நாளுக்கு நாள் மோசமாகும் இலங்கை நடவடிக்கைகள்.. மீனவர் பிரச்சனைக்கு தகுந்த தீர்வே கிடையாதா?
சென்னை: இலங்கை கடற்படையின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன... தமிழக மீனவர் பிரச்சனைக்கு தகுந்த தீர்வே கிடைக்காதா? என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
இலங்கை சிங்களவாத அரசை, இந்திய அரசு என்ன தான் திரும்பத் திரும்ப நட்பு நாடு என்று சொல்லி வந்த போதிலும், அந்த நல்லெண்ணத்தில் ஓரளவாவது இலங்கை அரசுக்கு இருக்கிறதா என்ற கேள்வி தமிழ் மக்களிடையே பல ஆண்டுக் காலமாக விடையின்றி இருந்து வரும் நிலையில், அதே அய்யப்பாட்டினை மீண்டும் மீண்டும் நிரூபித்திடும் வகையிலே தான் சிங்கள அரசின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தின் பல பகுதிகளிலேயிருந்து மீன் பிடிப்பதற்காகச் செல்லும் அப்பாவி மீனவர்களை இலங்கை அரசின் கடற்படையினர் என்ன பாடு படுத்தி அலைக்கழித்து வருகிறார்கள் என்பதைத் தொடர்ந்து நாம் கண்டு கலக்கமடைந்து வருகிறோம். ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, இலங்கைச் சிறையிலே அடைக்கப்பட்டதும், நமது மீனவர்கள் உண்ணாவிரதம் இருப்பதும், உடனடியாக தமிழக முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதுவதும், பிரதமரும் அந்தக் கடிதத்தை வெளியுறவுத் துறைக்கு அனுப்பி, அவர்கள் இலங்கை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதும் தான் வழக்கமாகிப் போய் விட்ட நடைமுறை.
ஆனால் அதைப் பற்றி எந்தக் கவனமும் எடுத்துக் கொள்ளாமல் கவலையின்றி இருக்கும் இலங்கை அரசினர், ஒரு சில நாட்களுக்குப் பிறகு இலங்கைச் சிறையிலே இடம் இல்லாத காரணத்தாலோ என்னவோ தன்னிச்சையாக விடுதலை செய்து இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள்.
இந்தியா - இலங்கை கடல் எல்லைகள் துல்லியமாக நிர்ணயிக்கப்படாத சூழ்நிலையில், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்கையில் அவ்வப்போது எல்லை தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் தங்களையும் அறியாமல் சென்று விடுகிறார்கள். அது போலவே தான் இலங்கை மீனவர்களும் பல நேரங்களில் எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் வந்து மீன் பிடிக்கிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் தான் இலங்கை மீன் வளத் துறையின் டைரக்டர் ஜெனரல் பெர்னாண்டோ என்பவர், ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எல்லை தாண்டி மீன் பிடிக்கும் விஷயத்தைச் சமாளிக்கும் அளவுக்கு இலங்கையில் தற்போது நடைமுறையிலே உள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை. எனவே, இலங்கை மீன் வளச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்தால் பதினைந்து கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என்று அபராதத்தின் கடுமையைப் பற்றியோ, அதை நடைமுறைப்படுத்திடச் சட்டம் இடம் தருமா என்பதைப் பற்றியோ, அபராதத் தொகையை வசூலிக்க மீனவர்களின் பொருளாதாரப் பின்னணி ஏற்றது தானா என்பதைப் பற்றியோ, சிறிதும் சிந்தித்துப் பார்க்காமல் தமிழக மீனவர்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தும் நோக்கில் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இந்தக் கருத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று தமிழகத்திற்கு ஒரு விழாவிலே கலந்து கொள்ள வந்த இலங்கை அமைச்சர் ரவுப் ஹாகிம் என்பவர் தெரிவித்திருப்பது சற்று ஆறுதலைத் தருகிறது என்ற போதிலும், இலங்கை அரசின் அமைச்சர்களும், அதிகாரிகளும் இந்தியாவுக்கு வந்தால் ஆதரவாகப் பேசுவதும், இலங்கைக்குச் சென்றால் அதற்கு மாறாகப் பேசுவதும் தொடரும் நிகழ்வுகளாகி விட்டன.
இன்று (28-10-2015) வந்துள்ள செய்தியிலே கூட, இலங்கையிலே நடைபெற்ற இறுதிப் போருக்குப் பிறகு, அங்கிருந்த தமிழர்களில் பலரை எந்தக் காரணமும் இல்லாமல் விசாரணைக் கைதிகள் என்ற பெயரில் ராஜபக்சே அரசு சிறையிலே அடைத்து வைத்துள்ளது. ஆறு ஆண்டுகளாகியும் அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, சிறீசேனா அதிபராக பதவியேற்றுள்ள நிலையில், சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்ற தமிழர்களுக்கு விடுதலை கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி கிடைக்காததால், சிறைக் கைதிகள் ஆறுநாட்கள் உண்ணாவிரதமும் இருந்தார்கள்.
நவம்பர் 7ஆம் தேதி அவர்கள் எல்லாம் விடுதலை செய்யப் படுவார்கள் என்று சிறீசேனா அளித்த வாக்குறுதியைத் தொடர்ந்து, உண்ணா விரதம் இருந்தவர்கள் அதனைத் திரும்பப் பெற்றார்கள். ஆனால் அதற்குப் பிறகு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிறையில் உள்ள தமிழர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என்று முடிவெடுத்திருப்பதாகவும், அவர்கள் விருப்பப்பட்டால் ஜாமீன் கோரலாம் என்றும் அமைச்சர் மனோ கணேசன் என்பவர் தெரிவித்திருப்பது சிங்கள அரசின் மனோபாவம் தமிழர்களைக் குறித்து இன்னமும் அப்படியே தான் தொடர்கிறதோ என்று தான் எண்ண வேண்டியுள்ளது.
இதற்கிடையே 26ஆம் தேதி வெளி வந்த செய்திகளில், இலங்கைச் சிறையிலிருந்து, அங்கே வாடிக் கொண்டிருக்கும் 86 தமிழக மீனவர்கள் 28ஆம் தேதியன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், அந்தச் செய்தியின் அடிப்படையில் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 26-10-2015 மாலையிலும், 27-10-2015 காலையிலும் வந்த செய்தியில், தமிழக மீனவர்கள் 34 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் செய்தியில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினத்திலிருந்து 399 விசைப்படகுகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்ற போது, அவர்கள் இந்தியக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போதே, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் பத்து மீனவர்களையும், அவர்களது இரண்டு படகுகளையும் கயிறு கட்டி இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.
அதுபோலவே ராமேஸ்வரம் மீனவர்கள் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே வந்த இலங்கைக் கடற் படையினர் பத்து மீனவர்களையும், அவர்களது இரண்டு படகுகளையும் சிறைப் பிடித்து நெடுந்தீவு கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். மன்னார் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரையும், அவர்களது படகுகளையும் சிறைப் பிடித்து தலைமன்னார் கடற்படை முகாமுக்குக் கொண்டு சென்றுள்ளார்கள். எனவே 26-10-2015 அன்று ஒரே நாளில் மட்டும் 34 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள்.
தொடர்ந்து இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு தமிழக மீனவர்கள் உட்படுத்தப்பட்டு, துன்பங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வோர் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்ப வருவார்களா என்பதே கேள்விக் குறியாக உள்ளது. முடிவின்றித் தொடரும் தமிழக மீனவர்களின் இந்தத் துயர நிலை குறித்து உணர்வு பூர்வமான அணுகுமுறையைத் தவிர்த்து, மத்திய மாநில அரசுகள் இயந்திரத்தனமாக கடிதங்கள் மூலமாகவே சமாதானப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
மீனவர்களின் இந்த நீண்ட காலப் பிரச்சினைக்கு உரியதோர் தீர்வு காண இதுவரை உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகள் இனியாவது ஆக்க பூர்வமான தீவிரமான முயற்சியை மேற்கொண்டு, வருங்காலத்தில் தமிழக மீனவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்று உறுதிப்படுத்துவதற்கு உகந்த வழி காண வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications