தஞ்சை பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்: வைகோ, அன்புமணி, பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்
சென்னை: தஞ்சாவூரில் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கு பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் பாராளுமன்ற வேட்பாளர்; திரு. கருப்பு (எ) முருகானந்தம் திரு. கருப்பு (எ) முருகானந்தம் திரு. கருப்பு (எ) முருகானந்தம் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தை தஞ்சை மாவட்டம், மல்லிபட்டிணம் கிராமத்தில், வன்முறை எண்ணம் கொண்ட விஷம சக்திகள் தாக்குதல் நடத்தி, தடுக்க முற்பட்டுளள்னர். பா.ஜ.க. வேட்பாளரின் பிரச்சார வாகனத்தையும், உடன் சென்ற பா.ஜ.க செயல் வீரர்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி 30க்கும் மேற்பட்ட பா.ஜ.க தொண்டர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

20க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. வேட்பாளரின் வாகன ஓட்டுனரும், வேட்பாளரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் மல்லிபட்டிணத்தில் விஷம சக்திகளால் நடத்தபட்ட வன்முறை தாக்குதல், பா.ஜ.கவின் தேர்தல் பிரச்சாரத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாகும். தாக்குகுதலை வன்மையாக கண்டிப்பதுடன், வன்முறையாளர் மீது தகுந்த நடவடிக்கையும் எடுக்க தமிழ்நாடு பா.ஜ.க. கேட்டுக்கொள்கிறது.
மல்லிபட்டிணத்தில் பா.ஜ.க. தேர்தலில் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி அளித்திருந்தும் காவல்துறை பாதுகாப்பு போதுமானதாக இல்லாததால் இந்த வன்முறை நடத்திட விஷமசக்திகளுக்கு வாய்ப்பு அளித்துள்ளது, என்று கருதுகின்றோம்.
இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும், இந்தியாவில் எந்த ஒரு பகுதியிலும் வாக்காளர்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது ஜனநாயக உரிமை ஆகும். இதை யாரும் தடுக்க முடியாது. இனி இதுபோன்ற ஜனநாயக விரோத வன்முறை சம்பவங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதாவும் தாக்குதலும்.. வைகோ:
பாஜக வேட்பாளர் முருகானந்தம் மல்லிப்பட்டினத்துக்கு வாக்காளர்களைச் சந்திக்க பிரசாரத்துக்கு சென்றபோது ஊருக்குள் வரக்கூடாது என்று வன்முறையாளர்கள் பலர் தடுத்துள்ளனர். மேலும் பயங்கர ஆயுதங்களுடன் வேட்பாளரையும், அவருடன் வந்தவர்களையும் தாக்கியுள்ளனர். வேட்பாளருக்குக் காயம் ஏற்பட்டு, மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
பாஜகவை கடுமையாக முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார். அதன் பின்னணியில்தான் மல்லிப்பட்டினத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தொடரும் தாக்குதல்கள்- அன்புமணி:
பட்டுக்கோட்டையை அடுத்த மல்லிப்பட்டினம் என்ற இடத்தில் கருப்பு முருகானந்தமும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சியினரும் வாக்கு கேட்டு சென்றபோது, ‘பாரதிய ஜனதாக் கட்சியினர் இப் பகுதியில் வாக்கு சேகரிக்கக் கூடாது' என்று ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும், அப்பகுதியில் வாழும் மக்கள் தங்கள் பகுதியில் வந்து வாக்கு கேட்கும்படி பாரதிய ஜனதா வேட்பாளரை அழைத்துள்ளனர்.
அதையேற்று பாரதிய ஜனதா வேட்பாளர் வாக்கு செகரிக்க முயன்றபோது அங்கிருந்த சிலர், பரப்புரைக் குழுவினர் மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பாரதிய ஜனதா வேட்பாளர் நல் வாய்ப்பாக உயிர் தப்பிவிட்ட போதிலும், அவருடன் சென்ற இருவர் கல்வீச்சில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்களின் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று வாக்கு செகரிக்க அரசியலமைப்புச் சட்டப்படி உரிமை உண்டு. ஒரு பகுதியில் வாக்களிக்க வருமாறு அப்பகுதி மக்களே அழைத்த பிறகும், அப்பகுதியில் வாக்கு கேட்கக் கூடாது என்று ஒருசில அமைப்புகள் தடுப்பதும், வேட்பாளர் மீது கற்களை வீசித் தாக்குவதும் ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். பாரதிய ஜனதா வேட்பாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்திருக்கிறது. பா.ம.கவைச் சேர்ந்த அரக்கோணம் தொகுதி வேட்பாளர் அரங்க. வேலு, ஆரணி வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி, மயிலாடுதுறை வேட்பாளர் க. அகோரம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தருமபுரி தொகுதியில் பரப்புரை மேற்கொண்ட என் மீது பெத்தூர் காலனி என்ற இடத்தில் கல்வீச்சு நடத்தப்பட்டது. இப்போது தஞ்சாவூர் தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் கருப்பு முருகானந்தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
ஜனநாயகத்திற்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்களை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தடுத்து நிறுத்துவதுடன், இதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் இத்தகைய தாக்குதல்களை தடுக்கும் நோக்குடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications