ஊருக்குக் கெளம்பிட்டீங்களா.. ஆன் தி வேயில் கோயம்பேட்டில் ‘வை -பை’ யூஸ் பண்ணலாமே..ஃப்ரீயா!
சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக வை-பை வசதி துவக்கப் பட உள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பஸ் நிலையம் என்ற பெருமையை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் (சி.எம்.பி.டி.) பெற்று உள்ளது. சென்னையிலிருந்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு பகுதிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்கின்றன. வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
இதனால், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்லும் பயணிகளின் நலனுக்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வை-பை வசதி ஏற்படுத்தப் பட உள்ளது.

செல்போன் உலகம்...
கைக்குள் செல்போன், செல்போனுக்குள் உலகம் என மாறி வருகிறது வாழ்க்கை. இதற்காகவே, செல்போனில் இணைய வசதி செய்து கொள்கிறார்கள். இவ்வாறு இணைய தள வசதி இல்லாதவர்களும் வை பை மூலம் இணையத்தைப் பயன் படுத்த முடியும்.

வை பை...
எனவே, பேருந்துக்காக காத்திருப்போரின் வசதிக்காக செல்போனில் இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வை பை வசதி ஏற்பாடு செய்யப் பட உள்ளது.

2 வாரத்தில்....
ஏற்கனவே சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் வை-பை வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் இன்னும் 2 வாரத்தில் வை பை வசதிகளை ஏற்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அதிகாரிகள் (சி.எம்.டி.ஏ.) நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சோதனை முயற்சி....
இது தொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே விளம்பரங்கள் செய்யப் பட்டுள்ளது. மேலும் இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வை - பை வசதிக்கான, சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிந்து, விரைவில் வை - பை வசதிகள் துவக்கப்படும்' என்றார்.

முதலில் இலவசம்...
முதலில் இந்த வசதி இலவசமாகவும் பின்னர் பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொருத்து கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். முதல்கட்டமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 20 இடங்களில் வை பை வசதி செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications