பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்… பக்தர்கள் பிரியாவிடை

Subscribe to Oneindia Tamil

மதுரை: தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக அழகர்மலையைவிட்டு மதுரைக்கு வந்த அழகர், இன்று அதிகாலையில் மதுரை தல்லாகுளத்தில் இருந்து பூப்பல்லக்கில் மீண்டும் மலைக்குப் புறப்பட்டார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

முந்தைய காலங்களில் வெவ்வேறு மாதங்களில் நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவையும், அழகர் கோவில் சித்திரை திருவிழாவையும் சைவ, வைணவ மதத்தின் ஒற்றுமைக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் இந்த 2 விழாக்களையும் ஒரே மாதத்தில் அதாவது சித்திரை மாதத்தில் நடத்த அப்போது மன்னராக இருந்த திருமலை நாயக்கர் முடிவு செய்தார்.

அதன்படி இந்த இரண்டு கோவில்களின் சித்திரை திருவிழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெற்று வருகிறது. மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து அழகர்கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது.

வைகையில் இறங்கி

வைகையில் இறங்கி

அழகர்கோவில் மலையில் இருந்து அதிர்வேட்டுகள் முழங்க கடந்த சனிக்கிழமை புறப்பட்ட கள்ளழகர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் திருவிழாவாக கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் திங்கட்கிழமை வைகை ஆற்றில் எழுந்தருளினார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கள்ளழகரை தரிசித்தனர்.

தீர்த்தவாரி

தீர்த்தவாரி

வைகை ஆற்றில் இருந்து கள்ளழகர் வண்டியூர் நோக்கி புறப்பட்டார். வழியில் ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அங்கு கள்ளழகரின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து அழகரின் வெப்பத்தை தணிக்கும் வகையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பீய்ச்சி அடித்து தீர்த்தவாரி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

மாண்டூக முனிவருக்கு சாப விமோசனம்

செவ்வாய்கிழமையன்று அண்ணாநகர் வழியாக வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு சென்று தங்கினார். கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்ட கள்ளழகரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து மாலையில் வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் மற்றும் நாரைக்கு முக்தியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அது என்ன சாபம்?

அது என்ன சாபம்?

புராண காலத்தில் சதபஸ் முனிவர், வைகை ஆற்றில் குளித்த போது அச்சமயம், துர்வாசர் முனிவர் அங்கே வர, அவரை காணாதது போல் இருந்தார் சதபஸ். உடனே துர்வாசருக்கு கோபம் வந்து, ' சதபஸ்... உன் அலட்சிய மனோபாவத்தால் நீ மண்டூகமாக (தவளையாய்) இந்த நதியில் மூழ்கிக்கிட. எப்போது பெருமாள் இந்த ஆற்றில் கால் வைக்கிறாரோ, அப்போது அவரது திருவடி பட்டு மோட்சம் அடைவாய்...' என்று சாபமிட்டார். அவருக்கு சாப விமோசனம் அளிக்கவே, வைகை ஆற்றில் கள்ளழகர் கோலத்தில், சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்வதாக ஐதீகம்.

தசாவதார கோலத்தில்

தசாவதார கோலத்தில்

இதனை தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் எழுந்தருளியவாறு, மதிச்சியத்தில் உள்ள ராமராயர் மண்டபத்துக்கு செவ்வாய்கிழமை இரவு கள்ளழகர் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10 அவதார கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், கிருஷ்ண அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரங்களில் காட்சி அளித்தார் கள்ளழகர். மோகினி அவதாரத்தில் அதிகாலை காட்சி அளித்தார். அப்போது திரளான பக்தர்கள் ராமராயர் மண்டகப்படியில் குவிந்து தரிசனம் செய்தனர்.

பூப்பல்லக்கில் புறப்பட்டார்

பூப்பல்லக்கில் புறப்பட்டார்

இதனை தொடர்ந்து நேற்று மாலை ராமராயர் மண்டகப்படியில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி ஆழ்வார்புரம், மூங்கில்கடைவீதி வழியாக தல்லாகுளம் வந்து நேற்று இரவு சேதுபதி மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று வியாழக்கிழமை அதிகாலை அழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளி கருப்பணசுவாமி கோவில் சன்னதியில் வையாழி ஆனதும் மலையை நோக்கி புறப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

வழியனுப்பு விழா

வழியனுப்பு விழா

இன்று பிற்பகல் புதூர், மூன்றுமாவடி வழியாக சுந்தராஜன்பட்டி சென்றடைந்து அங்குள்ள மறவர் மண்டகப்படியில் இன்று இரவு சென்றடைகிறார். அழகர் மதுரை வரும்போது எப்படி எதிர்கொண்டு அழைக்கின்றனரோ அதேபோல அவர் மலைக்கு திரும்பும் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழியனுப்புவது கண்கொள்ளா காட்சியாகும்.

சித்திரை திருவிழா நிறைவு

சித்திரை திருவிழா நிறைவு

நாளை 8ம் தேதி அதிகாலையில் திருமஞ்சனமாகி கள்ளழகர் திருக்கோலத்துடன் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். அப்பன்திருப்பதி வழியாக கள்ளழகர் புறப்பாடாகி காலை 9 மணியளவில் கோவிலை சென்றடைகிறார். நாளை மறுநாள் 9ம் தேதி அழகருக்கு அங்கு உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அத்துடன் அழகர் கோவில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. இனி அழகர் மதுரைக்கு வர ஒரு வருஷம் ஆகுமே என்பது மதுரைவாசிகளின் ஏக்கமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+