அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலையில் மகாதீபம்: லட்சக்கணக்கானோர் தரிசனம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற மகா தீபத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 2,668 அடி உயர மலை உச்சியில் ஜோதிப்பிழம்பாக அண்ணாமலையார் காட்சிதரும் மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலைக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
தேரோட்டம் 14ம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய திருவிழாவான மகா திருவிழா ஞாயிறன்று நடைபெற்றது.

காலையில் பரணி தீபம்
அதிகாலை 2 மணியளவில் அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலை யார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அண்ணாமலையாருக்கு வைரக்கிரீடம் மற்றும் தங்க கவசமும், உண்ணாமுலையம்மனுக்கு தங்க கவசமும் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. அதன்பின்னர், அண்ணாமலையார் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

பக்தர்கள் தரிசனம்
பின்னர் பரணி தீபம் அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு, தீபம் ஏற்றப்பட்டது. பிறகு பக்தர்களின் தரிசனத்துக்காக சொர்ணபைரவர் சன்னதி முன்பு பரணிதீபம் வைக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரணி தீபத்தை தரிசித்தனர்.

அர்த்தநாரீஸ்வரர் தரிசனம்
மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டு விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் என ஒவ்வொருவராக பலிபீடத்தின் அருகே எழுந்தருளினார்கள். அதைத்தொடர்ந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே வந்தார். அவர் காட்சியளித்ததும் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது.

மலையில் மகாதீபம்
அகண்டதீபம் ஏற்றியதும், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. பருவதராஜ குல மரபினர் மகா தீபத்தை ஏற்றினர்.

20 லட்சம் பக்தர்கள்
அப்போது மகா தீபத்தை தரிசிக்க, காத்திருந்த பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என முழக்கமிட்டனர். திருவண்ணாமலை நகர் முழுவதும் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.

பக்தர்களுக்கு பாதுகாப்பு
தீபத்திருவிழாவை முன்னிட்டு, கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளில்லா விமானம், ரகசிய கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

வீடுகள் தோறும் தீபம்
அண்ணாமலையார் கோவிலில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் விளக்கேற்றி வழிபட்டனர்.

சிவ ஆலயங்களில் சொக்கப்பனை
சென்னையில் கபாலீஸ்வரர் ஆலயம், காரணீஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல சிவ ஆலயங்களில் கார்த்திகை தீப விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சொக்கப்பனை கொளுத்தி இறைவனை வழிபட்டனர்.












Click it and Unblock the Notifications