எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்னரே ரூ.1லட்சம் ஊதியம் வாங்கிய திரைப் பேராளுமை 'கொடுமுடி கோகிலம்'- கேபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரையுலகம் எத்தனையோ ஆளுமைகளை இன்றளவும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.. இவர்களில் அதிகமாக கொண்டாடப்பட வேண்டிய பெண் ஆளுமை 'அவ்வையார்'தான்.. ஆம் இன்றைய தலைமுறைக்கும் 'அவ்வையார்' எனில் திருவிளையாடல் திரைப்படத்தில் வரும் அந்த அவ்வையார்தான் வாழும் சாட்சி.. அவர்தான் கே.பி.எஸ் எனப்படும் கே.பி. சுந்தராம்பாள் என்கிற தமிழ்ப் பெரும்பாட்டியார்.

திரை உலகின் ஆண் ஆளுமைகளான எம்ஜிஆர், சிவாஜிக்கு எல்லாம் ரொம்பவே சீனியர்தான் கேபி சுந்தராம்பாள். 1939-ம் ஆண்டு வெளியான நந்தனார் திரைப்படத்துக்கு அன்றே கேபி சுந்தராம்பாள் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினார். இன்றைய மதிப்பில் ரூ10 கோடி. எம்ஜிஆர், சிவாஜிக்கு முன்னரே இவ்வளவு பெரிய சம்பளம் பெற்ற முதல் பெண் ஆளுமை அம்மையார் கேபிஎஸ்தான்.

நந்தனார் படத்தில் 41 பாடல்கள்.. இதில் ஆண்வேடமிட்டு நந்தனாராக நடித்த கேபிஎஸ் பாடிய பாடல்கல் மொத்தம் 16 என்பது இன்றைக்கு நினைத்து பார்க்கவே மலைப்பாக இருக்கிறதே.

இத்தனைக்கும் கேபிஎஸ் அம்மையார் ஒன்றும் சபாக்களின் பரம்பரை வாரிசும் அல்ல.. பசி பட்டினியால் கோவில்களில் தஞ்சமடைந்து வறுமையில் வாடிய போது காதுகளில் விழுந்த கச்சேரி கீதங்கள் கேபிஎஸ்ஸை செழுமையான ஆளுமையாக செதுக்கியது. கேபிஎஸ் பாடாத கச்சேரிகளே இல்லை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்.. இன்றைய நாள் வரை கேபிஎஸ்-ன் உச்சஸ்தாயி குரலை வென்றெடுக்க ஒரு ஆளுமையும் பிறந்தும் வந்துவிடவில்லை.

கேபிஎஸ் திருமண வாழ்க்கை அப்படி ஒன்றும் மகிழ்வானதாகவும் இல்லை;

புகழ்பெற்ற திரைநட்சத்திரமான கிட்டப்பாவை திருமணம் செய்து கொண்ட கேபிஎஸ்க்கு 6 ஆண்டுகள் மட்டுமே திருமண வாழ்வு அமைந்தது. ஆம் 25 வயதில் கணவரை இழந்தார். கணவரை இழந்த பின்னர் திரைப்படங்களில் ஆண்களுடன் இணைந்து நடிப்பதையே கைவிட்டார். தனித்துவமான ஆளுமையாக திரைப்பயணத்தைத் தொடர்ந்தார். இதன் உச்சம்தான் திருவிளையாடல் அவ்வையார்.

அவ்வையார் எப்படி இருப்பார்? திருவிளையாடல் படம்தான் நினைவுக்கு வரும்.. அவ்வையாராகவே வாழ்ந்து பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா என அன்று தன் சொந்த குரலில் பாடிய கேபிஎஸ்-ன் குரல் இன்று மட்டுமல்ல நூற்றாண்டுகளைக் கடந்தும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் முருகப் பெருமான் திருத்தலங்களில் கணீரென ஒலித்துக் கொண்டுதான் இருக்கப் போகிறது.

கேபிஎஸ் அம்மையார் திரை ஆளுமை மட்டுமல்ல.. சுதந்திரப் போராட்ட வீரர்.. திரைப் பாடல்களை மட்டுமா பாடினார்? அன்றைய விடுதலைப் போரில் தேசபக்திப் பாடல்களையும் தமது கணீர் குரலில் பாடினார். இதனால் தேசப்பிதா மகாத்மா காந்திஜியின் பேரன்புக்குரியவரானார். அந்த நாளில் காந்தியோ பரம ஏழை சந்நியாசி என்ற கேபிஎஸ் பாடல், தேர்தல் களங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெருவாரியான வாக்குகளை வாரிக் கொடுத்தது என்பதும் சரித்திரம்தான்.

அதேபோல "ஓட்டுடையாரெல்லாம் கேட்டிடுங்கள், இந்த நாட்டின் நலத்தை நாடிப் போட்டிடுங்கள்" என்ற கே.பி.சுந்தராம்பாளின் பிரசார பாடல், அன்றைய தலைமுறை வாக்காளர்களை அலை அலையாக காங்கிரஸ் பக்கம் இழுத்து வந்தது. கொடுமுடி கோகிலம், தமிழிசைச் செல்வி, ஏழிசை வல்லபி என்பது மக்கள் கேபிஎஸ்-க்கு அள்ளித் தந்த அன்பு பட்டங்கள். தமிழ்நாடு சட்ட மேலவையில் கேபிஎஸ் உறுப்பினராக (எம்.எல்.சியாக இருந்தார்). சுதந்திரப் போராட்ட வீரர் சத்தியமூர்த்தியின் பொருளாதார நிலையை கண்டு வருந்திய கேபிஎஸ் அம்மாள் சென்னை மாம்பலத்தில் நான்கரை கிரவுண்ட் நிலத்தை அப்படியே எழுதிக் கொடுத்தார்.. இன்றைக்கு அந்த நான்கரை கிரவுண்ட் நிலத்தின் மதிப்பு எத்தனை நூறுகள் கோடிகள் தெரியுமா?

தமிழினத்தின் ஆகச்சிறந்த பெண் ஆளுமையான கொடுமுடி கோகிலம் எனும் "அவ்வையார்" கேபி சுந்தராம்பாள் அம்மாளை வணங்கி பெருமிதம் கொள்வோம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+