நீங்களே வச்சிக்கோங்க.. சூரியனார் கோயில் மட பொறுப்பை அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பதாக ஆதீனம் அறிவிப்பு
கும்பகோணம்: கும்பகோணம் சூரியனார் கோயில் மடம் மற்றும் சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டு, தனது உடமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார் ஆதீனம் மகாலிங்க சுவாமி. ஆதீனம் திருமணம் செய்து கொண்டதால் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நிர்வாகத்தை அறநிலையத்துறை வசம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார் சூரியனார் கோயில் மடாதிபதி.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பிரசித்தி பெற்ற சூரியனார் கோயில் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 28வது தலைமை மடாதிபதியாக மகாலிங்க சுவாமி (54) என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், ஹேமா ஸ்ரீ (47) என்ற பெண் பக்தர் ஒருவரை மகாலிங்க சுவாமி திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் பெங்களூரில் கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி திருமணம் செய்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. திருமணத்திற்கான பதிவுச் சான்றிதழும் சமூக வைலதளங்களில் வைரலானது. மடாதிபதி திருமணம் செய்து கொண்டதால் மடத்தின் மாண்பு குறைந்து விட்டதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணம் ஆனவர்களும் ஆதீன மடாதிபதியாக இருந்துள்ளனர். எனவே நான் யாரிடமும் எதையும் மறைக்க விரும்பவில்லை என ஆதீனம் மகாலிங்க சுவாமி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், மகாலிங்க சுவாமிகள் ஆதின மடத்தைவிட்டு உடனே வெளியேற வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமண பந்தத்தில் ஈடுபட்ட அவரால் மடத்தின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் மடத்தை விட்டு ஆதீனம் வெளியேறக் கூடாது எனக் கூறி வரும் நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்த நிலையில், இரு பிரிவினரும் சண்டை போட வேண்டாம் எனக் கூறி மகாலிங்க சுவாமிகள் மடத்திலிருந்து வெளியே வந்து அமர்ந்தார். உடனே எதிர்ப்பாளர்கள் மடத்தின் கேட்டை இழுத்துப் பூட்டி பூட்டு போட்டனர்.
இதனையடுத்து சூரியனார் கோயில் ஆதீனம், மடத்தின் பொறுப்பு மற்றும் சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பதாக எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டார். மடத்தில் இருக்கும் சொத்துகளுக்கு எவ்விதமான அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்ற காரணத்தினாலேயே வெளியே வந்து விட்டதாகவும் மகாலிங்க சுவாமிகள் விளக்கம் அளித்தார்.
மடத்தின் பொறுப்பு மற்றும் சொத்துகளை இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைப்பதாக எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுத்துவிட்டு, மடத்தின் சாவிகளை அறநிலையத்துறை செயல் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு, மடத்தில் இருந்து தனது உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் மகாலிங்க சுவாமி.












Click it and Unblock the Notifications