மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோர் பணியிடத்தை நிரப்ப உரிய நடவடிக்கை தேவை: கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: மண்டல் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் முழு அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படவும் பணியிடங்களைப் பற்றிய விபரங்களைத் தொகுத்து வெள்ளை அறிக்கை ஒன்றினை வெளியிடவும்; நிரப்பப்படாமல் விடுபட்டுப் போன பின்னடைவுப் பணியிடங்களைக் கணக்கிட்டு நியமனங்கள் நடைபெறுவதை உறுதி செய்திடக் கண்காணிப்பு அமைப்பு ஒன்றினை உருவாக்கிடவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் தலைமையில் அமைந்திருந்த மத்திய அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகள்படி அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டு, இருபதாண்டுகளுக்குப் பிறகு அந்த ஆணையின் மூலம் எந்த அளவுக்குப் பயன் விளைந்திருக்கிறது என்பது பற்றி 26-12-2015 அன்று "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேட்டில் வந்துள்ள செய்தி சமூக அக்கறையுள்ள அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.
"20 years after Mandal, less than 12% OBCs in Central Govt. Jobs" என்ற தலைப்பில் வந்துள்ள அந்தச் செய்தியில், "மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தத் தொடங்கி 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்ற விவரப்படி, 12 சத விகிதத்திற்கும் குறைவான பிற்படுத்தப்பட்டோரே 1-1-2015 அன்றைய நிலையில் மத்திய அரசின் அமைச்சகங்களிலும், மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றுகிறார்கள்.

இதுதான் பிரதிநிதித்துவம்
மத்திய அரசின் துறைகளில் ஏ, பி, சி, மற்றும் டி ஆகிய பிரிவுகளிலான பதவிகளில் பணியாற்றும் மொத்தம் 79,483 பேரில், 9,040 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 9 சதவிகிதத்திற்கு குறைவாகவும், டி.ஓ.பி.டி. எனப்படும் மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையில் 6.67 சதவிகிதத்திற்குக் குறைவாகவும் தான் பிற்படுத்தப்பட்டோர் அமர்த்தப்பட்டுப் பணியாற்றி வருகிறார்கள்.

ஜனாதிபதி மாளிகையில் "பி.சி" இல்லை
பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையில் மொத்தம் 6,879 பேர் பணியாற்றுவதில், தாழ்த்தப்பட்டோர் 12.91 சதவிகிதத்தினரும், பழங்குடியினர் 4 சதவிகிதத்தினரும் பணியாற்றுகிறார்கள். இந்தியக் குடியரசுத் தலைவரின் செயலகத்தில் பணி புரியும் ஏ பிரிவு அலுவலர் களிடையே பிற்படுத்தப்பட்டோர் யாரும் இல்லை என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும். மத்திய அரசின் உயர்கல்வித் துறையில் "ஏ" பிரிவு அலுவலர்களில் 5 சதவிகிதத்தினர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் பணியாற்றுகிறார்கள். மற்ற பிரிவு ஊழியர்களில் 10 சதவிகிதத்தினர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர்" என்றெல்லாம் "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு தெரிவித்துள்ளது.

வஞ்சிக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர்
வெளிச்சத்திற்கு வந்திருக்கும் இந்த விபரங்களிலிருந்து, மண்டல் கமிஷன் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகும் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கோ, தாழ்த்தப்பட்டோருக்கோ வரையறை செய்யப்பட்டுள்ள உரிய சதவிகிதப்படி பணிகள் வழங்கப்படவில்லை என்பதும், மிகக் குறைந்த சதவிகிதத்தினருக்கே பணிகள் வழங்கப்பட்டு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை தொடக்கத்திலிருந்தே இடஒதுக்கீட்டுக்குள் பொருளாதார அளவுகோலைத் திணிப்பதையோ, பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பதையோ ஏற்றுக் கொண்டதில்லை.

திமுக தீர்மானம்
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திட வேண்டுமென அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அரசியல் இயக்கங்களில் முக்கியமான ஒன்று தான் திராவிட முன்னேற்றக் கழகம். இன்னும் சொல்லப் போனால் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாகவே, கழகமும் இடம் பெற்றிருந்த தேசிய முன்னணி அரசின் பிரதமர் - சமூக நீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்கள் காலத்திலிருந்தே, மத்திய அரசு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (Other Backward Classes) 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை வழங்கி வருகிறது. 18-4-2008 அன்று தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது, "சமூக நீதிப் பயணத்தில் நாம்" என்ற பொருள் பற்றி விவாதிப்பதற்காக நடைபெற்ற தி.மு. கழக உயர் நிலைச் செயல் திட்டக் குழுக் கூட்டத்தில், நீண்ட நேரம் விவாதித்து, நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து அது நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானம் வருமாறு :-
"மண்டல் கமிஷன் தொடர்பான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பில் - 27 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை விலக்கிவிட வேண்டுமென்று (exclusion of creamy layer) தெரிவித்திருப்பது உறுத்தலாக அமைந்துவிட்டது.

கிரீமிலேயர் கூடாது ஏன்?
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் தமிழகத்தில் நடத்திய பெரும் கிளர்ச்சியின் காரணமாகவும் - பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் கொடுத்த அழுத்தத்தினாலும் (pressure) - பண்டித நேரு அவர்கள் முன்வந்து இந்திய அரசியல் சட்டத்தில் 1951ஆம் ஆண்டு நிறைவேற்றிய முதலாவது திருத்தத்தின் மூலம், இணைக்கப்பட்ட 15 (4) என்ற புதிய பிரிவில் "சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும் (socially and educationally)" என்ற சொற்றொடர்தான் இணைக்கப்பட்டது. அப்போது சிலர் "பொருளாதார ரீதியாக (economically)" என்ற சொற்றொடரும் இடம்பெற வேண்டுமென்று வலியுறுத்தியும், அதனைப் பண்டித நேரு அவர்களோ, அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் அவர்களோ ஏற்றுக் கொள்ளவில்லை. "சமூகரீதியாக" என்பது பரந்துபட்ட பல பொருள்களை உள்ளடக்கிய விரிவானதொரு சொல்லாகும். (‘socially' is a much wider word including many things)" என்று பண்டித நேரு விளக்கமளித்தார்.

பொருளாதார ரீதியாக...
அன்றிலிருந்து இன்றுவரை "சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும்" என்ற சொற்றொடர் இந்திய அரசியல் சட்டத்தில் எவ்வித மாற்றத்திற்கும் உட்படுத்தப்படாமல், நிரந்தரமாகி விட்ட நிலையில்; "பொருளாதார ரீதியாக" என்ற இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெறாத சொற்றொடரைப் பயன்படுத்தி "பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கிவிட வேண்டும்" என்று சொல்வது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை நீர்த்துப் போகச் செய்துவிடும்.

இடஒதுக்கீடு ஏன்?
இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. பல நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட - சமூக ரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு - அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.

கிரீமிலேயர் கூடாது ஏன்?
ஒரு குடும்பத்தினுடைய ஆண்டு வருவாய் என்பது ஆண்டுக்காண்டு பல்வேறு காரணிகளால் வேறுபடுவது கண்கூடு. எனவே, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் வருமான வரம்புக்கு மிகுந்த வருமானத்தின் காரணமாக இடஒதுக்கீட்டுக்குத் தகுதியில்லை என்று சான்றளிக்கப்பட்ட ஒருவர், வேறு ஒரு ஆண்டில் வருமான வரம்பிற்கு உட்பட்ட வருமானத்தின் காரணமாகச் சான்றிதழ் பெறுவதற்கு வாய்ப்புண்டு. அதைப்போலவே, ஒரே குடும்பத்தில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் சான்றிதழ் பெறுவதற்குத் தகுதி பெற்றவராகவும், மற்றொருவர் மற்றொரு ஆண்டில் சான்றிதழ் பெறுவதற்குத் தகுதியில்லாதவராகவும் ஆகிவிடுவதற்கும் வாய்ப்புண்டு. இது ஒரு தாயின் வயிற்றுப் பிள்ளைகளுள் வேறுபாட்டையும், சில நேரங்களில் வெறுப்பையும், பகைமையையும் உருவாக்குவதற்கு வழி வகுத்தது போல் ஆகி விடும். பிற்படுத்தப்பட்டோரைப் பேதப்படுத்தினால் முழு இடஒதுக்கீட்டு அளவும் அவர்களுக்குக் கிட்டாமல் போய்விடக் கூடும்.

மண்டல் குழு பயனளிக்கவில்லையே
நாமும், நம்மைப் போன்ற சமூக நீதி ஆர்வலர்களும் நீண்ட காலமாகப் படாத பாடுபட்டு கொண்டு வந்து நிறைவேற்றிய மண்டல் குழுவின் பரிந்துரைகளுக்கு மாறாக நிலைமை தற்போது வளர்ந்து வருகிறது என்பதைப் பார்க்கும்போது பெரும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது. பிற்படுத்தப்பட்டோருள் பொருளாதார ரீதியாக முன்னேறிய பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைத்திட வேண்டும் என்ற அம்சத்தை நீக்கி, பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் பாகுபாடின்றி இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிப்பதற்கு ஏதுவாக அனைத்து முயற்சிகளையும் பண்டித நேருவும், அண்ணல் அம்பேத்கரும் எடுத்துரைத்த கருத்துக்கு முரண் இல்லாமல், சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டுமென்றும்;
இதற்கிடையே - அரிய வாய்ப்பாக மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் நீண்டகாலத்திற்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்துள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டினை முழுமையாகவும், உடனடியாகவும் வரும் கல்வியாண்டு முதலே நடைமுறைப்படுத்திட வேண்டுமென்றும்; மத்திய அரசை கழகத்தின் உயர்நிலை செயல் திட்டக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது"

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
நான் முன் மொழிந்த இந்த முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கும் அப்போதே அனுப்பி வைத்தோம்.
உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பிலேயே "Government can make a relaxation to some extent so that sufficient number of candidates may be available for the purpose of filling up the 27 per cent reservation. It is for the Union Government and the State Governments to issue appropriate guidelines to identify the ‘creamy layer' so that SEBC are properly determined in accordance with the guidelines given by this Court. If, even by applying this principle, still the candidates are not available, the State can issue appropriate guidelines to effectuate the implementation of the reservation purposefully. - அதாவது; 27 சதவீத இடஒதுக்கீட்டினை முழுமையாக நிரப்பிடும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்கள் கிடைத்திடத் தக்கவகையில், ‘கிரீமிலேய ருக்கான' அளவுகோல்களை ஓரளவுக்கு அரசு தளர்த்திக் கொள்ளலாம். இந்த நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஒட்டி - சமூகரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்டோரை முறையாகத் தீர்மானித்திட -

திருத்தம் தேவை
மத்திய அரசும், மாநில அரசுகளும் - ‘கிரீமிலேயரை' அடையாளப்படுத்துவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவதைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம். அதற்குப்பிறகும் தேவையான அளவுக்கு விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்றால், இடஒதுக்கீட்டினை - அதன் நோக்கம் நிறைவேறும் வகையில் - செயல்படுத்திடத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வழங்கலாம்" என்று குறிப்பிடப் பட்டுள்ளதால்; கிரிமிலேயருக்கான அளவுகோள்களைத் திருத்திக் கொள்ள தீர்ப்பிலேயே இடம் உள்ளது என்பதையும் நாம் ஒதுக்கித் தள்ளி விட முடியாது.

தேர்தல் அறிக்கையில்...
திராவிட முன்னேற்றக் கழகம் தனது 2014ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில், "சமூக நீதி" என்ற தலைப்பில் குறிப்பிடும்போது, "மண்டல் குழு பரிந்துரை குறித்த உச்ச நீதி மன்றத் தீர்ப்பால், சமூக நீதிக் கொள்கை முழுமை அடைவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அதன்படி இட ஒதுக்கீடு அதிக பட்சம் ஐம்பது சதவிகிதம் தான் இருக்க வேண்டும் என்பதும், பிற்படுத்தப் பட்டோரில் பொருளாதார ரீதியாக முன்னேறியவர்கள் (Creamy layer) என்று கருதப்படுவோர்க்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதும் சமூக நீதிக்குப் புறம்பானவை என்பதால் அதனை மாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வர தி.மு.க. வலியுறுத்தும்" என்றெல்லாம் சொல்லியிருந்தோம்.

சிறப்பு நியமனம்- வேண்டுகோள்
இந்த வேதனைகள் நீங்கவும், மண்டல் கமிஷன் அறிக்கையின் பரிந்துரைகள் முழு அளவுக்கு நடைமுறைப்படுத்தப்படவும் "கிரீமிலேயர்" என்ற பாகுபாட்டுப் பிரிவினை நீக்கிடத் தேவையான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதோடு; பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர்க்கு இதுவரை துறைவாரியாக வழங்கப்பட்டுள்ள பணியிடங்களைப் பற்றிய விபரங்களைத் தொகுத்து வெள்ளை அறிக்கை ஒன்றினை வெளியிடவும்; அவர்களுக்கு நிரப்பப்படாமல் விடுபட்டுப் போன பின்னடைவுப் பணியிடங்களை(Back Log Vacancies)க் கணக்கிட்டு, சிறப்புத் தேர்வுகளுக்கும் - நியமனங்களுக்கும் திட்டமிட்டு நிறைவேற்றிடவும்; இனி வருங்காலத்தில் மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர்க்கு உரிய சதவீதப்படி நியமனங்கள் நடைபெறுவதை உறுதி செய்திடக் கண்காணிப்பு அமைப்பு ஒன்றினை உருவாக்கிடவும்; மத்திய அரசு உடனடியாக ஆவன செய்திட வேண்டுமென்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் சார்பாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருகின்ற சமூக நீதி இயக்கங்களின் சார்பாகவும் மத்திய அரசை, குறிப்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்!
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு












Click it and Unblock the Notifications