ரயிலில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து பலி: கோவில்பட்டியில் சோகம்
கோவில்பட்டி: கோவில்பட்டியில் ரயிலில் ஏற முயன்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கோவில்பட்டி வீரவாஞ்சிநகரை சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரின் மகன் 24 வயதான மாரி கணேஷ். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் மதுரையில் உள்ள வங்கியில் வேலை செய்து வருகிறார்.
மதுரையில் உள்ள அலுவலகத்துக்கு மாரி கணேஸ் தினமும் பஸ்சில் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் இன்று ரயிலில் செல்ல நினைத்து, காலை 6.45 மணிக்கு, நெல்லை - மயிலாடுதுறை ரயிலை பிடிப்பதற்காக கோவில்பட்டி ரயில் நிலையம் வந்தார். ரயில் புறப்பட்டுவிட்டதால், ஓடி சென்று ரயிலில் ஏற முற்பட்டார். அப்போது கால் தவறி ரயிலுக்கு அடியில் விழுந்த மாரி கணேஷ், ரயில் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் விரைந்து வந்து வங்கி ஊழியரின் உடலை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications