் என்றால் எவ்வளவு வேகமாக அ.தி.மு.க. ஆட்சி செயல்படுகிறது என்பதை நான் விளக்க வேண்டுமா?

மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள்

மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள்

அடுத்து, மரபு சாரா எரிசக்தி ஆதாரங்களை மையமாகக் கொண்டு மின் உற்பத்தியைப் பெருக்கிட வேண்டுமென்ற நோக்கத்தில் "சூரிய எரிசக்திக் கொள்கை 2012"ஐ தான் வெளியிட்டதாகவும் அதன்படி மூன்றாண்டு களில் சூரிய சக்தி மூலம் 3000 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யப்படும் என்றும் ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் இதிலும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு முடிவெடுக்காத நிலைமை தான் உள்ளது.

வாயே திறக்கவில்லையே...

வாயே திறக்கவில்லையே...

இவ்வளவு நீளமாக மின் உற்பத்தி பற்றி பேரவையில் தெரிவித்த முதல் அமைச்சர், காற்றாலை மின் உற்பத்தி பற்றி வாயே திறக்கவில்லை. 2011ஆம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் 10000 மெகாவாட் காற்றாலை மின்சாரம் தனியார்களால் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சொன்னார்களே, தற்போது காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை வாங்க மறுப்பதாகச் சொல்லப்படுகிறதே, அது உண்மையா இல்லையா? தற்சமயம் மின் தேவை அதிகம் இருப்பதால், காற்றாலை மூலம் அதிக அளவு தனியாரிடம் வாங்கினால், மின் வெட்டு தாராளமாகக் குறையும். குறைந்த விலையில் கிடைக்கும் காற்றாலை மின்சாரத்தை வாங்க முன்வராமல், அதிக விலை கொடுத்து வேறு மாநிலங்களிலிருந்து அ.தி.மு.க. அரசு மின்சாரத்தை வாங்க முயற்சிக்கிறது என்ற தகவல் சரியா? தவறா? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+