இந்து மதத்தை அழிக்க பார்க்கிறார் கருணாநிதி: ராமகோபாலன் காட்டம்
சென்னை: கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் எஸ்.சி., எஸ்.டி சலுகையை நீடிக்க திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு வைக்கும்
கோரிக்கை இந்து மதத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்டது என்று, இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் குற்றம்சாட்டியுள்ளார்.
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை நடைமுறைப்படுத்தவோ, தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வலியுறுத்தி போராட்டத்திற்கு திமுக தலைவர் ஆதரவு தெரிவிப்பதில்லையே ஏன்? என்றும் ராமகோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் எஸ்.சி., எஸ்.டி சலுகையை நீடிக்க திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு வைக்கும் கோரிக்கை இந்து மதத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்டது.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி அவர்கள் பாரத பிரதமருக்கு எஸ்.சி., எஸ்.டி. சலுகையை மதமாறிய கிறிஸ்தவ தலித்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
சட்டமேதை அம்பேத்கர் இந்த விஷயத்தில் சரியானதொரு கண்ணோட்டத்தை கொடுத்துள்ளார். இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை மேம்படுத்த என்றும், மத ரீதியான இடஓதுக்கீடு கூடாது என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார்.
திமுகத் தலைவர் கருணாநிதியின் கூட்டணிக்கு கன்னியாகுமரியில் கிறிஸ்தவ சர்ச்கள் பகிரங்கமாகத் தெரிவித்த ஆதரவிற்கான நன்றிக்கடனாகவே இவர் இந்தக்கோரிக்கையை வைக்கிறார் எனக் கருத இடம் இருக்கிறது.
இதே நிலைப்பாட்டில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை நடைமுறைப்படுத்தவோ, தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வலியுறுத்தி போராட்டத்திற்கு திமுக தலைவர் ஆதரவு தெரிவிப்பதில்லையே ஏன்?
கிறிஸ்தவ சர்ச்களுக்கு சமூக மேம்பாட்டிற்காக கோடானகோடி நிதி வருகிறதே, அவற்றை இந்து எஸ்.சி., எஸ்.டி.க்கள் மேம்பாட்டிற்கு பங்கிட்டுத் தர கோரிக்கை விடுப்பாரா? இந்தக் கோரிக்கையை மதச்சார்பின்மையின் பெயரால் திமுகத் தலைவர் கருணாநிதி வைப்பதானால், சர்ச் நிர்வாகம் கிறிஸ்தவர்களிடமும், மசூதி நிர்வாகம் முஸ்லீம்களிடம் இருப்பதுபோல, மதச்சார்பின்மை அரசுக்கு கோயிலில் என்ன வேலை? அதனை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும், மதச்சார்பின்மை அரசாங்கத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் எதற்கு என என்றாவது கேட்டிருக்கிறாரா?
தி.மு.க. கட்சியின் நிறுவனர் அண்ணாதுரை நினைவு நாளில் சமபந்தி போஜனம் ஏன் கோயில்களில் கோயில் செலவில் போட வேண்டும் என கேட்டதுண்டா? இவர் பேசுவது போலி மதச்சார்பின்மை என்பது அவரது மனசாட்சிக்கே தெரியும்.
எஸ்.சி., எஸ்.டி., சலுகையை மதமாறிய கிறிஸ்தவர்களுக்கு நீட்டித்தால், தன்மானத்தோடு வாழும் இந்து எஸ்.சி., எஸ்.டி.க்களின் வாழ்வாதாரம் பறிபோகும். கிறிஸ்தவர்கள் நடத்தும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் மூலம் அதிக தகுதியை தகிடுதத்தம் செய்து ஏற்படுத்தி மதம் மாறிய எஸ்.சி., எஸ்.டி.க்களைக்கொண்டு அந்த சலுகைகளை முழுவதுமாக அபகரித்து இந்து எஸ்.சி., எஸ்.டி. நிராதவராக ஆக்கிவிடுவார்கள் என இந்து முன்னணி எச்சரிக்கிறது.
மதமாறியவர்களுக்கு சலுகை என்பது, இந்துக்களை ஆட்டுமந்தைகளைப்போல மதமாற்றம் செய்வே இந்தக் கோரிக்கையை வைக்கப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் திமுகத் தலைவர் கருணாநிதியின் இந்தக் கோரிக்கையை தலித்களின் நலனுக்காக போராடுவதாக கூறும் அமைப்புகள், கட்சிகள் எதிர்க்க முன்வர வேண்டும்.
மதமாறிய எஸ்.சி., எஸ்.டி.க்கள் தங்களது பெயர்களையும், மதத்தையும் சான்றிதழ்களில் மாற்றாமல் சலுகைகளை முறைகேடாக அனுபவித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக மாநில, மத்திய அரசுகள் விசாரணை நடத்தி, முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தலைவர் கருணாநிதியின் மதமாறியவர்களுக்கு சலுகை என்பதை கோரிக்கையை இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு ராம கோபாலன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications