For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதுவும் எங்க அம்மாவின் சாதனைதான் என்று பிளக்ஸ் போர்டு வைக்கலாமே... கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: முருங்கைக்கைய் விலை 25 ரூபாய் என்று செய்தி வெளியாகியுள்ளது. இதுவும் எங்க அம்மா சாதனைதான் என்று பிளக்ஸ் போர்டு வைக்கலாமே என்று கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில்களில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதியின் கேள்வி பதில்கள்...

முருங்கைக்காய் விலை ரூ. 25

முருங்கைக்காய் விலை ரூ. 25

கேள்வி: ஒரு முருங்கைக்காய் விலை 25 ரூபாய் என்று செய்தி வெளியாகியிருக்கிறதே?

பதில்: "இதுவும் எங்க அம்மாவின் சாதனைதான்" என்று ஒரு "ப்ளக்ஸ் போர்டு" வைக்கலாமே!

அபிராமபுரத்தில் அடிக்கடி திருட்டு

அபிராமபுரத்தில் அடிக்கடி திருட்டு

கேள்வி: அபிராமபுரம் கிழக்குப் பகுதியில் அடிக்கடி திருட்டுப் போவதாக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரே புகார் கொடுத்திருப்பதாக
நாளேடுகள் செய்தி வெளியிட் டிருக்கின்றனவே?

பதில்: உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அவர் வசிக்கும் பகுதியைப் பொறுத்து புகார் கொடுத்திருக்கிறார். தமிழ்நாடே அதே நிலையில்தான் இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி, தன் வீட்டுக்குள்ளேயே இரண்டு முறை கொள்ளையர்கள் புகுந்து திருடி விட்டுச் சென்று விட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதே அதிமுக ஆட்சியில் எந்த அளவிற்கு கொள்ளை நிகழ்வுகள் கேட்பாரற்றப் போய்விட்டன என்பதற்கான உதாரணம்தானே?

சேது திட்டம்

சேது திட்டம்

கேள்வி: சேது திட்டத்தை எந்த வழியிலும் துவங்கக்கூடாது என்று தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதே?

பதில்: சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் ஒரு மூத்த வழக்கறிஞரை தமிழக அரசின் சார்பில் முறையாக வாதாட வைக்க முன்வராத அதிமுக அரசுதான் சேது திட்டத்தை எந்த வழியிலும் துவங்கக்கூடாது என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறது.

சேது திட்டத்தை ஆதரித்தவர்தான் ஜெயலிதா

சேது திட்டத்தை ஆதரித்தவர்தான் ஜெயலிதா

2004ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் போது இதே ஜெயலலிதா, அதிமுக சார்பில் வைத்த தேர்தல் அறிக்கையில் பக்கம் 33இல், "தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி யிலும், நாட்டின் ஒட்டுமொத்தத் தொழில் மேம்பாட்டிலும் முக்கியப் பங்காற்றவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க, மைய ஆட்சியில், அமைச்சுப் பொறுப்பில் ஐந்தாண்டு காலம் இருந்த திமுக, மதிமுக, பாமக கட்சிகள் தவறி விட்டதை இந்த நாடு நன்கறியும். இத்திட்டத் திற்குப் போதிய நிதியினை உடனடியாக ஒதுக்கி, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று, அமைய இருக்கும் மைய அரசை அ.தி.மு.க. வலியுறுத்தும்"" என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

அதிமுக கொள்கையை அவரே ஏற்கவில்லையா

அதிமுக கொள்கையை அவரே ஏற்கவில்லையா

அதிமுக தேர்தல் அறிக்கையில் சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று திட்டவட்டமாகக் கூறி விட்டு, தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியுறுத்துகிறார் என்றால், அவர் அதிமுகவின் கொள்கையை தற்போது ஏற்கவில்லையா? அல்லது எம்.ஜி.ஆர். அவர்களே ஆதரித்த திட்டத்தை இப்போது ஜெயலலிதா மறுக்கிறாரா?

அமைச்சர் மீது லஞ்சப் புகார்

அமைச்சர் மீது லஞ்சப் புகார்

கேள்வி: தமிழக அரசின் அமைச்சர் ஒருவர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸ் விசாரணை நடத்துவது பற்றி உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறதே?

பதில்: அந்த அமைச்சர் பற்றி நான் ஏற்கனவே விரிவாக எழுதியிருக்கிறேன். 15-8-2013 அன்று விடுதலை நாள் விழா அன்று வந்த ஒரு நாளிதழ் செய்தியில், அதன் தலைப்பே, "அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது சொத்துக் குவிப்புப் புகார்" என்பது தான். மதுரை ஆனையூரைச் சேர்ந்த எம். ராஜா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். இவர் தாக்கல் செய்த மனுவில், "ராஜேந்திர பாலாஜி, சிவகாசி சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.வேட்பு மனு தாக்கல் செய்யும்போது 29 லட்சம் ரூபாய் சொத்தும், 1.39 லட்சம் ரூபாய் கடனும் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

வருமான ஆதாரம் இல்லாதவர்

வருமான ஆதாரம் இல்லாதவர்

தற்போது ராஜபாளையம் தாலுகா, தேவதானம் கிராமத்தில், 34 ஏக்கர் விவசாய நிலம் அடங்கிய எஸ்டேட்டை வாங்கியுள்ளார். சேத்தூர் சார்பதிவாளர் பத்திரப் பதிவு செய்துள்ளார். விற்பனைப் பத்திரத்தின்படி சொத்தின் மதிப்பு 74 லட்சம் ரூபாய். சந்தை மதிப்பு ஆறு கோடி ரூபாய்க்கும் மேல் வரும் எனக் கூறப்படுகிறது. மாதச் சம்பளம் என 50 ஆயிரம் ரூபாய்தான் பெறுகிறார். இது தவிர வேறு வருமான ஆதாரம் அவருக்கு இல்லை. 4ஆம் தேதி லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு புகார் அனுப்பப்பட்டது. ஆதாரம் கிடைத்தும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றெல்லாம் கூறப்பட்டிருந்தது.

முகாந்திரம் இருந்தால் விசாரிக்க உத்தரவு

முகாந்திரம் இருந்தால் விசாரிக்க உத்தரவு

இதுகுறித்த வழக்கில்தான் அரசு வழக்கறிஞர், அமைச்சருக்கு எதிரான புகாரை லஞ்ச ஒழிப்புப் போலீசார் விசாரித்து வருவதாகத் தெரிவித்ததின் பேரில், நீதிபதிகள் சுதாகர், வேலுமணி ஆகியோர் அமைச்சருக்கு எதிரான புகாரை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும், புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட் டிருக்கிறார்கள். அதிமுக அமைச்சர் மீதான புகாரை அதிமுக அரசின் போலீசாரே விசாரித்தால் உண்மை வெளிவருமா என்பதுதான் நடுநிலையாளர்களின் கேள்வி.

ரேஷன் கார்டுக்கு பொங்கல் தொகுப்பு

ரேஷன் கார்டுக்கு பொங்கல் தொகுப்பு

கேள்வி: தமிழகத்தில் அரிசி வாங்கும் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் வழங்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறாரே, இது புதிய திட்டமா?

பதில்: இந்தத் திட்டமே திமுக ஆட்சியில்தான் தொடங்கப்பட்டது. தமிழ்ப் புத்தாண்டு தினமான தைத் திங்கள் முதல் நாள், தமிழகத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும்
- சர்க்கரைப் பொங்கலிட்டு, புத்தாண்டுத் திருநாளை மகிழ்வோடு கொண்டாடு வதற்கு ஏதுவாக 2009ஆம் ஆண்டு - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் - தமிழ்ப் புத்தாண்டுப் பரிசாக பச்சரிசி அரை கிலோ - வெல்லம் அரை கிலோ - பாசிப் பருப்பு 100 கிராம் - முந்திரிப் பருப்பு 10 கிராம் - உலர்ந்த திராட்சை 5 கிராம் - ஏலக்காய் 5 கிராம் - ஆகிய பொருள்கள் அடங்கிய பை ஒன்று வழங்க ஆணையிடப்பட்டு ஏறத்தாழ 70 கோடி ரூபாய்ச் செலவில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர் களுக்கும் அது இலவசமாக வழங்கப்பட்டது.

தற்போதும் இதுவே தொடர்கிறது

தற்போதும் இதுவே தொடர்கிறது

இந்தத் திட்டம்தான் தற்போதும் தொடர்கிறது. கடந்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் பையில் ஒரு கிலோ பச்சரிசியும், வெல்லத்துக்குப் பதிலாக ஒரு கிலோ சர்க்கரை மற்றும் பொங்கலுக்கான பொருள்களை வாங்குவதற்காக ரொக்கமாக 100 ரூபாயும் வழங்கப்பட்டது. அதே போலத்தான் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி பச்சரிசி, சர்க்கரையுடன் 100 ரூபாய் ரொக்கமும் வழங்கப்படுகிறது. எப்படியோ, திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மற்ற பல திட்டங்களுக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மூடுவிழா நடத்தியதைப் போல இதற்கும் ஒரு மூடுவிழா நடத்தாமல் தொடருகிறார்களே என்ற வகையில் ஓரளவு மகிழ்ச்சி அடையலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

English summary
DMK chief Karunanidhi has answered to the questions on various issues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X