மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்திற்கு இயற்கை மட்டுமா காரணம் ? - கருணாநிதி கேள்வி
சென்னை: மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்திற்கும், துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் யார் காரணம்? இயற்கை மட்டுமா காரணம்? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இவ்வளவு துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் யார் காரணம்? இயற்கை மட்டுமா காரணம்? செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்க உரிய நேரத்தில் அரசினர் அனுமதி அளித்திருந்தால், டிசம்பர் 1ஆம் தேதி அன்று மட்டும் ஒரே நேரத்தில் ஏராளமான நீரைத் திறந்து சென்னையை மூழ்கடித்திருக்க வேண்டிய சிரமம் நேர்ந்திருக்காது அல்லவா?

சென்னை வாழ் மக்கள் எல்லாம் இவ்வாறு அவதிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய நேரத்தில், அவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட முன் வராவிட்டாலும் முதல் அமைச்சர் என்ன செய்கிறார்? தலைமைச் செயலகத்திற்கு வந்து பணக்காரர் களிடமும், தொழிலதிபர்களிடமும் நிவாரண நிதித் தொகையை வாங்குகிறார் - காணொலி காட்சி மூலமாக எதையாவது திறந்து வைத்து புகைப்படங்களை ஏடுகளில் வரச் செய்கிறார்.
அவ்வாறு அவர் வருவதற்கே எத்தனை ஏற்பாடுகள்? தயவுசெய்து சென்னையிலே உள்ள மக்கள் அவர் வரும் வழியிலே உள்ள தெருவுக்கு வந்து பாருங்கள்! எத்தனையெத் தனை வரவேற்பு பதாகைகள் தெரியுமா? இதோ, இன்று கட்டப்பட்டுள்ள "ப்ளக்ஸ் போர்டுகள்" - அதிலே உள்ள வார்த்தைகளில் சிறு குறிப்பை மட்டும் பாருங்கள்!
"கருணையின் பிறப்பிடமே" என்ற தலைப்பில் ஒரு பெரிய போர்டு - வைத்திருப்பவர் யார் தெரியுமா? வருவாய்த் துறை அமைச்சர்!
"கருணைக் கடலே" என்ற தலைப்பில் ஒரு பெரிய போர்டு - உபயம் - அமைச்சர் வேலுமணி!
"வள்ளலின் வாரிசே" என்ற தலைப்பில் ஒரு போர்டு - அதுவும் அமைச்சர் வேலுமணிதான்!
"ஏழைகளின் ஒளி விளக்கே" என்ற தலைப் பிலான தட்டியை வைத்திருப்பவர் அமைச்சர் தங்கமணி!
"கழகத்தின் காவல் தெய்வமே" - "எங்கள் உயிர் மூச்சே" என்ற தட்டிகளை வைத்திருப்பவர் அமைச்சர் வைத்தியலிங்கம்!
"வெற்றியின் விலாசமே" என்ற தலைப்பிலும் - "எங்கள் குல சாமியே" என்ற தலைப்பிலும் - "அறிவுத்திறமே ஆற்றல் கரமே" என்ற தலைப்பிலும், "விவசாயிகளின் விடிவெள்ளியே" என்றும் "ஏழை களின் ஏந்தலே" என்றும் "அற்புத வரமே" என்றும், "விடியல் தந்த வெற்றித் திருமகளே" என்றும், "ஈகையின் பிறப்பிடமே" என்றும், "பசுமைக்கு வித்திட்ட எங்கள் பாசத் தாயே" என்றும், "வாகையின் வசிப்பிடமே" என்றும், "காவிரித் தாயே" என்றும், அமைச்சர்கள் வரிசையாக, மக்கள் நடந்து செல்வதற்குக் கூட வழியில்லாமல் தட்டிகளை வைத்திருப்பதை யார் வேண்டுமென்றாலும் சென்று இன்றும் காணலாம்..
இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்,












Click it and Unblock the Notifications