சொகுசு கார் இறக்குமதி மோசடி: 23 ஆண்டு வழக்கில் சிறை செல்லும் சசி கணவர் நடராஜன்
சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது ஹைகோர்ட்.
Recommended Video

சென்னை: 23 ஆண்டுகளுக்கு முன்பு செய்த தவறுக்காக இப்போது சிறைக்கு செல்லப்போகிறார் சசிகலா கணவர் நடராஜன்.
சொகுசு கார் இறக்குமதி செய்து மோசடி செய்த வழக்கில் சசிகலா கணவர் நடராஜன், டிடிவி தினகரன் சகோதரர் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.
1994ம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி லண்டனில் இருந்து புத்தம் புதிய லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்தார் நடராஜன். நடராஜன் தனது தமிழரசி பப்ளிகேஷன் நிறுவனம் சார்பில் இதை வாங்கினார்.

கார் இறக்குமதி மோசடி
3,000 சி.சி. என்ஜின் திறன் கொண்ட இந்தக் கார் பல கோடி மதிப்புடையது. இந்தக் காரின் ஆவணங்களி்ல் அது 1993ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகவும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் என்றும் குறிப்பிடப்பட்டு குறைவான வரி கட்டப்பட்டது.

போலி ஆவணங்கள்
ஆனால், சந்தேகமடைந்ச சுங்கத் துறையினர் விசாரணை நடத்தியதில் அந்தக் கார் 1994ல் தயாரிக்கப்பட்ட, புத்தம் புதிய கார் என்பதும், வரி ஏய்ப்பு செய்வதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து பழைய கார் போல காட்டியதும் தெரிய வந்தது. இதன் மூலம் அரசுக்கு ரூ.1 கோடியே 6 லட்சத்து 20 ஆயிரத்து 412 இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்தது.

சுங்கத்துறை வழக்கு
இதையடுத்து நடராஜன், தமிழரசி பப்ளி கேஷன் நிர்வாகியான ஜெ.ஜெ.டிவி நிர்வாகியாக இருந்த சசிகலாவின் அக்காள் மகனும் தினகரன் சகோதரருமான டிடிவி பாஸ்கரன், காரை அனுப்பிய லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகேஷ், அயல்நாட்டு வர்த்தக சான்றிதழ் வழங்கிய சென்னை அபிராமிபுரம் இந்தியன் வங்கி மேலாளர் சுஜரிதா சுந்தர்ராஜன், உதவி மேலாளர் பவானி ஆகியோர் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

சிபிஐ கோர்ட் தீர்ப்பு
சிபிஐ விசாரணையின்போது பவானி அரசுத் தரப்பு சாட்சியாக மாறினார். பாலகிருஷ்ணன் தலைமறைவாகி விட்டார். எனவே நடராஜன், வி.என்.பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜாதா ஆகிய 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் நீதிபதி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி ரவிந்திரன் தீர்ப்பளித்தார். பாலகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டதால் அவர் மீதான வழக்கு தனியே பிரிக்கப்பட்டு விட்டது.

2 ஆண்டு சிறை தண்டனை
நீதிபதி தனது தீர்ப்பில், வெளிநாட்டு கார் இறக்குமதி வரி ஏய்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.நடராஜன், வி.என். பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், சுஜரிதா சுந்தர்ராஜன் ஆகிய 4 பேர் மீதும் கூட்டு சதி, மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், வரி ஏய்ப்பு மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

தீர்ப்பு சொன்ன நீதிபதி
இவை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 2 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. இவற்றை ஏக காலத்தில் (இரண்டு ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும். தண்டனை பெற்ற 4 பேரில் நடராஜன், பாஸ்கரன், சுஜரிதா சுந்தர்ராஜன் ஆகியோர் தலா ரூ. 20 ஆயிரமும், யோகேஷ் பாலகிருஷ்ணன் ரூ. 40 ஆயிரமும் அபராதம் செலுத்த வேண்டும்.
இதைக் கட்டத் தவறினால் நடராஜன் உள்ளிட்ட 3 பேர் மேலும் மூன்று மாதமும் யோகேஷ் பாலகிருஷ்ணன் மேலும் 6 மாதமும் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

கார சார வாதம்
இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன், டிடிவி பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேரும் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்தனர். கடந்த ஏழு ஆண்டுகாலமாக நடந்த வழக்கில் இறுதி விசாரணை நவம்பர் 1ஆம் தேதியன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முறையான நடைமுறைகளைப் பின்பற்றியே கார் இறக்குமதி செய்யப்பட்டதாக நடராஜன் உள்ளிட்ட 4 பேரில் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
ஆனால் சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ, புதிய காரை பழைய கார் என்று கூறி இறக்குமதி செய்துள்ளனர் எனவே சிபிஐ நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்னர் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

சிறை தண்டனை உறுதி
இன்று இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வரி ஏய்ப்பு புகாரில் சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. இதனையடுத்து சசிகலா கணவர் நடராஜன், தினகரன் சகோதரர் டிடிவி பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேரும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பது உறுதியாகியுள்ளது. 23 ஆண்டுகாலத்திற்கு முன்பு செய்த தவறுக்கு இப்போது தண்டனை அனுபவிக்கப் போகிறார் நடராஜன்.












Click it and Unblock the Notifications