10ம் வகுப்பு மாணவி பலாத்கார வழக்கு... கோபி இளைஞருக்கு ஆயுள் தண்டனை!
ஈரோடு: பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபி சிலேட்டர் ஹவுஸ் வீதியை சேர்ந்த கூலித் தொழிலாளி தன்சீர் (30). இவர் அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மனைவியுடன் தங்கியிருந்தார். இவர்களது குடியிருப்பில் இன்னும் சில வீடுகள் இருந்தன. ஆனால் அனைத்து வீடுகளுக்கும் சேர்த்து இரண்டே இரண்டு குளியல் அறைகள் மட்டுமே உண்டு. அவற்றைத் தான் அங்கிருந்தவர்கள் அனைவரும் பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி காலையில் அந்தக் குடியிருப்பில் தங்கியுள்ள 10 வகுப்பு மாணவி ஒருவர் குளிக்கச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்குப் பின் குளியலறையில் இருந்து வெளியே வந்த அம்மாணவி அழுது கொண்டே சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாணவியிடம் அக்கம்பக்கத்தார் நடத்திய விசாரணையில், குளியலறையில் வைத்து அவரை தன்சீர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. மேலும், ஏற்கனவே பலமுறை இவ்வாறு தன்சீர் அம்மாணவியை மிரட்டி குளியலறையில் வைத்து பலாத்காரம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தன்சீர் மீது கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தன்சீரைக் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின் முடிவில் தன்சீரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனை, 5,000 ரூபாய் அபராதம், கொலை மிரட்டல் விடுத்ததற்காக, ஏழு ஆண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி என்.திருநாவுக்கரசு தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், அபராத தொகைகளை செலுத்த தவறினால், தலா இரண்டு ஆண்டு காலம் மேலும் சிறை தண்டனை என உத்தரவிட்ட நீதிபதி, இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications