தமிழகத்தின் நிதி நிலைமை சீர்குலைவு பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்… ஸ்டாலின் கவலை
தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் சீர்குலைந்துள்ளது என்றும் அதுகுறித்து அறிக்கை மிகவும் கவலை அளிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த அளவுகோல்கள் சீர்குலைந்து வருவதை நிதி நிலைமை தொடர்பான ஆய்வு அறிக்கை மூலம் தெரிகிறது என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த 6 மாதங்களாக முற்றிலும் செயல்படாத அரசாக அதிமுக அரசு செயல்படுவதால் நிதிநிலை மிகவும் சீர்கெட்டுக் கிடக்கிறது என்று கவலை தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
2017 ஆம் ஆண்டின் ஆளுநர் உரைக்காக கூட்டப்பட்ட சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளான பிப்ரவரி 1ம் தேதியன்று "2016-2017 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையின் வரவு மற்றும் செலவு குறித்த ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போதைய முதல்வராக பதவி வகித்த திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பெயரில் வெளியிடப்பட்டது.

மழைக்காலக் கூட்டத் தொடர்
இந்த இடைக்கால ஆய்வு அறிக்கை (Interim Review) தமிழ்நாடு நிதி நிலை பொறுப்புச் சட்டம், 2003-ன் படி தேவைப்படுகிறது. அந்த ஆய்வில் கடந்த நிதியாண்டு ('15 - '16) செயல்பாடுகள் குறித்த சில திருத்தப்பட்ட மதிப்பீடுகளும் (கடந்த பட்ஜெட்டிற்கு பிறகு முதல்முறையாக வெளியிடப்பட்டது), நிதி நிலை இலக்கில் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாத கால (ஏப்ரல் 1, 2016 முதல் செப்டம்பர் 30, 2016 வரை) நிதி செயல்பாடுகளும் ஒப்பீடு செய்யப்பட்டிருந்தது. வழக்கமாக இந்த அறிக்கையானது முன் கூட்டியே சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். - குறிப்பாக நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் இந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடரை அதிமுக அரசு கூட்டவே இல்லை.

நிலை குலைந்த நிதிநிலைமை
இந்த ஆய்வு அறிக்கை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டது என்பதைவிட அதில் அடங்கியுள்ள விவரங்கள் தான் கவலையளிக்கிறது. நிதி நிலைமை செம்மையாக இருப்பதற்கான அடையாளங்கள் அனைத்தும் முதல் ஆறு மாதங்களில் எந்த அளவிற்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. உதாரணமாக வருவாய் வரவு (பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட குறைவு), வருவாய் பற்றாக்குறை (பட்ஜெட்டில் கோடிட்டு காட்டப்பட்டதை விட மிக அதிகம்), மூலதன முதலீடு (பட்ஜெட்டில் மதிப்பீடு செய்யப்பட்டதை விட குறைவு) - என மாநிலத்தின் நிதி நிலைமை குறித்த அளவுகோல்கள் சீர்குலைந்து வருவதை அந்த ஆய்வு அறிக்கை மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

வங்கியில் பணமில்லை
இதே காலகட்டத்தில் மாநில நிதி நிலைமை குறித்து அச்சுறுத்தும் வகையிலான செய்திகள் வெளிவரத் தொடங்கின. கொள்முதல் செய்ய பணமில்லை என்பதால் ரேசன் கடைகளில் பருப்பு, பாமாயில் இல்லை என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. பயணப்படி, மருத்துவ செலவுகள் போன்றவற்றிற்காக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை செயலகத்தின் மூலம் கொடுக்கப்பட்ட காசோலைகள் வங்கிகளில் பணமில்லாமல் திரும்பி வந்ததாக தகவல் வெளிவந்தது. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியங்கள் நிதியில்லாத காரணத்தால் தாமதம் செய்யப்படுகின்றன என்ற செய்திகளும் வெளியிடப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கே இந்த நிலைமை என்றால், முதியோர் உதவித்தொகை போன்றவற்றை வாங்கும் ஏழை எளிய மக்களுக்கு எவ்வளவு சிரமங்கள் உருவாகியிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.

கவலை
இந்த செய்திகள் எல்லாம் மாநில நிதி பற்றிய முன்னெச்சரிக்கை சமிக்ஞைகளாக இருந்ததால், பொருளாதார நிபுணத்துவம் பெற்றவர்களை வைத்து மாநிலத்தின் நிதி நிலைமை பற்றி ஆய்வு செய்ய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அறிவுறுத்தினேன். அந்த ஆய்வில் வெளிவந்துள்ள விஷயங்களைப் பார்த்தால் மாநில நிதி நிலைமை பற்றி பெரிய கவலையை எவருக்கும் ஏற்படுத்தும்.

பற்றாக்குறை
1) இந்த நிதியாண்டில் (2016-17) கணிக்கப்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறை ரூ. 15,855 கோடி என்பது "நிதி பொறுப்புச் சட்டம்" அறிமுகப்படுத்தப்பட்ட 2003-ம் ஆண்டில் இருந்து கடந்த 13 ஆண்டுகால ஒட்டுமொத்த வருவாய் பற்றாக்குறையை விட அதிகமாக இருக்கிறது. இந்த இடைக்கால ஆய்வு அறிக்கையின்படி (பிப். 2017) பார்த்தால் பற்றாக்குறையானது கணக்கிடப்பட்டுள்ள தொகையை விட மிக அதிகமாக இருக்கும். ஏனென்றால், முதல் ஆறு மாத காலத்திலேயே ரூ. 13,804 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. (இது முழு ஆண்டின் பட்ஜெட்டில் 87% சதவீதம்).

முடங்கிப் போன அரசு
2) பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பருவ மழை பொய்த்ததால் கடும் வறட்சி, வர்தா புயல், எண்ணுர் எண்ணெய் விபத்து என இயற்கை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட இரண்டாவது அரையாண்டு (அக்டோபர் '16 முதல் மார்ச் '17 வரை) மிக மோசமானதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதலமைச்சர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் ஜல்லிக்கட்டு போராட்டம் வரையும், கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு முதல்வர்கள் மாற்றம் என அரசு நிர்வாகம் ஏற்கனவே முடங்கி இருந்ததை விட மேலும் முடங்கி தேக்க நிலையை அடைந்துவிட்டதால் ஏற்பட்ட பெரும் பின்னடைவுகளையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்கால வளர்ச்சி
3) ஓரளவு உகந்த காலமாக இருந்த முதல் அரையாண்டிலேயே நிர்ணயிக்கப்பட்ட மூலதன முதலீடான ரூ. 24,679 கோடியை எட்டவில்லை. அதற்கு பதில் மிக குறைவாக ரூ. 5,166 கோடி (வருடாந்திர பட்ஜெட்டில் 21%) மட்டுமே மூலதன முதலீடாக பெறப்பட்டுள்ளது. இது நிச்சயமாக எதிர்கால வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

வீடியோ வெளியீடு
4) இறுதியாக, அந்த அறிக்கையை மிகப் பொறுமையாக வாசித்தப் பின் கடன் மற்றும் வட்டி செலவினங்களிலும் சில நீண்ட கால மாற்றங்கள் இருப்பதை உணர்த்துகிறது.
மாநிலத்தின் நிதி வரலாறு மற்றும் அதிமுக ஆட்சியில் சரிந்து வரும் தற்போதைய ஆபத்தான நிதிச் சூழலைத் தமிழக மக்களுக்குத் தெரிவித்திடும் பொறுப்பு இருப்பதால் இன்று இந்த அறிக்கையை வெளியிடுகிறேன். மேலும், சட்டமன்ற உறுப்பினர் முனைவர் திரு.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இந்த அறிக்கையை 5 பாகங்களாக விவரிக்கும் சிறு வீடியோ தொடர்களையும் (ஒவ்வொன்றும் 6லிருந்து 10 நிமிடங்கள் ஓடும்) வெளியிடுகிறார்.

அந்த 5 பாகங்களில்:
1. நிதி நிலை அறிக்கையை எப்படி பகுத்தாய்வது?
2. பொறுப்புமிக்க நிதி மேலாண்மையின் சிறப்புகள்
3. கடந்த பத்து வருட வருவாய் கணக்கின் செயல்பாடு குறித்து பகுப்பாய்வு
4. கடந்த பத்து ஆண்டுகளின் நிதி கணக்கு செயல்பாடு குறித்து பகுப்பாய்வு
5. தற்போதையை நிதி நிலவரமும், முடிவுகளும்.
இந்த அறிக்கையை போலவே, வீடியோக்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

அராஜக அணுகுமுறை
தமிழக வரலாற்றில் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் என்ற முறையில், சட்டமன்றத்தில் நடைபெறும் விவாதங்களின் தரத்தை உயர்த்தும் கடமையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் என்ற முறையில் மாநிலத்தின் நிதி நிலையை தமிழக மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கும் பொறுப்பும் எனக்கு உள்ளது. ஏற்கனவே பட்ஜெட் விவாதம் குறித்த சட்டமன்ற கூட்டத்தொடரை ஐந்து நாட்களாக குறைத்த அதிமுக அரசு, இப்போது பட்ஜெட் கூட்டத் தொடரிலும் விவாதத்தை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்படி ஒருவேளை நேர்ந்தால் இதை ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் இந்த அரசு மற்றும் பேரவைத் தலைவரின் அராஜக அணுகுமுறையாகவே நான் கருதுகிறேன். ஆகவே இந்த அறிக்கை, 16.3.2017 அன்று தொடங்க இருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் மீதான விவாதப் பொருளின் உள்ளடக்கத்தை செழுமைப் படுத்திட , உயர்த்திட உதவும் என்று நம்புகிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications