அதிமுக அரசுக்கு சென்னை குடிநீர் பிரச்சனை புரியாது.. மு.க. ஸ்டாலின் காட்டம்

சென்னையில் நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை அதிமுக அரசுக்கு புரியாது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வரலாறு காணாத அளவில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும். சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறை பிரச்சனை குறித்து ஆளும் அதிமுக அரசிற்கு புரியாமல் இருக்கிறது என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. மாநகரின் பல பகுதிகளில் அதிகாலையில் குடிநீர் கிடைப்பதில்லை. வட சென்னையில் கிடைக்கும் குடிநீரும் பல இடங்களில் சாக்கடை கலந்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். கொளத்தூர் தொகுதி மக்களும் இது போன்ற குற்றச்சாட்டுகளை சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னிடம் தெரிவித்து வருகிறார்கள். உள்ளாட்சி அமைப்புகள், மொத்த நுகர்வோர், தொழிற்சாலைகள் என மொத்தம் 67.27 லட்சம் மக்களுக்கு சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் குடிநீர் வழங்கி வருகிறது.

M.K. Stalin slams ADMK's government

கழக ஆட்சி இருந்த போது மீஞ்சூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டது. ஆந்திர மாநில அரசை வலியுறுத்தி நான் முதன் முதலில் சென்னை மாநகர மேயராக இருந்த போது கிருஷ்ணா நீர் பெறப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் கடந்த ஆறு வருடத்தில் சென்னை மாநகரத்தின் குடிநீர் ஆதாரங்களை பெருக்குவதற்கு எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மக்களுக்கு லாரிகளில் குடிநீரை சப்ளை செய்து விட்டாலே தங்கள் பணி நிறைவு பெற்று விட்டதாக எண்ணும் அதிமுக அரசு, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் குறித்து வெற்று "110 அறிவிப்புகளை" வெளியிட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்க நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டால் இன்றைக்கு சென்னை மாநகர மக்கள் வரலாறு காணாத வகையில் குடிநீர் பற்றாக்குறையை சந்திக்கும் அவல நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

சென்னை மாநகரத்திற்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு குறைந்து தற்போது ஒரு டி.எம்.சி தண்ணீர் மட்டுமே ஏரிகளில் கையிருப்பு இருக்கும் மிக மோசமான நிலை ஏற்பட்டு விட்டது. சென்னை மாநகருக்கு வர வேண்டிய 12 ஆயிரம் கன அடி கிருஷ்ணா நீரை ஆந்திர மாநிலம் திறந்து விட வேண்டும். இந்த ஒப்பந்தப்படி சென்னை மாநகரத்திற்கு ஆந்திர மாநிலம் முழு அளவு தண்ணீரை திறந்து விடுவதில்லை. இதற்கிடையில் கடந்த அக்டோபர் முதல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நீரை திறந்து விடுவதாக அறிவித்தது. ஆனால் அப்படி திறந்து விட்ட தண்ணீரும் வழியில் ஆந்திர மாநில விவசாயிகளால் உறிஞ்சி இழுக்கப்பட்டதால், இதுவரை சென்னை மாநகரத்திற்கு 336 மில்லியன் கன அடி கிருஷ்ணா நீர் மட்டுமே கிடைத்துள்ளது. அதையும் கூட இப்போது ஆந்திர மாநில அரசு நிறுத்தி விட்டது. இது பற்றி தமிழக அரசின் அதிகாரிகளோ, துறை அமைச்சரோ கவலைப்படவில்லை. ஆந்திர மாநில அரசுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சென்னைக்கு கிடைக்க வேண்டிய நீரைப் பெறவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சென்னை மாநகர மக்கள் குடிநீருக்கு கடுமையாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் வேலுமணி தஞ்சாவூர் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரக் கவனம் செலுத்தி வருகிறார். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் வறண்டு கொண்டிருப்பதைப் பார்த்த பிறகும் கூட அதிமுக அமைச்சருக்கோ, அரசுக்கோ இப்பிரச்சினையின் முக்கியத்துவம் புரியவில்லை. குறைந்த பட்சம் அறிவித்த கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை செயல்படுத்தி, குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளை தூர் வாரி, மழை காலங்களில் கிடைக்கும் உபரி நீரை சேமித்து வைக்க அதிமுக அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் சென்னை மாநகர மக்கள் இப்படியொரு குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய அவசியமே நேர்ந்திருக்காது.

ஆகவே அமைச்சர்கள் இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தாலும், தலைமை செயலாளர், நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளர், சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆந்திர மாநிலத்திலிருந்து 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரைப் பெற வேண்டும். சென்னை மாநகர குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்திலிருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சென்ற ஆண்டு செயற்கைப் பேரிடரால் ஏற்பட்ட வெள்ளத்தால் வடித்த விழிநீர் காய்வதற்குள், இந்த ஆண்டு ஆட்சியாளரின் அலட்சியத்தால் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்று சென்னை மாநகர மக்கள் சிந்தை கலங்கித் திகைத்திருக்கின்றனர். "நீரின்றி அமையாது உலகு" என்று அய்யன் திருவள்ளுவரின் குரலுக்கு ஏற்ப, சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு போர்க்கால நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டியது முதல் கடமை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+