சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் தான் நாட்டிலேயே முதல் இடம்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
திருப்பூர் : சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், குற்றங்கள் குறித்து காவல்துறைக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை 4 லட்சமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு வகை குற்றங்களை பட்டியலிட்டு ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தின் தற்போதைய நிலையை மாற்ற வேண்டும். காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்.
தமிழக காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காவல்துறையில் அரசியல் தலையீடு அறவே ஒழிக்கப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்காது.
அதிமுக ஆட்சியில் கண்மாய், கால்வாய்கள் தூர் வாரப்படவில்லை. அணைகளை தூர்வார பசுமை தீர்ப்பாயத்தை நாட வேண்டியுள்ளது. மதுவிலக்கு தொடர்பாக திமுக மீது அதிமுக அரசு வீண்பழி போடுகிறது. காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு ஒரு இரங்கல் கூட ஜெயலலிதா தெரிவிக்கவில்லை.
கலைஞர் கொண்டு வந்த மதுவிலக்கை ரத்து செய்தது அதிமுக ஆட்சி. மாணவர்கள், பெண்கள் மது அருந்துவது டிவியில் ஔிபரபபு செய்யப்பட்டது. இதனையடுத்து திமுக ஆட்சியில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கலைஞர் அறிவிப்பு வெளியிட்டார்.
சசிபெருமாள் மரணத்தை போலீசார் வேடிக்கை பார்த்தனர். இதனால் நீதிவிசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறோம். தி.மு.க.,வின் மதுவிலக்கு போராட்டத்தை தடை செய்ய அதிமுக அரசு முயற்சி செய்கிறது. தி.மு.க., ஆட்சி வந்ததும் மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இளைஞர்கள் வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் அவல நிலையில் உள்ளனர். தி.மு.க., ஆட்சியில் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பணி நியமன சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்தது. பல ஆயிரம் பேர் வேலைக்காக காத்திருக்கின்ளறனர். அ.தி.மு.க., ஆட்சியில் புதிய வேலை வாய்ப்பு ஏதும் இல்லை. புதிய தொழில்கள் உருவாக்கம் இல்லை. புதிய முதலீடுகள் இல்லை. ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன.
உலக முதலீட்டாளர் மாநாட்டிற்காக தொழிலதிபர்கள் மிரட்டப்படுகின்றனர். முதல்வரை புகழ வேண்டும் எனவும் தொழிலதிபர்களிடம் கூறப்பட்டுள்ளது. மின் பிரச்சினை தமிழகத்தில் சரிசெய்யப்படவில்லை. முதலீட்டாளர்களை கவர முழுநேர முதல்வர் தேவை. உடனுக்குடன் முடிவெடுக்க பப்ளிக் சர்வன்ட் தேவை. ஜெயலலிதா ஒரு மணி நேர முதல்வராக உள்ளார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பசுந்தேயிலைக்கு மானியம் பெற்றுத் தருவோம். தி.மு.க., ஆட்சியில், திருப்பூர் ஏற்றுமதி மண்டலமாக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது. நெசவாளர்களுக்கான சென்வாட் வரி ரத்து செய்யப்பட்டது என கூறினார்.
மேலும், சாயப்பட்டறை கழிவுநீர் பிரச்னையை அ.தி.மு.க., அரசு தீர்க்கவில்லை. விதி எண் 110 ன் கீழ் அறிவித்த திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. 110 வது விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் ஏமாற்றுவேலை. கோவையில் மோனோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது. சட்டசபையில் சொல்ல முடியாததை மக்கள் மன்றத்தில் சொல்ல வந்துள்ளோம்.
இவ்வாறு திருப்பூர் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications