மதுரையின் "லேட்டஸ்ட் டிரென்டிங்"... ஹேப்பி பர்த்டே தாத்தா....!
மதுரை: இதோ வந்தே விட்டது மதுரையின் தைத் திருவிழா.. அதுதாங்க மு.க.அழகிரி பிறந்த நாள். விடிஞ்சா பிறந்த நாள்.. அதாவது நாளை அழகிரியின் பிறந்த நாள். வழக்கம் போல விமரிசையாக கொண்டாட ஆரம்பித்துள்ளனர் அழகிரியின் உடன்பிறவா சகோதரர்கள்.
வழக்கம் போல போஸ்டர் கலக்கல், வார்த்தை அசத்தல்கள், உவமான, உவமேய உளறல்கள் என உற்சாகத்துடன் சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன ஆதரவாளர்களின் போஸ்டர்கள்.
விதம் விதமான வாசகங்களுடன் வார்த்தை பாதி.. வாழ்த்து மீதி என்று விளங்க முடியாத கவிதையாக மதுரைக் காற்றை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அழகிரியின் அடி விழுதுகள்.

பெஸ்ட்டா கொண்டாடுறோம்...ஓ.கே!
திமுகவிலிருந்து வெளியேறியபோது இருந்த முறுக்கு இப்போது அழகிரியிடம் இல்லை. மீண்டும் கட்சியில் இணைய ஆசைப்படுகிறார். ஆனாலும் வீராப்பையும் குறைக்கவில்லை. அதை வெளிப்படுத்த இந்த பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டுள்ளாராம்.

அடிச்சுத் தூள் பண்ணனும்
வழக்கம் போல இந்த முறையும் பிறந்த நாளை அபாரமாக கொண்டாட வேண்டும் என்றும் ஆதரவாளர்களுக்கு ஆர்டர் போயுள்ளதாம்.

வழிநெடுக வரவேற்பு தரணும்
பிறந்த நாளை வழக்கம் போல ராஜா முத்தையா மன்றத்தில் தாம் தூமாக கொண்டாடவுள்ளனர். விழாவுக்காக தனது வீட்டிலிருந்து மண்டபத்திற்கு வரும் வழியெங்கும் பிரமாதமான வரவேற்பு தரவும் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனராம்.

அவ்வளவு பேரும் அசெம்பிளி ஆகணும்
இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனது ஆதரவாளர்களும், தனக்கு ஆதரவாக உள்ள திமுகவினரும் ஒருவர் விடாமல் வர வேண்டும் என்றும் அன்புக் கட்டளை பிறப்பித்துள்ளாராம் அழகிரி.

புளிச் புளிச் போஸ்டர்கள்!
போஸ்டர்களும் வழக்கம் போல புளிச் புளிச் என புன்னகைத்தபடி காட்சி தருகின்றன மதுரை சுவர்களில்.

போட்டியிடுவது பலர் மடமை
முதல் போஸ்டரைப் பார்ப்போம். மு.க.அழகிரி பதவியேற்பது போல ஒரு படம். அதற்கு மேலே போட்டியிடுவது பலர் மடமை.. அரியனை என்றும் உங்கள் உடமை என்று பன்ச் வைத்துள்ளனர்.

சைடுல என்ன போட்டிருக்கு
பக்கவாட்டில் பெயர் மு.க.அழகிரி, வயது 65, ஆண்டு 2016,. பதவி முதலமைச்சர், தமிழ்நாடு என்று போட்டு வைத்துள்ளனர்.. இந்தப் போஸ்டருக்கு ஸ்பான்சர் ப.கோ. பிரபாகரன். தம்பி, அழகாக சிரத்தபடி போஸ் தருகிறார்!

ஹேப்பி பர்த்டே தாத்தா
அடுத்த போஸ்டரை கரிமேடு பாலா, ஏ.கே.கண்ணன், ஜெகதீசன் என மூன்று வக்கீல்கள் அடித்துள்ளனர். அதில், ஹேப்பி பர்த்டே தாத்தா என்று வாசகம்.. குட்டிப் பாப்பா கையில் ரோஜாப் பூவோடு வாழ்த்து சொல்வது போல... அந்தக் குட்டிப் பாப்பா யார் பெத்த புள்ளைன்னு தெரியலை!

குடைவீடு அருண்குமாரின் குபீர் போஸ்டர்!
குடைவீடு எஸ்.எம்.ஆர். அருண்குமார் ஒரு போஸ்டர் போட்டிருக்கிறார். இவர் ஒரு கவுன்சிலர். மு.க.அழகிரி மக்கள் நற்பணி இயக்கம் சார்பில் இந்த போஸ்டர். அதில் குளம் தேடும் கொக்கு அல்ல நாங்கள். விலை போக மாட்டோம்.. வீரத்துடன் வீற்றிருப்போம் என்று வாசகம் போட்டுள்ளனர்.

இது ஒரு இளம் புயலின் போஸ்டர்!
இன்னொரு போஸ்டர் இப்படிக் கூறுகிறது. ஓர் முக்கிய அறிவிப்பு. மதுரையில் மையம் கொண்டுள்ள புயல் (அழகிரி) சில மாதங்களில் தமிழகத்தைக் கலக்கும். திமுக தொண்டர்களால் எதிர்பார்க்கப்படுகிறது என்று போட்டுள்ளனர். இதைப் போட்டிருப்பவர் திடீர் நகர் தளபதி எம்எஸ். ஆனந்த் என்பவர்.

வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு!
மதுரை மக்களுக்கு பொழுது போக்க சினிமா தியேட்டர், வண்டியூர் கண்மாய், தெப்பக்குளம் என்பதெல்லாம் போய் ரொம்ப காலமாச்சு.. வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரை சுற்றி வந்து ஒரு சுவர் விடாமல் போஸ்டரைப் படித்தாலே போதும்.. "ஜி.கே." வளர்ந்துரும்.. பொழுதும் நல்லாவே போகும்...!












Click it and Unblock the Notifications