புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றுக் கொண்ட கிரண்பேடி
சென்னை: புதுச்சேரி மாநிலத்தை அனைத்து துறைகளிலும் வளமான மாநிலமாக மாற்ற பாடுபடுவேன் என்று அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக பதவியேற்றுள்ள கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
அந்தமான் ஆளுநரான அஜய் குமார் சிங் கூடுதலாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்த நிலையில், அம்மாநில ஆளுநராக முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி நியமிக்கப்பட்டார். அவர் புதுச்சேரி ஆளுநராக இன்று மாலை 6.30 மணிக்கு பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குலுவாரி ரமேஷ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னதாக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிரண்பேடி, புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று பதவி ஏற்க உள்ளேன். புதுச்சேரி மாநிலத்தில் கல்வி, சுகாதாரம், மீன்வளம், சுற்றுலா, விவசாயம், தொழில்துறை, பெண்கள் நலன், கிராமபுற வளர்ச்சி, பொருளாதாரம் உள்பட அனைத்து துறைகளையும் மேம்படுத்தி புதுச்சேரியை வளமான மாநிலமாக மாற்ற பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications