காட்பாடி டூ ஜோலார்பேட்டை.. ஆரஞ்சு கலரில் வந்து நின்ற அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்.. குஷியான மக்கள்
திருப்பத்தூர்: சாமான்ய மக்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளதாக, அம்ரித் பாரத் ரயிலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அயோத்தியில் 2 அம்ரித் எக்ஸ்பிரஸ் ரெயில்களை கடந்த 30ம் தேதி பிரதமர் மோடி, காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்... அதில் ஒரு அமரித் எக்ஸ்பிரஸ் ரயில் மேற்குவங்க மாநிலம் மாவட்டத்தில் புறப்பட்டது .

இது 5 மாநிலங்கள் இணைக்கும் வகையில், அதாவது, மேற்குவங்க மாநிலம் , ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா என்று 5 மாநிலங்களை இணைக்கிறது. இந்த ரயில் கடந்த 30ம் தேதி புறப்பட்டு 32 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது . இந்த ரயில் மால்டா இருந்து பெங்களூர் விஸ்வேஸ்வரய்யா டவுன் வரை 2247 கிலோ மீட்டர் பயணிக்கிறது.
பெட்டிகள்: இதனுடைய பயண நேரம் மொத்தம் 42 மணி நேரமாகும். இதில் 8 பெட்டிகள் உட்காரும் வசதி கொண்டதாகவும், 12 பெட்டிகள் படுக்கை வசதி கொண்டதாகவும் உள்ளது. இந்த அம்ரித் பாரத் ரயில், வந்தே பாரத் ரயில்போல அதிவேகமாக செல்லக்கூடியது. 110 கிலோமீட்டர் இருந்து 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது...
AC வசதி அல்லாமல், சாதாரண ரயில் பெட்டிகளும் இதில் உள்ளது.. மொத்தம் 22 பெட்டிகள் இதில் அடங்கியுள்ளன. ஆரஞ்சு மற்றும் கிரே கலரில் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1,600 பேர் பயணிக்கலாம் வகையில் இந்த ரயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் இரண்டு இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதல்முறை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் தமிழகத்திற்கு வந்தது.. காட்பாடி, ஜோலார்பேட்டை என இரண்டு ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும் நிலையில், நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையத்துக்கு இந்த ரயில் வந்தது..
உற்சாக வரவேற்பு: இந்த ரயிலை தென்னக ரெயில்வே முதுநிலை கோட்ட மேலாளர் அரிகிருஷ்ணன் மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் ரயில்வே ஊழியர்கள் பலர் பூக்களை தூவி, முதல் ரயிலை வரவேற்றனர்.. அந்தவகையில், காட்பாடி ரெயில் நிலையத்தில் அம்ரித் எக்ஸ்பிரஸ் ரெயில் 5 நிமிடம் நின்று சென்றது.
அந்தவகையில், முதல் முதலாக வந்த அம்ரித் பாரத் ரயிலில் பயணித்த பயணிகள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அப்போது, மற்ற ரயில்களை காட்டிலும், இந்த ரயிலில் ஒருசில ஏற்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும், களைப்பே தெரியாத அளவுக்கு பயணம் எளிதாக இருந்ததாகவும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சிறப்பு வசதிகள்: சீட்களில் குஷன் வசதிகள் இருப்பதுடன், ஃபேன்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறதாம்.. ஒவ்வொரு சீட்டிலும் தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருக்கிறதாம்.. செல்போன் சார்ஜர்களும் இருக்கின்றன.. கை கழுவும் இடத்தில் காலில் மிதித்தால் தண்ணீர் வரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
அதுமட்டுமல்ல, புஷ் புல் முறையில் ரயில் இயக்கப்படுவதால் அம்ரித் பாரத் ரயிலின் பிக்கப், அருமையாக உள்ளதால், கிட்டத்தட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடைக்கும் அனுபவம், இந்த அம்ரித் ரயில் பயணத்திலும் கிடைப்பதாக கூறினார்கள்.












Click it and Unblock the Notifications