கமல், மோகன்லாலை மிஞ்சும் தமிழக அமைச்சர்களின் நடிப்பு: குஷ்பு தாக்கு!
திருவண்ணாமலை: நடிகர்கள் கமலஹாசன், மோகன்லாலை மிஞ்சும் அளவுக்கு தமிழக அமைச்சர்கள் நடிப்பு இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு சாடியுள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகை குஷ்பு பேசியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அவ்வளவுதான், அதன் கதை முடிந்து விட்டது என்று பல பேர் கூறினார்கள். ஆனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெற்றுள்ளது.

2016-ல் தமிழகத்தில் காங். ஆட்சி
நான் சரியான கட்சியைத்தான் தேர்வு செய்துள்ளேன். மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வழிகாட்டுதலின்படி அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிப்பது உறுதி.

மோடி முகமூடி கிழியும்
பொய்யான வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்தவர் மோடி. மோடியின் முகமூடி விரைவில் கிழியும் நாள் வரும். மோடி அரசு ஓட்டு போட்ட மக்களுக்கு எதையும் செய்யவில்லை. குறிப்பாக விவசாயிகளுக்கு எதையும் செய்யவில்லை. 2013-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் ஏழை- எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் மோடி அரசு பணக்காரர்கள், பெரும் முதலாளிகளுக்கு நிலத்தை பறித்துக் கொடுக்க வேண்டும் என திருத்தி நில மசோதா சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

பாவமன்னிப்பு மன்றமான நாடாளுமன்றம்
மோடி ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் காணப்படுகிறது. மதவெறி தலைதூக்கி உள்ளது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை. பா.ஜ.க. எம்.பி.க்கள் சிறுபான்மையினர் குறித்து தவறாக பேசி விட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டு வருகிறார்கள். தற்போதைய மத்திய அரசு ஆட்சியில் நாடாளுமன்றம் பாவமன்னிப்பு கேட்கும் மன்றமாக மாறி உள்ளது. சிறுபான்மையினருக்கு பாடுபடும் கட்சி காங்கிரஸ்தான்.

செயல்படாத முதல்வர்
மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு எவ்வித தெளிவான முடிவும் எடுக்கவில்லை. ஆந்திர அரசு 20 தமிழக கூலித்தொழிலாளர்களை சுட்டு கொன்றதற்கு மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் எந்த திட்டங்களும் செய்யப்படவில்லை. மெட்ரோ ரெயில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல இடங்களில் அம்மா உணவகம் பணிகள் முடிந்தும் திறக்கப்படவில்லை. தற்போதைய முதல்வர் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதவில்லை. இறந்து போன குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவில்லை.

அமைச்சர்கள் நடிப்பு
கமலஹாசன், மோகன்லால் போன்ற நடிகர்களை மிஞ்சும் அளவிற்கு தமிழக அமைச்சர்களின் நடிப்பு உள்ளது. தமிழகத்தில் 2016-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி மலரும். நமது பலம் என்னவென்று நாம் வெளிப்படுத்த வேண்டும். தாமரையை பறிக்க ‘கை'யால் மட்டுமே முடியும். அந்த கை ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் தன்னம்பிக்கை. தன்னம்பிக்கையுடன் உழைத்தால் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி.
இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்.












Click it and Unblock the Notifications