கொடநாடு வழக்கில் திடீர் “ட்விஸ்ட்”.. கனகராஜுக்கு 5 முறை வந்த ஃபாரீன் கால்.. உள்ளே வரும் இன்டர்போல்!
நீலகிரி: கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் இறப்பதற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து 5 முறை அழைப்பு வந்ததை இன்டர்போல் காவல்துறை உதவியுடன் கண்டுபிடித்து உள்ளதாக நீதிமன்றத்தில் தகவல் சிபிசிஐடி போலிசார் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரலில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கோடநாடு எஸ்டேட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கினர். சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தனர். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் எனக் கூறப்படும் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கு 6 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, நீலகிரி, சேலம் பகுதிகளில் சிபிசிஐடி போலீசார் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நேற்று (ஜூன் 22) உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தின் ஜாய், வாளையார் மனோஜ், உதயகுமார், ஆகிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
அதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞரான ஷாஜகான், கனகராஜ் மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞரான விஜயன், முனிரத்தினம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அரசு வழக்கறிஞர்கள் சார்பில் கோடநாடு வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை குறித்து நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் நீதிமன்றத்தில் வாதிடுகையில், "கோடநாடு கொலை வழக்கில் கொலை நடந்த இரண்டு மூன்று நாட்களில், சேலத்தில் இறந்துபோன முக்கிய குற்றவாளி கனகராஜின் செல்போனிற்கு 7 இலக்க வெளிநாட்டு எண்ணில் இருந்து, 5 முறை அழைப்பு வந்துள்ளது. இது குறித்து இன்டர்போல் காவல்துறை உதவியுடன் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் வெளி மாநிலத்தில் விசாரணை, இண்டர்போல் விசாரணை உள்ளிட்ட பல்வேறு தரப்பு விசாரணை நடைபெற்று வருவதால் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிடவேண்டும் என்று எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் கோருவது விசாரணையை பாதிக்கும்" என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து மாவட்ட நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார். எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கொலை சம்பவம் நடந்த கோடநாடு எஸ்டேட்டை பார்வையிட வேண்டும் எனக் கோரி தாக்கல் மனு மீது வருகிற ஜூலை 26 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications