இன்று முதல் போக்குவரத்து போலீஸாருக்கு லெமன் ஜூஸ்.. ஜெ. உத்தரவு
சென்னை: தமிழகத்தில் கோடை காலத்தில் கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்துக் காவல்துறையினருக்கு எலுமிச்சம் பழ ஜூஸ் தருமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. வழக்கமாக மார்ச் மாதத்திலிருந்துதான் வெயில் கொளுத்தும். ஆனால் தற்போது இப்போதே வெயில் ஆரம்பித்து விட்டதால் இன்றே அதைத் தொடங்க உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

இன்றியமையாப் பணியில் போலீஸ்
சட்டம் - ஒழுங்கைப் பராமரித்து, பொது அமைதியை நிலவச் செய்தல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் குற்ற நிகழ்வுகளை தடுத்தல், குற்றங்கள் நிகழும் போது விஞ்ஞான ரீதியான புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனைப் பெற்றுத் தருதல் என பல்வேறு இன்றியமையாப் பணிகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் அச்சம் ஏதுமின்றி பாதுகாப்பு உணர்வுடன் வாழ்வதற்கு காவல் துறையினரின் விழிப்பான பணி பெரிதும் உதவுகிறது.

போக்குவரத்துக் காவலர்கள்
சட்டம் - ஒழுங்கைப் பேணிப் பாதுகாப்பது மற்றும் குற்ற நிகழ்வுகள் தொடர்பான பணிகள் மட்டுமன்றி போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி, சீரான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் சாலையை பயன்படுத்துவோர் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்வதும் காவல் துறையினரின் பணிகளில் ஒன்றாக உள்ளது.

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க
போக்குவரத்துக் காவல் துறையினர் கடும் வெயில் காலங்களிலும், சாலை சந்திப்புகளில் பணி புரிய வேண்டியுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல் துறையினரை பாதுகாக்கும் வகையில், எலுமிச்சம் பழச்சாறு வழங்கும் ஒரு புதிய திட்டத்தை ஜெயலலிதா 2012-ஆம் ஆண்டு அறிவித்தார்.

நிழலுக்குக் கூட ஒதுங்க முடியாத நிலை
2012-ஆம் ஆண்டு நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, "போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது காவல் துறை பணிகளில் முக்கியமான ஒன்றாகும். இப்பணியைச் செய்யும் காவல் துறையினர் கோடைக் காலத்தில் கடும் வெயிலில் சாலைகளிலும், சாலை சந்திப்புகளிலும், நிழலுக்கு ஒதுங்கக் கூட இயலாத இடங்களில் நின்று பணிபுரிய வேண்டியுள்ளது.

2 மணி நேரத்திற்கு ஒருமுறை
இவர்கள் பொதுவாக, ஒரு நாளில் காலையில் நான்கு மணி நேரமும், மதியம் நான்கு மணி நேரமும், வெயிலின் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் பணிபுரிகின்றனர். இவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில், இவர்களுக்கு பணியில் இருக்கும் போது, காலை எட்டு மணி முதல் மாலை நான்கு மணி வரை, உள்ள நேரத்தில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எலுமிச்சம் பழச்சாறு வழங்கப்படும். இது கோடை காலத்தில் நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும். காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர்கள் வரையில் சுமார் 6,500 பேர் இதனால் பயனடைவர் என ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார்.

இலவச மோர்
இதன்படி போக்குவரத்துப் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு கோடை காலத்தில் நான்கு மாதங்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு வழங்கப்படுகிறது. எலுமிச்சம் பழச்சாறு ஒவ்வொரு நாளும் 4 முறை வழங்கப்படுகிறது. எலுமிச்சம் பழச்சாறுக்குப் பதிலாக மோர் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறையினரில் சிலர் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதம் முதல் ஜுன் வரையிலான நான்கு மாத காலத்திற்கு போக்குவரத்து காவலர்களுக்கு அவரவர் விருப்பப்படி எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் வழங்க ஆணையிட்டுள்ளார். இதற்கான அரசாணை 14.12.2015 அன்று வெளியிடப்பட்டது.

இன்று முதல்
இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் தற்போதே ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்துக் காவலர்கள் எவ்வித இடர்பாடும் இன்றி பணி புரியும் வகையில் போக்குவரத்துக் காவலர்களுக்கு வழங்கப்படும் எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் 21.2.2016 முதல் வழங்கும்படி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி இன்று முதல் போக்குவரத்துக் காவலர்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு அல்லது மோர் அவரவர் விருப்பப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications